சிவகாமியம்மாள் என்றாலே எங்கள் தெருவில் இருக்கும்
எல்லா வீட்டுக் காரர்களுக்குமே பயம்தான். வாரம் ஒருமுறை தெருவிற்கான பொதுக் குழாயில்
தண்ணீர் வரும்போது சிவகாமியம்மாளின் சத்தம் அடுத்த தெரு வரைக்கும் கேட்கும். அவர்கள்
வைத்ததுதான் குழாயடியில் சட்டமாக இருக்கும். நாங்கள் அந்தத் தெருவிற்குக் குடிபோன புதிதில்
அவர்களின் சத்தத்தைக் கேட்டுப் பயந்து போயிருக்கிறேன். அவர்கள் வீட்டிற்கு அடுத்த வீட்டில்தான்
நாங்கள் குடிபோயிருந்தேன் என்பதால் எனக்கு மற்றவர்களைக் காட்டிலும் அதிக பயமாக இருந்தது.
அவர்களுடன் நான் இணக்கமாகப் பழகினேன். அவர்களும்
என்னுடன் நன்றாகத்தான் பழகினார்கள். ஆனால் குழாயில் தண்ணீர் வரும் நேரத்தில் அந்த நட்பும்
இணக்கமும் எங்கே போகும் என்பதே தெரியாது. நான் வாயே திறக்க மாட்டேன். இருந்தாலும்
“கல்லுளி மங்கன் மாதிரி இருக்கிறதப் பாரு ஊமக் கொட்டான்” என்று என்னையும் வம்புக்கு
இழுப்பார்கள்.
மூன்று நாட்கள் சொந்த ஊருக்குக் குலதெய்வம் கோயிலுக்குச்
சாமி கும்பிடப் போய்விட்டு வந்த சிவகாமியம்மாள் வலது கையில் தீக்காயத்துடன் வந்தார்கள்.
கூழ் ஊற்றும்போது கையில் ஊற்றிக் கொண்டதாகச் சொன்னார்கள். நல்ல வேளையாக காயம் பெரிய
அளவில் இல்லை என்றாலும், வீக்கம் இருந்ததால் அவர்களால் வீட்டு வேலைகளைச் சரிவரச் செய்ய
முடியவில்லை. நான் வீட்டு வேலைகளில் அவர்கள் கேட்காமலே அவர்களுக்கு உதவி செய்தேன்.
‘‘ரொம்ப நன்றிம்மா” என்றார்கள். “இதற்கெதுக்கும்மா நன்றி. பக்கத்துல இருக்கிறவங்க ஒருத்தருக்கொருத்தர்
உதவியா இருக்குறதுதானே நல்லது” என்றேன். தெருவில் இருக்கும் மற்றவர்களும் சிவகாமியம்மாளுக்குச்
சிறுசிறு உதவிகள் செய்தார்கள். அந்த வாரம் தண்ணீர் வந்தபோது அவர்கள் வீட்டிற்கு நான்தான்
தண்ணீர் எடுத்து வைத்தேன். சிவகாமியம்மாள் தண்ணீர் பிடிக்க வராததால் அன்றைக்கு குழாயடி
மிகவும் அமைதியாக இருந்தது. சிவகாமியம்மாளுக்கு கை சரியான பிறகும் எங்கள் குழாயடி இப்போதும்
அமைதியாகத்தான் இருக்கிறது.
செற்றாரைச்
செறுத்தலில் தற்செய்கை சிறந்தன்று
(பகைவரைத் தண்டிப்பதைவிட, அவருக்க நன்மை செய்தல் சிறந்தது)
– மதுரைக் கூடலூர்கிழார்
– முதுமொழிக்காஞ்சி – சிறந்த பத்தில் 9ஆம் பாடல்
No comments:
Post a Comment