Tuesday, December 22, 2015

சட்டம் - சிறுகதை - சத்யா

“ட்டப்... ட்டப்...”
துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டது, இவன் ஜன்னலுக்குக் கீழே ஒளிந்துகொண்டான். இடுப்பை தடவிப்பார்த்தான். துப்பாக்கி நெருடியது. மெதுவாக வெளியே எடுத்து பக்கவாட்டில் நீட்டி பாதுகாப்பு விசையை நீக்கினான். மீசையைத் தடவியபடி காத்திருக்கத் தொடங்கினான்.
“ட்டப்... ட்டப்...”
துப்பாக்கி சத்தம் நெருங்கியது. சட்டென்று புரண்டுபடுத்து, முதுகை தரைக்குக்கொடுத்து, கால்களால் சுவற்றில் உதைத்து, அந்தபாசி படர்ந்தஈரமான தரையில் சர்ர்ரென்று வழுக்கிக்கொண்டு போனபடியே சுட்டான். ‘ட்டப்..’ நடுவிலிருந்தவன் நெஞ்சைப் பிடித்துக்கொண்டு விழுந்தான், ‘ட்டப்..’ இடதுபுறமிருந்தவன் கையிலிருந்த துப்பாக்கியைப் போட்டுவிட்டு வயிற்றைப் பிடித்தபடி விழுந்தான், ‘ட்டப்.., ட்டப்..’ வலதுபுறமிருந்த இருவரும் ஒருவரையொருவர் பார்த்தவாறு திரும்பி ஜோடியாக விழுந்தனர். சட்டென்று ஒருமுறை புரண்டு படுத்து தன் அருகில் விழுந்த தோட்டாவைத் தவிர்த்துவிட்டு ஐந்தமாவனை நோக்கிச் சுட்டான், அவன் தலையை பின்னால் வெட்டிவிட்டு நெற்றியில் ரத்தத்தை தெறித்தபடி விழுந்தான். இவன் ஆசுவாசமாக துப்பாக்கியை இறக்கினான்.
‘ட்டப்..’
ஒரு தோட்டா இவன் தோளை உரசியபடி சென்றது. சட்டென்று தலையை நிமிர்ந்து பார்த்தான். பின்னால் ஒருவன் நின்றிருந்தான். சடாரென புரண்டு படுத்து துப்பாக்கி பிடித்த கையை தலைக்குமேல் வீசி அவனைக் குறிபார்..... ‘ட்டப்..’. இவன் துப்பாக்கி பறந்துபோய் விழுந்தது. கையில் அமிலம் பட்டதுபோல் எரிந்தது, கையை எடுத்துப்பார்த்தான், ஒரே ரத்தம், வலி தாங்க முடியாமல் ‘ஆ...’வென கத்தியபடி கையை உதறினான்.
முழித்துக்கொண்டான். உடலெல்லாம் வேர்த்திருந்தது. ‘ட்டப்... ட்டப்...’ ஜன்னல் அடித்துக்கொண்டிருந்தது. ‘கனவு’ என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டான். கை மட்டும் நிஜமாகவே வலித்தது.விளக்கைப்போட்டு கையைப் பார்த்தான், லேசாக வீங்கியிருந்தது. கனவு கண்டு சுவற்றில் குத்தியிருப்பதை உணர்ந்தான். கையை தடவி விட்டுக்கொண்டான். ‘ட்டப்..ட்டப்..’ இன்னும் அடித்துக்கொண்டிருந்த ஜன்னலை சாத்தி தாழிட்டான். கைகளை நீர் ஊற்றி கழுவினான். குளிர்ந்த நீர்வலிக்கு இதமாக இருந்தது.
‘ட்டப்... ட்டப்...’
மறுபடி ஜன்னல்கள் அடித்துக்கொண்டன, இந்தமுறை பக்கத்து அறையில். உஷாரானான்... சட்டென்று விளக்குகளை அணைத்துவிட்டு பாய்ந்துசென்று மேசைமேல் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்தான். ‘கிளிங்..’ பாதுகாப்புவிசையை நீக்கினான். துப்பாக்கியை நீட்டியபடிபூனைபோல் மெல்ல மெல்ல அடியெடுத்து வைத்துப் போனான். ஜன்னல் இன்னும் அடித்துக்கொண்டிருந்தது. ஜன்னலை நெருங்கி சட்டென்று பாய்ந்துதுப்பாக்கியை நீட்டியபடி ஜன்னலுக்கு வெளியே பார்த்தான், தாழ்வாரம் காலியாய் இருந்தது.துப்பாக்கியை தாழ்த்திவிட்டு இடதுகையால் ஜன்னலை கவனமாக சாத்தித் தாழிட்டான். புருவத்தை நெரித்தபடி துப்பாக்கியின் பாதுகாப்புவிசையை திரும்ப பூட்டி அதனாலேயே கன்னத்தை சொறிந்துகொண்டான்.
“மடார்....”
துப்பாக்கியை படுக்கையில் போட்டுவிட்டு படுத்தவனை மறுபடி இன்னொரு சத்தம் எழுப்பியது. டக்கென்று துப்பாக்கியை வாரிக்கொண்டு கட்டிலுக்குக்கீழே குதித்தான். பாய்ந்துசென்று தாழ்வாரத்தின் விளக்கைப்போட்டான். உள்ளேயிருந்து ஒன்றும் தெரியவில்லை. கதவைத்திறந்துகொண்டு தாழ்வாரத்தில் குதித்து நின்றான். நேராக நீட்டிய இவனது கையில் துப்பாக்கி மூக்கை நீட்டிகொண்டிருந்தது.
தாழ்வாரத்தில் யாரும் இல்லை, இரண்டு பூந்தொட்டிகள் மட்டும் உடைந்திருந்தன. மெதுவாக அடியெடுத்து காலால் பூந்தொட்டியை தள்ளிப்பார்த்தான். தாழ்வாரத்தின்வெளியே எட்டிப்பார்த்தான். எதோ பின்புறமாக அசைவதுபோல் தெரிந்தது. திடீரென தாழ்வாரத்தின் படிக்கட்டை ஒட்டியிருந்த இரும்புக்கதவு அடித்துக்கொண்டது. இரண்டடி முன்னாள் வைத்து தாழ்வாரத்தின் இரும்புச்சட்டத்தில் கையை வைத்து கால்களை லாவகமாக காற்றில் வீசி தாவி கீழே குதித்தான்.
அந்த நான்கடி உயர தாழ்வாரத்திலிருந்து குதித்து எழுந்து துப்பாக்கியை கையில் பிடித்தபடி பின்புறமாக ஓடினான். அந்த அடுக்குமாடிக் குடியிருப்பின் படிக்கட்டு வந்தது, சுற்றிலும் பார்த்தவன் மேலே எட்டிப்பார்த்தான். ஏதோ அசைவதுபோல் இருந்தது. முதல் தளத்துக்கு வந்தவன் சுற்றிலும் தேடிப்பார்த்தான். ஒன்றும் சிக்கவில்லை. சரி என்று மேலே மேலே தேடி பத்து தளங்களை தேடிவிட்டான். யாரும் சிக்கவில்லை.
கால்கள் சலித்து நெஞ்சை இழுத்துக்கொண்டு மூச்சு வாங்கியது. தாகத்தில் தொண்டை ஒட்டிக்கொண்டதுபோல் இருந்தது. அருகிலிருந்த வீட்டில் தண்ணீர் குடித்துவிட்டு அப்படியே கொஞ்சம் விசாரிக்கலாம் என்று நினைத்தான். அழைப்புமணியை அடித்தான், யாரும் வரவில்லை, கதவைத்தட்டிப் பார்த்தான், “ம்ஹும்” பலனில்லை. இவன் காவல்துறை மூளையில் சந்தேகமணி அடித்தது. மெதுவாக பலகணியில் நடந்து ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தான். இருட்டில் உள்ளே ஒருவன் தூங்கிக்கொண்டிருப்பது தெரிந்தது. சந்தேகம் போய் தாகம் வந்தது, “ஏங்க..ஏங்க..” என்று கத்தினான். பலனில்லை. ‘அவன் தூங்குகிறானா, செத்துவிட்டானா?’ இவன் சந்தேக மூளை திரும்பியது. கொஞ்சநேரம் கத்திப்பார்த்துவிட்டு கோபம் அதிகமாகி ஜன்னலை ஓங்கி அடித்தான், இரண்டு மூன்று முறை அடித்தற்கு பலன் இருந்தது. உள்ளே இருந்தவன் முழித்துக்கொண்டான், விளக்கைப்போட்டுதனக்குள்எதோ பேசிக்கொண்டவனைப்பார்த்து இவன், “ஏங்க.. கொஞ்சம் தண்ணி வேணும் கதவ திறங்க” என்று அதிகாரமாய் சொன்னான். உள்ளே இருந்தவன் சாவகாசமாக எழுந்துவந்து, ஜன்னல் வழியாக இவனை முறைத்துவிட்டு ஜன்னலை சாத்திவிட்டுப்போனான்.
உள்ளே தண்ணீர் கொட்டும் சத்தம் கேட்டது, இவன் இன்னொரு ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தான். உள்ளே இருந்தவன் கை கழுவிக்கொண்டிருந்தான். இவனுக்கு அவமானமும் கோபமும் மாறிமாறி வந்தது, “ஏன்டா வெண்ணை, நான் இங்க தண்ணிக்கு தவிச்சுட்டு இருக்கேன், நீ அங்க கைய கழுவிட்டு இருக்க, மரியாதையா கதவை திறக்கறியா இல்லை உன்ன சுட்டுத் தள்ளவா?” ஜன்னலை அறைந்தபடி கத்தினான்.
உள்ளே இருந்தவன் இதைக்கேட்டு சட்டென்று திரும்பி ஓடிப்போய் விளக்குகளை அணைத்தான். ஜன்னல் வழியாக இருட்டில் இவன் உற்று நோக்கினான். உள்ளே இருந்தவனின் கரிய உருவம் லேசாக மேசையை நோக்கி நழுவி அங்கிருந்து எதையோ எடுத்தது. ‘கிளிங்..’ துப்பாக்கி விசை விலகும் சத்தம் கேட்டது. இவனுடைய காவல் மூளைக்கு புரிந்தது, ‘உள்ளே இருப்பவன் எதோ ஒரு சமூக விரோத கும்பலை சேர்ந்தவன், ஒருவேளை அவன்தான் தன்னை கொல்ல சற்று நேரம் முன்பு தன் வீட்டுக்கு வந்தவன்’. ஒரு முடிவெடுத்தவனாய் ஜன்னலுக்கு கீழே அமர்ந்தான் துப்பாக்கியை பக்கவாட்டில் நீட்டி பாதுகாப்பு விசையை நீக்கினான்.
அந்த இருட்டின் அமைதியாலும், நுணுக்கமாக கேட்டு பழகிய இவன் காதுகளாலும் அவன் காலடி ஓசையை கேட்க முடிந்தது. ‘இதோ வருகிறான், இன்னும் மூன்றடி.... இரண்டடி... அவ்வளவுதான்’ என்று கணக்குப் போட்டு சட்டென்று திரும்பி துப்பாக்கியை உள்ளே நீட்டினான். இவன் நெற்றியில் உள்ளே இருந்து நீட்டிக்கொண்டிருந்த துப்பாக்கிமுனை இருந்தது. அவன் முகத்தை ஏறிட்டான், இவன் கை துப்பாக்கியை நழுவவிட்டது. இவனுக்கு தலையை சுற்றியது. உள்ளே இருந்தவன் துப்பாக்கியை எடுத்துவிட்டு ஜன்னலை சாத்திக்கொண்டு போய்விட்டான். இவன் தளர்ந்துபோய் பலகணியின் இரும்பு சட்டத்தில் சாய்ந்து உட்கார்ந்தான்.
திடீரென எதோ நினைத்தவனாய் எழுந்து பலகணியில் எட்டிப்பார்த்தான். கீழே எதோ கூட்டமாய் இருந்தது. சட்டென்று படிகளில் தாவி இறங்கி கீழே ஓடினான். கூட்டத்தில் புகுந்துபோய் என்னவென்று பார்த்தான். எவனோ கீழே விழுந்திருந்தான். ஒருகாலை மடித்து, ஒரு காலை நீட்டி, ஒரு கையை இடுப்புக்குக் கீழே நீட்டிக்கொண்டு ஒரு கையை தலைக்கு மேலே நீட்டிஅந்த நிலையிலும் கையிலிருந்ததுப்பாக்கியை விடாமல் விழுந்து கிடந்தவனின் முகத்தை குனிந்து பார்த்தான்.
ஒரு பக்கம் ரத்தத்தில் மிதந்து கொண்டிருந்தது, இன்னொரு பக்கத்தைப் பார்த்து அதிர்ந்து போனான். ஆம் அதே முகம், இங்கே விழுந்து கிடக்கும், சற்றுமுன் ஜன்னலின் உள்ளே தெரிந்த, இவன் தினமும் கண்ணாடியில் பார்க்கும் இவனுடைய முகம். முகமெல்லாம் வேர்ப்பதுபோல் இருந்தது. இதயம் வேகமாக துடித்தது. திரும்ப படிகட்டில் ஏறி ஓடினான். ‘அவன காப்பாத்தனும்’ என்று சொல்லிக்கொண்டான். அந்த வீடை அடைந்து பலகணியில் குதித்து ஜன்னலில் எட்டிப்பார்க்க ஓடினான். ஓடிய அவசரத்தில் காலில் எதோ இடறி விழுந்தது, என்னவென்று திரும்பிப்பார்த்தான்.
இரண்டு பூஞ்சட்டிகள் உடைந்திருந்தன.
பலகணியின் விளக்கு எறிந்தது, “வேண்டாம் வேண்டாம் வராதே” என்று இவன் கத்தினான். கையில் துப்பாக்கியோடு உள்ளே இருந்தவனின் உருவம் பலகணியில் முளைத்தது. இவன்“ஓ...”வென்று அழுதபடி அவனைக் கட்டிப்பிடிக்கப் பார்த்தான், முடியவில்லை. அவன் இவனைத்தாண்டிப்போய் பலகணியின் இருப்புச் சட்டத்துக்கு வெளியே எட்டிப்பார்த்தான். “ஆங்.. அங்கதான்.. கீழ பாரு... கீழபாரு.. நான் செத்துக்கெடக்கறேன்பாரு” என்று ஆர்வமாக சொல்லியபடி இவனும் கீழே எட்டிப்பார்த்தான். கீழே தரையை துடைத்துப் போட்டதுபோல் இருந்தது.
“அய்யோ அய்யோ கீழே குதிக்காதடா...” என்று இவன் அலறியது அவன் காதில் விழுந்ததாக தெரியவில்லை. “ஓ..” வென்றுஅலறியபடிபலகணியின் இரும்புக்கதவில் இவன் தலையால் முட்டிக்கொண்டான். அவன் இவன் பக்கம் மெல்ல திரும்பிப் பார்த்தான். ஒரு எட்டு முன்னால் எடுத்துவைத்தான். இவன் ஆர்வமாக “வாடா.. வாடா.. இப்படியே படிக்கட்டு வழியா இறங்கி போயிடுவோம்...” என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே அவன் பலகணியின் இரும்புச் சட்டத்தில் கையை ஊன்றி கால்களை காற்றில் லாவகமாய் வீசி தாவி குதித்தான்.

No comments:

Post a Comment