Monday, January 18, 2016

படைப்பரங்கமும் கலந்துரையாடலும் - 2/2016

மானுட விடுதலை பண்பாட்டுக் கழகத்தின் 2016 ஆம் ஆண்டின் இரண்டாவது படைப்பரங்கமும் கலந்துரையாடலும் ஜனவரி 17 ஆம் நாள் ஞாயிற்றுக் கிழமை பிற்பகல் 3 மணிக்குத் தொடங்கி இரவு 8 மணிவரை அருப்புக்கோட்டை மதி இல்லத்தில் நடைபெற்றது. படைப்பரங்கில்…

          தோழர் சத்யா ‘18’ என்ற மாயா எதார்த்த அறிவியல் புனைகதையின் பகுதி இரண்டை வாசித்தார். இன்றைய நவீன அறிவியலின் எதிர்கால சாத்தியங்களையும் புனைவின் சாத்தியங்களையும் உள்ளடக்கியதாக இருந்த இந்தக் கதையின் போக்கு அனைவரையும் ஈர்ப்பதாக இருந்தது.

          தோழர் தமிழ்க்குமரனின் நாவல் ‘கடூழியம்’ பகுதி 14 மற்றும் 15 வாசிக்கப்பெற்று பகுதியின் மீதான பார்வைகள் முன் வைக்கப்பட்டன.

          தோழர் மதிகண்ணன் தோழர் ரமேஷ் எழுதி மாவிபக’வின் ‘இன்று புதிதாய் பிறந்தோம்’ கவிதைத் தொகுப்பில் வெளியான கவிதையை வாசித்தார். எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட கவிதை இன்றைக்கும் பொருத்தப்பாடுடையதாய் இருப்பதற்குக் காரணம் சமூகம் மாறாமல் இருப்பதே என்ற கருத்து கலந்துரையாடலில் முன்னெழுந்தது.

          தோழர் கேகே’யின் கவிதை காலந்தோறும் நிகழ்த்தப்படும் ஆதிக்கத்தின் வன்முறைகளை முன்வைத்து அதன் மீதான கேள்விகளை எழுப்பிச் சென்றது.

          கருத்தரங்கின் தொடக்கமாக தோழர் சுப்புராயுலுவின் ‘சாதியும் வர்க்கமும்’ – ஒரு அம்பேத்காரியப் பார்வை முன்வைக்கப்பட்டு அதன் மீதான கருத்துகள் மூலம் கட்டுரை செழுமைப்படுத்தப்பட்டது.

          தோழர் அஷ்ரஃப் ‘இணையத்தில் வர்க்கம்’ என்ற தலைப்பிலான தன்னுடைய கட்டுரையின் முதல் பகுதியாக இணையமும் அதனைப் பயன்படுத்தும் சமூகமும் என்ற கருத்துரையை முன்வைத்தார். அடுத்த கூட்டத்தில் தொடர்வார்.


படைப்பரங்கையும் கருத்தரங்கையும் தோழர் கேகே ஒருங்கிணைத்தார்.

No comments:

Post a Comment