1978 – மதிகண்ணன்
-1-
முதலில் பாலை மனோதான் என்னிடம்
இதுபற்றிக் கேட்டான்.
“ஏம்ப்பா… நீ பெரியபத்து பாஸுதானே?”
வீட்டில் சின்னதாக எலெக்ரிக்
வேலை இருந்ததால், ஜாமான் வாங்குவதற்காக கடைக்குச் சென்றிருந்தேன். கடையில் கொஞ்சம்
கூட்டமாக இருந்ததது. கடைக்காரரின் நண்பன் என்பதால் கடைக்குள் உட்கார்ந்திருந்த பாலை
மனோ கடையில் நின்ற பலர் மத்தியில் இப்படிக் கேட்டதால் எனக்குக் கோபம்தான் வந்தது. பாலை
மனோவின் பெயரில் உள்ள பாலை அவன் பாலாய்ப் போனவன் என்பதால் வந்ததல்ல. அவன் ஊர்ப் பெயரின்
சுருக்கம். படிக்கிற காலத்தில் வைத்த பெயர். பள்ளிப் படித்து முடித்துவிட்டு ஒரு மில்லில்
வேலைக்குச் சேர்ந்தான். முப்பது ஆண்டுகள் சர்வீஸ் முடித்துவிட்டு, இப்போது 850 ரூபாய்
பென்சன் வாங்கிக் கொண்டு, ரியல் எஸ்டேட் பார்க்கிறான். மில் வேலையில் இருந்ததைவிட இப்போது
கொஞ்சம் வசதியாக இருப்பதாகவும், முன்னரே வேலையை விட்டு வந்திருக்கலாம் என்றும் அடிக்கடி
புலம்புபவன். அவன்தான் இப்போது என்னிடம் “நீ பாஸா…” என்று கேட்கிறான்
“பாஸா… யார் சொன்னது?... பாஸாயிருந்தா
எப்புடிப்பா காலேஜுக்குப் போயிருக்க முடியும்? நான் பாஸாகல” என்றேன். அப்பாடா… ‘நான்
பெயிலோ’ என்று அங்கிருக்கும் யாரும் சந்தேகப்படாதபடி நான் காலேஜுல படிச்சதையும் சேர்த்துச்
சொல்லிட்டேன் என்று மனதிற்குள் சந்தோஷப்பட்டுக் கொண்டேன். அந்த சந்தோஷத்தை ஒரு வினாடிகூட
நிலைக்கவிடாததாக இருந்தது பாலை மனோவின் பதில். “நீ அதுக்கப்புறம் காலேஜுக்குப் போனியா…
போகலையான்றதில்ல… இப்பக் கேள்வி… நீ பாஸாயிருந்தா… காளவாசல் கதிரேசன் உன்கிட்டப் பேசுவான்…
நம்ம ஸ்கூல்ல படிச்ச கடைசி செட்டு பெரிய பத்து பசங்க எல்லோரும் சேர்ந்து பழைய மாணவர்
சங்கம் தொடங்குறாங்களாம்… உன்னோட மொபைல் நம்பர் கேட்டான். கொடுத்திருக்கேன்” என்றான்.
இதற்குள் நான் வாங்க வேண்டிய பொருட்கள் என் கைக்கு வந்து சேர்ந்திருந்தது. பெரிதாக
அலட்டிக் கொள்ளலாமல், “சரி.. பேசட்டும் பார்க்கலாம்…” என்றபடி கிளம்பினேன். பாலை மனோவுடனான
இந்த உரையாடல் எனக்கு அப்போதே மறந்துவிட்டது.
ஒரு வாரத்திற்குப் பிறகு காசுக்கடை
பஜாரில் சின்னதாக நகைக்கடை வைத்திருக்கும் மகேஷ் கடைக்குப் போயிருந்தேன். வழக்கமாக
பஜாருக்குப் போகும்போது அவன் கடைவாசலில் டூவீலரை நிறுத்த வசதியாக இருக்கும் என்பதால்,
வண்டியை அங்கே நிறுத்திவிட்டு கடைக்குள்ளும் செல்வது வழக்கம். அன்றும் அப்படித்தான்
சென்றேன். அவனுடன் அவனுடைய தொழில் முறையிலான தொடர்பும் எனக்கு உண்டு. என்னைப் பார்த்ததும்,
“காளவாசல் கதிரேசன் உன்னை விசாரிச்சான்ப்பா” என்றான் மகேஷ்.
“கதிரேசன்… யாரு? என்னைய எதுக்கு
விசாரிச்சான்?” என்றேன்.
“நம்ம செட்டுப்பா… ஸ்கூல்
மேட்… ஸ்கூலுக்குப் பக்கத்துலயே காளவாசல் இருக்குல்ல. அவன்தான். 1978 பெரிய பத்து செட்டு
எல்லோரையும் சேர்த்து சங்கம் வைக்கப் போறாங்களாம். அதான் உன்னய நியாபகம் இருக்கான்னு
என்கிட்டக் கேட்டான். ரெகுலரா பாத்துக்கிட்டுதான் இருக்கோம்ன்னு சொன்னேன். என்ன பண்ற…
எங்க இருக்கயின்னு விசாரிச்சான்… மொபைல் நம்பர் கேட்டான். குடுத்து விட்டுருக்கேன்.
உங்கிட்ட பேசுறேன்னு சொன்னான்” என்றான் மகேஷ்.
“ம்… இப்பத்தான் நினைவுக்கு
வருது. பாலை மனோவும் சொன்னான்… அவன்கிட்ட போனவாரம் நம்பர் வாங்குனானாம்… இதுவரையிலும்
பேசலை… உன்கிட்ட எப்ப நம்பர் வாங்குனான்?” என்று கேட்டேன்.
“ஒரு மூனு நாள் இருக்கும்…
பேசுவான்” என்றான்.
“உன்கிட்ட அதப்பத்தி பேசுனானா?
நீ என்ன சொன்ன?”
“செய்யுங்கப்ப நல்ல விஷயந்தானேன்னு
சொன்னேன்” என்றான்.
மகேஷைப் பொறுத்தவரையில், யாரையும்
பாதிக்காததாக, யார் எதைச் சொன்னாலும் தடை சொல்ல மாட்டான். படிக்கிற காலத்திலிருந்தே
எதுவாக இருந்தாலும்சரி, எந்தவிதமான பிரச்சனைகளும் இல்லாமல் நடக்க வேண்டும் என்று நினைப்பவன்.
அவனுடைய குணத்திற்கு அவன் சொன்னது சரிதான்.
“36 வருஷத்துக்கப்புறம் எதுக்கு
எல்லாரையும் ஒன்னு திரட்டணும்னு முயற்சி பண்றாங்களாம்” என்றேன்.
“நம்ம ஸ்கூல்ல 1968ல பெரிய
பத்து படிச்சவங்கள்லாம் சேர்ந்து ஒரு சங்கம் தொடங்கியிருக்காங்கள்ல. பேப்பர்லகூடப்
போட்டிருந்தாங்கள்லப்பா. அதுனாலயா இருக்கும். பேசும்போதுகூட அதச் சொன்னான்”
“போட்டிக் கடையோ?” என்றேன்
குதர்க்கமாக.
“என்னமோ பண்ணலாம்ன்னு நெனைக்கிறாய்ங்க.
இதுல என்ன போட்டி?”
“சரி விடு. பேசட்டும் பார்க்கலாம்”
இரண்டு நாட்களுக்குப் பிறகு
சிங்கராஜ் ரோட்டில் பார்க்கும்போது “வீட்டுக்கு வரலாம்ன்னு நெனைச்சேன். டைம் கிடைக்கல.
நல்ல வேளை பாத்துட்டேன். சாயங்காலம் நம்ம கிருஷ்ணன் கடைக்கு வந்திருப்பா. ஜிபிஎஸ் ஹவுசுக்கு.
ஒரு சின்ன டிஸ்கசன் இருக்கு” என்றான்.
“என்ன டிஸ்கசன்?”
“ஏய் வாப்பா… நீ இல்லாம ரொம்ப
சிரமமா இருக்கு. நீ வந்தாத்தான் ஈஸியா இருக்கும். நம்ம பாத்திரக்கடை பாய், யாசரையும்
வரச் சொல்லியிருக்கேன்” என்றபடி பைக்கை ஸ்டார்ட் செய்தான். அவன் மனைவியுடன் இருந்ததால்
அதற்குமேல் என்னால் எதுவும் கேட்க முடியவில்லை.
அவன் எப்போதுமே அப்படித்தான்.
எதையும் முழுமையாக மற்றவர்களுக்குச் சொல்ல மாட்டான். தடாலடியாக முடிவெடுப்பான். எதையும்
செய்ய வேண்டும் என்ற வேகம் இருக்கும். அந்த அவசரத்தில் தான் நினைப்பதை மற்றவர்களுக்கம்
புரிய வைக்கவேண்டும் என்பதைப்பற்றியெல்லாம் கவலைப்பட மாட்டான். கேட்டால் கோபப்படுவான்.
அவனுடைய கோபம் நீண்ட நேரம் நீடிக்காது. அடம் பிடிக்கும் குழந்தை. அவன் எடுத்த முடிவு
தவறாக இருந்தால் அதைக் கொஞ்சம் பக்குவமாகச் சொன்னால் புரிந்து கொண்டு மாற்றிக் கொள்ளக்
கூடியவன். இப்போது அவனுடைய மனைவியும் உடனிருந்ததால் எதையும் பேச முடியவில்லை. வரமுடியாது
என்ற மறுக்கவும் முடியவில்லை. மறுத்தால் அவனுடைய மனைவி அவனைப்பற்றி என்ன நினைப்பார்கள்
என்ற உணர்வுதான் முன்னால் நின்றது. “சரி” என்று மட்டும் சொல்லி வைத்தேன்.
எத்தனை மணிக்கு டிஸ்கசன் என்று
அவன் சொல்லாதது மாலை 5 மணிக்குத்தான் நினைவில் வந்தது. செல்லிடப் பேசியில் அழைத்தேன்.
செல்லை எடுத்ததுமே அவன் “ஆறு மணிக்கு ஜிபிஎஸ் ஹவுஸ், கிருஷ்ணன் கடைக்கு வந்துருப்பா”
என்றான்.
“எல்லாம் சரி. என்ன டிஸ்கசன்னு
சொல்லவே இல்லையே”
“என்னன்னு சொன்னாத்தான் வருவியா?
அதான் வருவயில்ல. அங்க வந்து தெரிஞ்சுக்க வேண்டியதுதானே?”
“என்னன்னு தெரிஞ்சா அதுக்கேத்த
மாதிரி கொஞ்சம் ப்ரிபேர்டா வரலாமுல்ல அதான் கேட்டேன்” என்றேன். என்னுடைய இந்த வார்த்தைகள்
அவனுடைய குணமறிந்ததால் வந்தவை.
“அதான்ப்பா காளவாசல் கதிரேசன்
உன்கிட்டப் பேசியிருப்பான்ல. நம்ம ஸ்கூல்ல 1978 கடைசி செட்டு பெரிய பத்து மட்டும் தனியா
பழைய மாணவர் சங்கம் தொடங்குறது சம்மந்தமாப் பேசணும். கட்டாயம் வந்துரு” என்றான். அவன்
பேசிய அவசரத்தில் அவனிடம் வேறு ஏதும் கேட்கும்படியாக இல்லை. “சரி அவசியம் வர்றேன்”
என்று மட்டும் சொன்னேன். ஆனால் அனைவரும் சொன்ன காளவாசல் கதிரேசன் இதுவரை என்னிடம் பேசவேயில்லை.
அவன் யார் என்பதுகூட எனக்குத் தெரியவில்லை.
-2-
அவசியம் போக வேண்டும் என்று
முடிவு செய்தேன். என்னுடைய இந்த முடிவிற்குக் காரணமில்லாமலில்லை. நான் படித்த பள்ளியில்
நான் படிக்கிற காலத்திலேயே பழைய மாணவர் சங்கம் இருந்தது. பள்ளியின் அனைத்து நிகழ்ச்சிகளிலும்
விழாக்களிலும் அழைப்பிதழில் ஓஎஸ்ஏ சார்பாக அதன் தலைவர் அல்லது செயலர் என யாராவது ஒருவரின்
பெயர் தவறாமல் இடம் பெற்றிருக்கும். நாங்களும் படித்து முடித்ததும் அந்தப் பள்ளியின்
பழைய மாணவர்கள் ஆனோம். எங்களில் பலரும் பழைய மாணவர் சங்கத்தில் உறுப்பினர்களாக இல்லை.
ஆனால் எங்களுடன் படித்த வேறு சிலர் சங்கத்தில் பொறுப்பிலும்கூட இருந்தார்கள். படித்து
முடித்து பத்தாண்டுகளுக்குப் பிறகு பள்ளிக்கு ஒரு இலக்கிய நிகழ்ச்சிக்காகச் சென்றிருந்தேன்.
ஓஎஸ்ஏ’வின் செயலாளராய் இருந்த என் பக்கத்து பெஞ்சு சுப்பிரமணியும் நிகழ்ச்சிக்கு வந்திருந்தான்.
நிகழ்ச்சி முடிந்து அவனிடம் பேசிக்கொண்டிருந்தபோது, எதேச்சையாக “மணி ஓஎஸ்ஏ’ல நம்ம செட்டு
பசங்க நெறைய பேரோட பேரு உட்டுப் போயிருக்குப்பா. சேர்க்கணும்” என்றேன்.
“நல்லாப் படிச்சு கவர்ண்மென்ட்டுல
பெரிய வேலையில இருக்க… ஆனா ரொம்ப அப்புராணியா இருக்கியேப்பா… ஓஎஸ்ஏ’வுல எல்லாரையும்
சேர்க்க முடியாது. அப்புடியே அடம் புடிச்சுச் சேர்ந்தாலும் எந்தக் கூட்டத்துக்கும்
தகவல் வராது” என்றான்.
நான் ரொம்பக் குழப்பமாகி
“ஏன்?” என்றேன்.
“மகா ஜன சபை நடத்துற பள்ளிக்கூடத்துல
படிச்ச எங்க பசங்களுக்காக ஆரம்பிச்சதுதான் ஓஎஸ்ஏ. அது சில இடங்கள்ல லாபி பண்றதுக்கான
ஏற்பாடு. அதனால இதுல வேற ஆளுகளச் சேர்க்கிறதில்ல. சேரவும் மாட்டாங்க”
இந்த பதிலால் கடுப்பான நான்
“பெறகு ஏன் பேரு மட்டும் ஓஎஸ்ஏ’ன்னு வச்சிருக்கீங்க”ன்னு கொஞ்சம் கோபமாகவே கேட்டேன்.
அவன் மிகவும் கூலாக “நீ ஓஎஸ்ஏ’வுல
இருக்குற ‘ஓ’வ ஓஎல்டி, ஓல்டுன்னு புரிஞ்சுக்கிறதாலதான் இந்தப் பிரச்சனை. ஓடபில்யூஎன்
‘ஓன்’ன்னு எல்லாருக்கும் தெரியும். நீயும் அப்படியே புரிஞ்சுக்க. எந்தக் குழப்பமும்
வராது” என்றபடி சிரித்தான்.
அவனுடைய சிரிப்பு என்னை ரொம்பவும்
தொந்தரவு செய்தது, என்றாலும் இதில் வேறு ஒன்றும் செய்வதற்கில்லை என்பது தெளிவாகத் தெரிந்தது.
அவன் சொன்னதுபோல் நான் இந்த
விஷயத்தில் ரொம்பவும் அப்புராணியாகத்தான் இருந்திருக்கிறேன். ஆர்வத்தின் தொடர்ந்த விசாரிப்பில்
நான் படித்த உறவின் முறை கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்திலும் இதுதான் நிலைமை என்பதைத்
தெரிந்து கொண்டேன்.
பழைய மாணவர் சங்கங்களை மகாஜன
சபைகளின், உறவின் முறைகளின் துணை உறுப்புகளாகப் பார்த்த எனக்கு கதிரேசனும் மனோவும்
மகேஷும் சிங்கராஜும் ஜிபிஎஸ் கிருஷ்ணனும் சங்கம் அமைக்க முயற்சி செய்வது மிகவும் ஆச்சர்யமாக
இருந்தது. ஏனெனில் இந்த ஐந்து பேரும் வேறுவேறு ஜாதியைச் சேர்ந்தவர்கள். நான் இந்த ஐந்திலும்
சேர்த்தியில்லாதவன். யாசர் வேற்று மதத்தைச் சேர்ந்தவன். சுப்பிரமணியின் வார்த்தைகளில்
சொல்வதென்றால் ஏழு பேரும் வேறுவேறு ஆளுக. நாங்கள் படித்து முடித்து 36 ஆண்டுகளுக்குப்
பிறகு, ‘பலபட்டறை’ மாணவர் சங்கம் ‘1978’ என்ற அடையாளத்துடன் உருவாகவிருப்பது ஒரு நல்ல
விஷயம். எனக்குத் தெரிந்து இதுவரை இப்படியான ஒரு சங்கம் இருப்பதாகத் தெரியவில்லை. இன்னும்
ஒரு மணி நேரத்தில் ஜிபிஎஸ் ஹவுசில் இருக்க வேண்டும்.
-3-
ஜிபிஎஸ் என்றால் குளோபல் பொசிசன்
சிஸ்டம் இல்லை. ஜிபிஎஸ் ஹவுஸ் எங்கள் ஊரில் பெரிய நகைக்கடைகளில் ஒன்று. கோல்டு பிளாட்டினம
சில்வர் என்று விளக்கம் சொன்னாலும் அது கோவிந்தராஜ் மகன் பவுன்ராஜ் மகன் சங்கர்ராஜ்
என்பதன் சுருக்கம்தான் என்பது ஊருடன் நீண்ட உறவு கொண்டவர்கள் எல்லோருக்கும் தெரியும்.
கிருஷ்ணன், ஜிபிஎஸ் கிருஷ்ணராஜ், வணிக நுணுக்கம் தெரிந்தவன். ‘வியாபாரி’ எஸ்.ஜே.சூர்யா
வகையைச் சேர்ந்தவன்.
மாலை ஆறு மணிக்கு நானும் சிங்கராஜும்
கிருஷ்ணன் கடையில் இருந்தோம். ஆறரை மணிக்கு யாசர் வந்தான். ஜமாத் பொறுப்பில் இருப்பதாகவும்
குழந்தைகள் மூவரும் சென்னையில் இருப்பதாகவும் தெரிவித்தான். யாசர் மிகவும் கலகலப்பானவன்.
பெரிய தொண்டைக்காரன். செய்கிற வேலையைப் பொறுப்பாகச் செய்ய வேண்டும் என்பதில் உறுதியானவன்.
ஐந்து நிமிடத்தில் காளவாசல் கதிரேசன் வந்தான். எங்கள் இருவருக்குமே ஒருவரை மற்றவருக்கு
அடையாளம் தெரியவில்லை. “எந்த வகுப்பு?” “யாரு வாத்தியாரு?” “எந்த பெஞ்சில உட்கார்ந்திருந்த?”
“உன் பக்கத்தில யாரு உட்கார்ந்திருந்தது?” என நிறைய விசாரித்தான். இந்தக் கேள்விகள்
மூலம் 36 ஆண்டுகளுக்கு முந்தைய என்னை நினைவில் கொண்டுவர முயற்சி செய்து கொண்டிருக்கிறான்.
நான் குத்து மதிப்பாக பதில் சொல்லிக் கொண்டிருக்கிறேன். இப்படியான கேள்விகள் எதையுமே
நான் அவனிடம் கேட்கவில்லை. அவன் அக்கறையுடன் கேட்ட கேள்விகள் எனக்கு அபத்தமாகத் தோன்றின.
“என்னைத் தெரியுதா?” கதிரேசன்
ஏதோ எதிர்பார்ப்புடன் கேட்டான்.
நான் மெலிதாகச் சிரித்தபடி
புருவங்களை உயர்த்தி “இப்பத் தெரியுது” என்றேன்.
என்னுடைய இந்தப் பதிலிலிருந்த
கிண்டல் பொருள் அவனுக்குப் புரியாததால், “எனக்குத் தெரியலயே…” என்றபடி யோசித்து யோசித்து
அன்றைக்கான கேள்விகளையே மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டிருக்கிறான். நான் எதையுமே
யோசிக்காமல் “ஆம்…” “இல்லை…” என்று மட்டும் பதில் சொல்லிக் கொண்டிருக்கிறேன். ஏழு மணிக்குக்
காஃபி வந்தது. ஒரு வழியாக ஜிபிஎஸ் கிருஷ்ணன் ஏழரை மணிக்கு வந்து சேர்ந்தான். நீளமான
பெரிய கடையின் பின்பகுதியில் இருந்த அவனுடைய அலுவலகத்தில்தான் அதுவரை நாங்கள் அவனுக்காகக்
காத்திருந்தோம். தன்னுடைய இடத்திலேயே தனக்காகக் காத்திருக்க வைத்ததற்கான எந்தவிதக்
கூச்சமும் அவனிடம் இல்லை. வந்தவுடன் எல்லோருக்கும் “ஹாய்” சொன்னான். “என்ன சிங்கம்…
என்ன முடிவு பண்ணியிருக்கீங்க…?” என்று கேட்டான். சிங்கராஜ் பொதுவாக கிருஷ்ணனுக்காகப்
பேசுவான்.
“நீ வரட்டும்ன்னுதான்டா எதிர்பார்த்துக்கிட்டிருக்கோம்.
சும்மா பேசிக்கிட்டிருந்தோம். இன்னும் ஒன்னும் முக்கியமான விஷயம் பேசல” என்றான் யாசர்.
“நீங்களா பேசி ஏதாவது முடிவு
பண்ணுங்கப்பா… என் நிலைமையப் பாத்தீங்கல்ல… எனக்கு இருக்குற அரிபரியில ஒன்னும் ஓடாது”
“அது எப்புடி… நீ முக்கியமான
ஆளுல்ல…” என்ற சிங்கராஜ் தொடர்ந்து “சரிவிடு… அடுத்த வாரம் ஞாயிற்றுக் கிழமை சாயங்காலம்
முதல் மீட்டிங்… கதிரேசா உங்கிட்ட இருக்கிற நம்ம பயலுக நம்பருக்கெல்லாம் கூப்பிட்டுச்
சொல்லிரு… சரிதானே கிருஷ்ணா” என்றான்.
“இடம் எதுன்னு முடிவு பண்ணாம,
நீ பாட்டுக்குக் கூப்பிட்டுச் சொல்லீருன்னா என்ன அர்த்தம். நான் எங்கன்னு சொல்றது?”
“கிருஷ்ணா காம்ப்ளக்ஸ் மாடியில
ஒரு ரூம் சும்மாதான் இருக்கு இருபது பேர் உட்காரலாம்… அதிகமா ஆட்கள் வந்தா, சாயங்காலக்
கூட்டமா இருந்தா, மொட்டை மாடியில வச்சுக்கிறலாம். முப்பது நாப்பது சேர் ரூம்லயே இருக்கு…”
என்றான் கிருஷ்ணன்.
தொடர்ந்து நிறைய பேசினோம்.
ஞாயிற்றுக் கிழமை கூட்டத்திற்கு வருபவர்களைப் பற்றிய விபரங்களைச் சேகரிப்பதற்கான படிவம்
தயாரிக்கும் பணி என்னிடம் ஒப்படைக்கப்பட்டது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பொறுப்புடன்
சிங்கராஜ் சொன்ன டிஸ்கசனை முடிக்கும்போது மணி எட்டரை ஆகியிருந்தது. எட்டு மணிக்கே ஜிபிஎஸ்
கிருஷ்ணன் கடைக்குள் போய்விட்டான் என்பதையும் இந்த இடத்தில் சொல்லித்தான் ஆகவேண்டும்.
சனிக்கிழமை காலையில் “பேனர்
ஒன்னு இருந்தா நல்லா இருக்கும். ரெடி பண்ண முடியுமான்னு கிருஷ்ணன் கேட்டாம்ப்பா” என்று
சிங்கராஜ் தொலைபேசினான்.
“அவசரத்துக்குப் பண்றதுன்னா
சிரமம்ப்பா. வழக்கமா நகைக்கடைக்கு பேனர் போடுற எடத்துல சொல்லி அவனையே ரெடி பண்ணச் சொல்லு”
“நானும் அதத்தான் சொன்னேன்.
மேட்டர் தெரியாதுங்குறான்”
“மேட்டர் எஸ்எம்எஸ் போடுறேன்”
என்ற நான் தொடர்ச்சியாக “பேனர்ல எந்தப் படமும் இருக்கக்கூடாது. ஞாபகம் இருக்கட்டும்”
என்ற நான் எஸ்எம்எஸ் அனுப்பிய பிறகு மீண்டும் அவனை அழைத்து “ஞாபகம் இருக்கட்டும். பேனர்ல
எந்தப் படமும் இருக்கக்கூடாது” என்று நினைவூட்டினேன்.
-4-
மறுநாள் நாங்கள் எதிர்பார்த்ததைவிட
அதிகமானவர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள். கூட்டம் திட்டமிட்டபடி 4 மணிக்குத் தொடங்கவில்லை.
மூன்றரை மணியிலிருந்தே ஒவ்வொருவராக வந்து கொண்டிருந்தார்கள். கொஞ்சம் பழுப்பான வேட்டியுடன்,
குறுக்கே பட்டை போட்ட அடர்நிற டீசர்ட் அணிந்த ஒருவர் உள்ளே நுழைந்தார். உற்றுப் பார்த்தபோது
தெரிந்தது. அட நம்ம கிழட்டு மன்னன், ஆதிராஜன். எங்களுடன் படித்தவர்களில் நன்றாகப் படித்த
மாணவர்களில் அவனும் ஒருவன். ஆதிராஜன் என்ற பெயரை கிழட்டு மன்னன் என யாரோ மொழி பெயர்க்க
பள்ளி நாட்களில் ஆசிரியர்களாலும்கூட அப்படியே அழைக்கப்பட்டவன். சிரித்த முகத்துக்காரன்.
கிராமப்புற வறிய குடும்பத்திலிருந்து முதல் தலைமுறையாக பள்ளிக்கு வந்தவன். பெரிய பத்துடன்
படிப்பை முடித்துக் கொண்டவன். படிக்கிற காலத்தில் எனக்கு நெருக்கமாயிருந்த நண்பர்களில்
அவனும் ஒருவன். அடையாளமே தெரியாமல் மாறிப்போயிருந்தான். அறிமுகப்படுத்தி அவனை தோளில்
கைபோட்டுத் தழுவிக் கொண்டேன். கூனிக் குறுகிப் போனான். உடம்பில் தொழுவத்தின் மணம் கமழ்ந்தது.
நாசூக்காக நெளிந்து என் பிடியிலிருந்து நழுவினான்.
“எப்படிடா இருக்க?” என்றேன்.
“நல்லா இருக்கேங்க” என்றான்
“என்னடா மரியாத தூள் பறக்குது”
“இருக்கட்டுங்க… நாலு பேரு
இருக்கிற இடத்துல உங்கள மரியாதையில்லாமப் பேசுனா நீங்க பாக்குற வேலைக்கு நல்லதில்லை”
“இங்க நம்ம பசங்கதானே இருக்காங்க.
அப்படியே நாலு பேரு இருக்குற இடத்தில பேசுனாத்தான் என்ன? நாம ஃப்ரண்ட்ஸ்தானே?”
“இருக்கட்டுங்க பரவாயில்லை”
நான் அவன் தோளில் கைபோட்டு
லேசாக குனிந்து நெளிந்து “சரிங்க” என்றேன். சிரித்தான். என்ன செய்கிறான்? எப்படி இருக்கிறான்?
என விசாரித்தேன்.
மாட்டுப் பண்ணையில் வேலை பார்க்கிறான்.
மனைவி விவசாயக் கூலி. மூன்று பெண் குழந்தைகள். முதல் மகள் 5 கிலோ மீட்டர் அருகில் உள்ள
இன்ஜினியரிங் கல்லூரிக்கு தினமும் சைக்கிளில் சென்று வருகிறாள். இரண்டாமாண்டு படிக்கிறாள்.
அவனுடைய முதலாளி, அவரும் எங்களுடன் படித்தவன்தான். படிக்கிற காலத்தில் ஆதியைவிட குறைந்த
மார்க் எடுத்தவன்தான். இந்தக் கூட்டத்தில்தான் இருக்கிறான். ஆனால் அவனை இவன் ‘அண்ணே’
என்றுதான் அழைக்கிறான். அருகில் உட்காரத் தயங்குகிறான். மூத்த மகளின் படிப்புச் செலவிற்காக
அவனுடைய முதலாளி ஓரளவு உதவி செய்கிறான். இரண்டாம் மகள் பதினொன்றாம்
வகுப்பு படிக்கிறாள். மூன்றாவது மகள் ஆண் குழந்தைக்கு ஆசைப்பட்டு தாமதமாய்ப் பிறந்தவள்.
ஏழாம் வகுப்பில் இருக்கிறாள். சனி ஞாயிறுகளில் காட்டு வேலைக்குச் செல்லும் குடும்பம்
அவனுடையது. அப்படித்தான் போய்க் கொண்டிருக்கிறது வாழ்க்கை அவர்களுக்கு.
இப்படிப் பேசிக் கொண்டிருந்தபோது
அவனை இயல்பு நிலைமைக்குக் கொண்டு வரலாம் என நினைத்து கூட்டத்திற்கு தாடியுடன் வந்திருந்த
ஆதிராஜனிடம் “என்ன நேர்த்திக் கடனா?” என்றதற்கு, “நம்ம என்ன ஆபீசுக்கா போறோம். நெத்தம்
செறைச்சுச் செலவு பண்றதுக்கு. அதெல்லாம் ரெண்டு மாசத்துக்கொரு தடவ முடிவெட்டும்போது
மட்டும்தாங்க” என்றான்.
இவன் இதைச் சொல்லிக் கொண்டிருக்கும்போதே
பிச்சைக் கனி “என்ன மாப்ளே… அப்பதையே வந்துட்டீங்களா?” என்றபடி வேட்டியை மடித்துக்
கட்டியபடியே உள்ளே வந்தான்.
“இப்பத்தான்…” என்றவாறு அவனுடன்
கைகுலுக்கிக் கொண்டேன்.
“வேற யாரெல்லாம் வந்திருக்கா…”
என்றபடி சுற்றிலும் பார்வையைச் செலுத்தினான்.
படிக்கிற காலத்தில் எனக்கு
ஒரே தெருக்காரன். அன்றைய வழக்கப்படி நண்பனின் பெற்றோரை அத்தை, மாமா என்றழைத்ததால் எனக்கு
மாப்பிள்ளையானவன். படிக்கிற காலத்திலிருந்தே என்னை அவன் பெயர் சொல்லி அழைத்ததில்லை.
அவனுடைய அப்பாவும் அம்மாவும்கூட “வாங்க மருமகனே” என மரியாதையாக அழைப்பார்கள். இவனும்
“வாங்க மாப்ளே” என்பான். அந்த மரியாதை இன்றுவரை குறைந்ததில்லை. நாடோடியாக இந்த ஊருக்கு
வந்த எங்களுக்கு பிச்சைக்கனியின் குடும்பம் தொடக்கத்தில் மிகவும் அந்நியமானது. அதன்
பின்னர் அன்னியோன்யமானது. இன்றைக்கும் சொந்த மைத்துனன் அளவிற்கு அவன் தரும் மரியாதை,
பால்ய கால குடும்ப நட்புக்கான மரியாதை என ஒற்றை வரியில் தள்ளிவிடக் கூடியது இல்லை.
பள்ளிப் படிப்பை முடித்ததும்
பக்கத்து ஊர் நூற்பாலையில் வேலைக்குச் சேர்ந்தான். எங்கள் செட்டில் முதலில் வேலைக்குச்
சென்றதால் முதலில் திருமணமானதும் அவனுக்குத்தான். வேலைக்குச் சேர்ந்த ஐந்து வருடங்களுக்குள்
பங்காளித் தகறாரில் பஞ்சாலை மூடப்பட்டதும், குடும்பத்தைக் கட்டி இழுப்பதற்காக பழைய
இரும்பு, ஈயம் பித்தாளை வாங்கி விற்கும் சைக்கிள் வியாபாரியாக மாறினான். இன்று கடைவீதியில்
இருக்கும் ஒரு சந்தில் - பழைய பேப்பர், இரும்புக்கடை வைத்திருக்கிறான். வீட்டு விசேஷங்களில்
மட்டுமே சந்திப்பவனாக மாறிப்போனாலும் என்னுடைய பால்ய நண்பர்களில் முக்கியமானவன் இவன்.
காளவாசல் கதிரேசன் தூத்துக்குடியில்
செட்டிலான தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் மேலாளராக இருக்கும் இன்ஜினியர்
நாகராஜனிடம் “நீ எந்த பெஞ்சில் உட்கார்ந்திருந்த?” என்று கேட்டுக் கொண்டிருந்தான்.
“கிருஷ்ணனுக்குக் கடையில ஏதோ
வேலையிருக்காம்ப்பா… சீக்கிரம் கூட்டத்தை முடிக்கச் சொல்றான்…” என தூது வந்திருந்தான்
சிங்கராஜ்.
“முடிச்சிறலாம்… ஒரே ஒரு சிக்கல்தான்…
முடிக்கணுமின்னா தொடங்கணுமுல்ல…” என்றேன் நான்.
“சரி… சரி… தொடங்கீரலாம்…”
என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே வாசலைப் பார்த்து, “ஏய் வாப்பா… வா.. வா…” என்றான்.
எங்களுடன் படித்த மகேஷ், இன்று
மாவட்ட மருத்துவ அதிகாரி, படியேறிக் கொண்டிருந்தான். நாங்கள் “ஹாய்…” சொல்லிக் கொண்டோம்.
டாக்டர் மகேஷைப் பார்த்ததும் நகைக்கடை மகேஷ் உட்பட பலரும் எழுந்து நின்றார்கள். ஊசிக்குப்
பயப்படும் குழந்தைகள்போல் சிலர் வேறு சிலரின் பின்னால் தலைமறைவாக முயற்சி செய்து கொண்டிருந்தார்கள்.
டாக்டர் மகேஷ் மிகச் சாதாரணமாக எல்லோருக்கு “ஹாய்…” சொல்லி பழைய நண்பர்களை நினைவுக்குக்
கொண்டு வர முயற்சி செய்து கொண்டிருந்தான்.
கூட்டத்தைத் தொடங்கி காளவாசல்
கதிரேசன் அனைவரையும் வரவேற்றுக் கொண்டிருந்தபோது அரிசி ஆலையில் அவியல் வேலை பார்க்கும்
நாராயணன் வந்தான். இவனும் பள்ளிப் படிப்புடன் முடித்துக் கொண்டு வேலைக்குச் சென்றவன்.
என்னுடைய கல்லூரி காலத்தின் லீவு நாட்களிலும் பின்னர் வேலை தேடி நான் அலைந்து கொண்டிருந்த
நாட்களிலும் நாராயணனுடன் நானும் அவியல் வேலைக்குச் சென்று கொண்டிருந்தேன். எம்ஜிஆரின்
தீவிர ரசிகன். ஆனால் கட்சிக்காரனில்லை. நல்ல உழைப்பாளி என்பதுன் திறமையான வேலைக்காரன்.
காலியாகக் கிடந்த முன்வரிசை நாற்காலிகளைத் தவிர்த்து கடைசி வரிசையில் நாற்காலி இல்லாததால்
பின்னால் சென்று நின்று கொண்டிருந்தவனை சிங்கராஜ் இடைவரிசை நாற்காலி ஒன்றை ஏற்பாடு
செய்து பெரும்பாடுபட்டு அமர வைத்தான். ஆனாலும் அவன் நாற்காலியின் நுனியில் தொங்கிக்
கொண்டுதானிருந்தான்.
36 ஆண்டுகளுக்குப் பிறகு உடன்
படித்தவர்களைச் சந்திப்பது மகிழ்ச்சியாக இருந்தது. இறந்த வகுப்புத் தோழர்களுக்கான மௌன
அஞ்சலியுடன் கூட்டம் தொடங்கியது. அனைவரும் தங்களின் குடும்பம், பணி போன்ற இன்றைய தங்களின்
நிலையைப் பகிர்ந்து கொண்டார்கள். பள்ளி நாட்களையும் நினைவு கூர்ந்தார்கள். பலருக்கும்
நாங்கள் வைத்த பட்டப் பெயர்கள் சப்பை, ஜெயலலிதா, கட்ட பொம்மன், பல்லழகன், கிழட்டு மன்னன்,
கப்பை, கருப்பட்டி, முசோலினி, செம்பட்டியான், ஊறுகாய், பழம்… நினைவுக்கு மட்டுமல்ல
சபையிலும் வந்து போயின. அந்தப் பெயரைச் சொன்னால்தான் பலரை அடையாளமே தெரிந்தது. இது
நிறைவான சந்திப்பாக இருந்தது. வீட்டிற்கு வந்ததும், மனைவியிடமும், மகளிடமும் சந்திப்பு
பற்றி மகிழ்ச்சியாகப் பகிர்ந்து கொண்டேன். இருவரும் என்னைக் கேலி செய்தார்கள். அந்தக்
கேலியும்கூட மகிழ்ச்சி தருவதாகத்தான் இருந்தது.
-5-
முதல் கூட்டத்திற்கு வராதவர்களையும்
வரஇயலாதவர்களையும் வந்தவர்களையும் இணைத்து இரண்டாவது கூட்டம் மூன்று மாதங்களுக்குப்
பிறகு கூட்டப்பட்டது. சங்கத்திற்குப் பெயர் ஒன்றை இறுதி செய்வதுடன் செயல்பாட்டிற்கான
திட்டமிடலுக்காகவும் இந்தக் கூட்டம் கூட்டப்பட்டது. கூட்டத்தை ஒருங்கிணைக்கும் பொறுப்பு
என்னிடம் தரப்பட்டது. பின் மண்டைவரை வழுக்கை விழுந்த ஆறுமுகம் ‘எவர் கிரீன்” என்று
பெயர் வைக்க வேண்டும் என்று அடம் பிடித்துக் கொண்டிருந்தான். அவன் அதிமுக கரை வேட்டி
கட்டியிருந்தான் என்பதை சொல்ல வேண்டிய தேவையில்லை. அதற்குச் சற்றும் குறைவில்லாமல்
‘உதய மாணவர்கள்’ ‘பள்ளியின் குழந்தைகள்’ ‘படிப்பின் தூதுவர்கள்’ ‘மாணவர் ஜன சபை’ போன்ற
பெயர்களும் முன்நிலைப்படுத்தியவர்களின் அடையாளத்துடன் அடம் பிடித்தன. ஒரு வழியாக பள்ளியின்
பெயருடன் 1978 நீட்டிக்கப்பட்ட எஸ்எஸ்எல்சி மாணவ நண்பர்கள் சங்கம் என்ற பெயர் சிலரின்
விருப்பத்திற்கு மாறாக பலரின் விருப்பத்தின் பேரில் இறுதி செய்யப்பட்டது. இந்த முடிவை
எட்டுவதற்குள்ளாகவே ஒருங்கிணைத்த எனக்கு தாவு தீர்ந்து விட்டது. என்றாலும் எண் கணித
ஜனநாயகம் வாழ்க என்று மனதிற்குள் கோஷமிட்டுக் கொண்டேன்.
எதிர்காலத் திட்டமிடலுக்கான
முன்வைப்புகளாக டூர் போவது என்று தொடங்கி, மாரியம்மன் கோயில் திருவிழாவில் மோர்ப்பந்தல்
போடுவது என்ற தொடர்ந்து வருடா வருடம் விழா நடத்தி பரிசு கொடுப்பது… என்பதுவரை போனது.
இடையில் இரண்டு முக்கியமான விஷயங்கள் விவாதிப்பதற்காக அதிக நேரம் எடுத்துக் கொண்டன.
அதில் முதலாவது, ‘+2வில் அதிக மதிப்பெண் எடுக்கும் நம் வீட்டுக் குழந்தைகளின் மேற்படிப்புச்
செலவின் ஒரு பகுதியை சங்கம் ஏற்பது’. இந்தக் கருத்தைக் கேட்டதும் சிலர் ஆரவாரித்துக்
கை தட்டினார்கள். நான் எதிர் வரிசையில் இருந்த சிலரின் முகங்களைப் பார்த்தேன். பிச்சைக்கனி,
தங்கராஜ், ஆசைத்தம்பி, ஆதிராஜன், நாராயணன் போன்றோரின் முகம் பரிதாபமாக இருந்தது.
ஆதி நெளிந்ததன் காரணம் இப்போது
புரிந்தது. வலியவர்கள் என தாங்கள் நினைப்பவர்களின் அன்பைக்கூட ஏற்றுக்கொள்ளத் தயங்குகிற
நடுக்கமான சூழலைத்தான் இந்தச் சமூகம் எளியவர்களுக்கு வழங்கியிருக்கிறது. இப்படிப்பட்ட
எளியவர்கள் நிறையப்பேர் எங்கள் 1978ல் இருக்கிறார்கள்.
யாருடைய பெயரையும் குறிப்பிடாமல்
“நம்மில் எல்லோரும் நல்ல வசதி வாய்ப்புகளுடன் இல்லை. இந்த சூழ்நிலையில் நாம் செய்யக்
கூடிய பொருளாதார உதவி திறமையான குழந்தைகளுக்கானதாக இருப்பதைவிட தேவையிலிருக்கிற குழந்தைகளுக்கானதாக
இருந்தால்தானே சிறப்பாக இருக்கும்?” என்ற கேள்வியை நான் முன்வைத்தேன். தேவையில் இருப்பவர்களுக்குத்தான்
உதவ வேண்டும் என்று சொல்ல நினைத்த யாரையும் பேசவிடாதபடிக்கு திறமையான குழந்தைகளைப்
பெற்றெடுத்த திறமையானவர்கள் என் கேள்விக்கு எதிராக வாதாடிக் கொண்டிருந்தார்கள். இறுதியாக
பந்தயத்தில் ஜெயிக்கிற குதிரை மீது பணம் கட்டுபவன்தான் புத்திசாலி என்று முடிவு செய்யச்
சொல்லி குரலெழுப்பினார்கள். ஜனநாயகத்தின்படி அந்த முடிவு 1978ன் முடிவாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.
என்றாலும் ‘எண் கணித ஜனநாயகம் ஒழிக’ என்று நான் மனதிற்குள் கோஷமிட்டுக் கொண்டேன்.
எண் கணித ஜனநாயகத்திற்குப்
பலியான இரண்டாவது விஷயமும் இன்றைய சூழ்நிலையில் முக்கியமானதுதான். நிறைய பள்ளிக் கூடங்களில்
வளாகத்திற்கு உள்ளே கோயில் இருக்கிறது. ஆனால், நாம் படித்த பள்ளியில் கோயில் இல்லை.
அதனால் நாம் எல்லோரும் சேர்ந்து 1978 சார்பா ஒரு கோயில் கட்டிக் கொடுக்கலாம் என்ற கருத்தை
யாரோ ஒரு பக்திமான் முன்மொழிந்தான். இப்போது யாசரும், காஜாவும், நாசரும், சாமுவேலும்,
ஆபிரகாமும் வாயடைத்துப் போனார்கள். திராவிட நாதன் கத்திக் கூப்பாடு போட்டான். அவனை
கலாய்த்து, கடுப்பேற்றி, உட்கார வைத்து விட்டார்கள். அதன் பிறகு கோயில் வேண்டுமா வேண்டாமா
என்ற விவாதம் நடக்கவேயில்லை. என்ன கோயில் என்பதற்கான விவாதம் அதிக நேரம் எடுத்துக்
கொண்டது. இறுதியில் பிள்ளையார் கோயில் கட்டுவது என்றும் பிரகாரத்தில் பிள்ளையாரின்
இருபுறமும் லட்சுமியும் சரஸ்வதியும் இருக்கட்டும் என்றார்கள்.
அதுவரை அமைதியாக இருந்த நான்
ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் “1978ல் முஸ்லீம்களும் கிருஸ்தவர்களும் இருக்கிறார்களே”
என்றேன்.
“அவர்களும் இந்தியர்கள்தானே.
இந்தியாவில் பிறந்த அனைவருக்குமே விநாயகரும், சரஸ்வதியும், லட்சுமியும் கட்வுள்கள்தான்”
என்றான் வலதுகையில் ஆரஞ்சுநிற கயிறு கட்டியிருந்த 1978 மாணவ நண்பன் பாபுஜி.
“இது ஆர்எஸ்எஸ்’ன் குரல்”
என்றான் யாசர்.
“ஆனால் இந்தக் குரல்… அன்றைய
இந்தியாவில் தொடங்கிய அதே குரல்… அவசர நிலையின் தொடர்ச்சியாக ஓங்கி ஒலித்த குரல்…
1978ல் தொடங்கிய குரல்… 1978ன் நீட்சியாக இன்னும்
1992ல் இந்துக்களுக்குப் பலம் சேர்த்த குரல்… இன்று 1978 மாணவ நண்பர்களின் –குரல்…
இருபத்தோறாம் நூற்றாண்டில் அனைத்தையும் துடைத்தெறிந்து ஒற்றைச் சக்தியாய் உயர்ந்த குரல்…
இன்னும் உயரும் குரல்…” என குரலுயர்த்திக் கொண்டிருந்தான் பாபுஜி. யாசர் வானத்தை நோக்கி
இரு கைகளையும் சிறிதளவு உயர்த்தி வானத்தைப் பார்த்து ‘யா அல்லா…’ என்று சத்தம் வெளியில்
வராமல் சொல்லிவிட்டு அமர்ந்தான். பாபுஜி என்ன பேசுகிறான் என்பது பலருக்கும் புரியவில்லை
என்பதால், எந்தப் பதிலும் சொல்லவில்லை. எதைப் பற்றிப் பேசுகிறான் என்று புரிந்த என்னாலும்
ஒன்றும் பேச முடியவில்லை.
மொத்தத்தில் கூட்டம் அமைதியாக
இருந்தது. “மத நல்லிணக்கத்திற்கு அடையாளமாக இந்தக் கோயில் இருக்கட்டுமே” என்றான் கிருஷ்ணன்.
அவன் இடையில் கடை வேலையாகப் போய்விட்டுத் திரும்பி வந்திருந்தான். எனக்கு இப்போது
‘இவன் ஏன்டா திரும்பி வந்தான்’ என்றிருந்தது. கூட்டத்தில் நிறையப் பேர் கைதட்டினார்கள்.
எனக்குத் தலை சுற்றியது. மயக்கம் வருவதுபோல் இருந்தது. நாற்காலியை இறுகப் பற்றிக் கொண்டேன்.
“அடுத்த கூட்டத்தில் நிர்வாகிகள்
தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அனைவரும் அவசியம் வரவேண்டும். வராவதவர்களையும் வரவழைக்க
கதிரேசன் முயற்சி எடுப்பார். இப்போது நன்றி கூற சிங்கராஜ்” என்று கூறி கூட்டத்தை முடித்து
வைத்தேன்.
-6-
நன்றி நவிழலுக்குப் பின்னர்
நான்கைந்து பேராக நின்று பேசிப் பேசிக் கலைந்து சென்றார்கள். சிங்கராஜும் கதிரேசனும்
கிருஷ்ணனும் யாசரும் நானும் எஞ்சினோம்.
“நல்லா கூட்டம் நடத்துறப்பா.
நீயே தலைவரா இருந்துரு. கதிரேசன் செயலாளரா இருக்கட்டும். இல்லேன்னா நீங்க ரெண்டு பேரும்
அப்படியே மாத்திக்கங்க. பொருளாளரா யாசர் கணக்கு வழக்கு எல்லாத்தையும் பார்த்துக்குவான்.
கௌரவத் தலைவரா நம்ம கிருஷ்ணனப் போட்றலாம்” என்ற சிங்கராஜிடம் “எனக்கு கீ போஸ்ட்டெல்லாம
வேணாம்ப்பா… செயற்குழுவில வேண்ணா இருந்துக்கிறேன்” என்ற யாசரைப் பார்த்து நான் பலமாகவே
சிரித்தேன். யாசர் என் சிரிப்பின் அர்த்தத்தைப் புரிந்து கொண்டு “ஏய்… சும்மா இருடா…
நீ என்ன முடிவு எடுத்துருக்க… தலைவரா செயலாளரா…” என்றான்.
அவர்கள் என்னுடைய பதிலுக்காகக்
காத்திருந்தார்கள். நான் எதைக் கேட்டாலும் ஒத்துக் கொள்ளும் மன நிலையில் அவர்கள் இருந்தார்கள்.
நான் மென்மையான குரலில் நிதானமாகத் தொடங்கினேன். “நான் பொதுப்புத்திக்க எதிரானவன்.
ஆனால் இன்னைக்கு என்னால அப்படி இருக்க முடியாத சூழ்நிலையில இருந்தேன். சரி அதவிடுங்க.
நடந்து முடிஞ்ச விஷயம். நான் செய்யிற வேலைகளைப் பொறுத்த வரைக்கும் எனக்குன்னு சில பிரியாரிட்டி
இருக்கு. முதலிடம்… இரண்டாமிடம்… மூன்றாமிடம்…ன்னு. என்னோட குடும்பத்துக்கு, வேலைக்கு,
அமைப்பு வேலைகளுக்குன்னு இப்படியே நான் வரிசைப்படுத்திக்கிட்டுப் போகும்போது ஏறக்குறைய
கடைசி இடந்தான் 1978க்கு. அதனால் இங்க நான் பொறுப்புல இருக்க முடியாது. இருக்கிறதுலயே
சிக்கல் இருக்கு. இருந்தாலும் எல்லாருக்காக இல்லைன்னாலும் ஒரு சிலருக்காக நான் வெறும்
உறுப்பினரா மட்டும் இருக்கேன்” என்றேன்.
“இல்லப்பா…” ஏதோ சொல்லத் தொடங்கிய
சிங்கராஜைக் கையமர்த்தினேன். “பொதுப்புத்திக்குத் தலைமை தாங்குறது என்னைய மாதிரி ஆட்களுக்குக்
கஷ்டம். உங்களோட கட்டாயத்துக்காக நான் ஒத்துக்கிட்டாலும் என்னோட அமைப்பும்சரி குடும்பமும்சரி
என்னை இதுக்கு அனுமதிக்காது” என்றேன்.
வினோதமான உயிரினம் ஒன்றைப்
பார்ப்பதுபோல் என்னைப் பார்த்துக் கொண்டிருந்த அவர்களிடம் விடைபெற்றுக் கிளம்பினேன்
எனக்கான இடத்தை நோக்கி…
நன்றி : உயிர்
எழுத்து, அக்டோபர் 2016
No comments:
Post a Comment