Sunday, September 20, 2015

கூலி என்பது என்ன? அது எவ்வாறு நிர்ணயிக்கப்படுகிறது? – Retold – ஹரி

         இது கொஞ்சம் எளிமையாக வாசிப்பதற்கான வடிவம். ஒருவேளை இதில் பயனில்லாமல் போகலாம். தெரியவில்லை. வேறுவகையில் காரல் மார்க்ஸ் கண்மாய்க் கரையில் அமர்ந்து விளக்குவது மாதிரியான நெருக்கம் ஏற்பட்டால் கருத்துக்களை எளிதாக உள்வாங்கிக் கொள்ளலாம். மறுமொழிக்காகக் காத்திருக்கிறேன். தொடங்கியதைத் தொடர்வதும் தொலைப்பதும் உங்களின் எதிர்வினைகளில் இருக்கிறது. - ஹரி

கூலி என்பது என்ன? அது எவ்வாறு நிர்ணயிக்கப்படுகிறது? – Retold – ஹரி

         “உங்களுக்கு கெடைக்கிற கூலி எவ்ளோ?”ன்னு பல தொழிலாளிங்கக்கிட்ட கேட்டா ஒருத்தரு “எனக்கு ஒரு நாளைக்கி நூறு ரூபா கெடைக்கிது”ன்னும் இன்னொருத்தரு “எனக்கு எரநூறு ரூபா கெடைக்கிது”ன்னும் பல திணுசா பதில் சொல்லுவாங்க. குறிப்பான ஒரு வேலையச் செஞ்சு முடிக்க அவங்க வேலைக்கு ஏத்த மாதிரி அவங்கவங்க மொதலாளிங்கக்கிட்ட இருந்து வாங்குறதச் சொல்லுவாங்க. உதாரணமாச் சொல்லனும்னா ஒரு மீட்டர் துணி நெய்யிறதுக்கு இல்லன்னா ஒரு அச்சுக்கு தேவைப்படுற வேலையைச் செய்யிறதுக்குன்னு சொல்லலாம். ஒவ்வொருத்தரும் சொல்றது ஒவ்வொரு மாதிரி இருந்தாலும் இவங்கள்லாம் ஒரு விஷயத்த ஏத்துக்கிடுவாங்க. குறிப்பிட்ட நேரத்துக்கு இல்லன்னா குறிப்பிட்ட அளவு வேலைபாக்குறதுக்கு மொதலாளி கொடுக்குற பணம்தான் கூலி.

         இதுல இருந்து, மொதலாளி காசு குடுத்து இவங்க உழைப்ப வாங்குற மாதிரியும், காசுக்காக இவங்க உழைப்ப மொதலாளிக்கு விக்கிற மாதிரியும் தோணுது. ஆனா இது அப்படித் தோணுதே தவிர பெரிய பொய்யி. நெசத்துல, தொழிலாளிங்க அவங்களோட உழைக்கிறத் சக்தியத்தான் மொதலாளிக்கு விக்கிறாங்க. இந்த சக்திய ஒரு குறிப்பிட்ட நேரத்துக்கு மொதலாளி வெலைக்கி வாங்குறாரு. இப்புடி சக்திய வெலைக்கி வாங்குனதுக்கு அப்புறமா அந்த நேரம் முழுக்கவும் தொழிலாளிய வேலை செய்ய வெச்சி, அந்தத் தொழிலாளியோட சக்தியப் பயன்படுத்திக்கிடுதாக. தொழிலாளியோடத் சக்திய மொதலாளி வாங்குன அதே பணத்துக்கு கொஞ்சம் சீனி வாங்கிருக்கலாம், இல்லன்னா வேற ஏதாச்சும் வாங்கிருக்கலாம். நூறு ரூவா குடுத்து ரெண்டு கிலோ சீனி வாங்கிருந்தா, அந்த நூறு ரூவாதான் ரெண்டு கிலோ சீனியோட வெலை. 12 மணிநேரம் உழைக்கிறதுக்காக அவரு குடுக்குற வெலைதேன் நூறு ரூவா. அப்டின்னா காசு குடுத்து வாங்குற சீனிய மாதிரி வேலை பாக்குறதுக்குத் தேவையான சக்தியும் ஒரு பொருளுதான். சீனியத் தராசுல அளக்கறது மாதிரி உழைக்கிறத கடிகாரத்துல அளக்குறாக.

         தொழிலாளிங்களோட சொத்து உழைக்கிறத் சக்தி. அத மொதலாளியோட பணத்துக்காக பரிமாறிக்கிடுறாக. இந்த பரிமாத்தம் ஒரு குறிப்பிட்ட அளவுல நடக்குது. இத்தன நேரத்துக்கு வேலை பாக்க இத்தன ரூவா பணம் அப்டின்னு. 12 மணி நேரம் துணி நெய்ய 200 ரூவான்னு வெச்சிக்கிடுவோம். இந்த 200 ரூவாங்கறது, நம்ம வாங்குற மத்தப் பொருளுங்க எல்லாத்தையும் குறிக்குது இல்லையா? அப்டின்னா, தொழிலாளி நெசத்துல தன்னோட சொத்தா இருக்குற சக்திய மத்த பொருளுங்களுக்கு பதிலா மாத்திக்கிறாங்க. அதுமட்டும் இல்லாம, ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மாற்றம் செஞ்சிக்கிடுதாக. மொதலாளி தொழிலாளிக்கு 200 ரூவா குடுத்ததுனால கொஞ்சம் துணிமணியும், கொஞ்சம் வெறகும், திங்கிறதுக்கு சோறும் மத்த தேவைப்படுறதுகளையும் குடுக்குறாரு. அப்ப, 200 ரூவாங்கறது மத்த பொருளுகளுக்காக உழைப்ப மாத்திக்கிற அளவுன்னு புரியுது. அதாவது, உழைக்கத் தேவப்படுற சக்திய மத்த பொருளுங்களோட மாத்திக்கிறாங்க. அந்த மாத்திக்கிறதோட அதாவது பரிமாறிக்கிற மதிப்புத்தான் 200 ரூவா. 

         பணத்துல கணக்கு பண்ற ஒரு பொருளோட பரிமாற்ற மதிப்புத்தான் ஒரு பொருளோட விலைன்னு சொல்றாங்க. அப்ப, கூலிங்கறது வேலை பாக்குற சக்தியோட வெலையக் குறிக்கிறதுக்குத் தோதான பேரு. பொதுவா இத உழைப்போட விலைன்னு சொல்லப்படுது. மனுசனோட இரத்தத்தையும் சதையையும் தவிர வேற போக்கிடம் இல்லாத பொருளோட (அதுதான் உழைக்கத் தேவப்படுற சக்தி) வெலையச் சொல்றதுக்குப் பேருதான் கூலி.

         யாராச்சும் ஒரு தொழிலாளிய எடுத்துக்கிருவோம். உதாரணமா ஒரு நெசவாளி இருக்காருன்னு வெச்சிக்கலாம். மொதலாளி அவருக்கு தறியும் நூலும் குடுப்பாரு. நெசவாளி வேலை பாப்பாரு. நூலு துணியா மாறிரும். மொதலாளி அந்தத் துணிய நெசவாளிகிட்டருந்து வாங்கி அத விப்பாரு. 100 ரூபாய்க்கு விக்கிறாருன்னு வெச்சிக்கிருவோம். இப்ப நெசவாளிக்குக் கெடக்கிற கூலி துணியில ஒரு பங்கா? இல்ல 100 ரூவாயில ஒரு பங்கா? இல்ல அவரோட உழைப்பில உருவான பொருளுல ஒரு பங்கா? இல்லவே இல்ல. துணிய விக்கிறதுக்குப் பலநாளு முன்னாடியே நெசவாளி அவரோட கூலிய வாங்கிக்கிறாரு. அதாவது, இந்த துணிய வித்து நெசவாளிக்கி மொதலாளி கூலி தரல. அவரு கைக்காசுல இருந்து கூலி தராரு. தறியையும் நூலையும் மொதலாளி நெசவாளிக்கித் தராரே தவிர்த்து நெசவாளி உற்பத்தி பண்ண பொருளுங்கள இல்ல. அதுமாதிரியே நெசவாளி அவரோட உழைப்புக்குப் பதிலா வாங்கிக்கிற பொருளுங்க அவரு உற்பத்தி பண்ணுன பொருளுங்க இல்ல. மொதலாளி விக்கிற துணிய வாங்குறதுக்கு ஒருத்தருகூட இல்லாமப் போலாம். வித்தகாசு கூலி குடுக்கக்கூட பத்தாமப் போகலாம். நெசவாளியோட கூலிக்கிக் கணக்குப் பண்ணிப் பாத்தா ரொம்ப அதிகமான லாபத்துக்கு துணிய விக்கக்கூட வாய்ப்பிருக்கு. ஆனா இதுகளுக்கும் நெசவாளிக்கும் ஒரு ஒட்டுறவும் இல்ல. மொதலாளி முன்னாடியே அவருகிட்ட இருக்குற சொத்தல இருந்து ஒரு பங்குக்கு நெசவாளியோட சக்திய வெலைக்கி வாங்குறாரு. அவரு சொத்துல இன்னொரு பங்குக்கு துணி செய்ய மூலப்பொருளான நூலையும் கருவியா இருக்குற தறியையும் எப்புடி வெலைக்கி வாங்கிருக்காரோ அதே மாதிரிதான் உழைக்கிற நெசவாளியோட சக்தியையும் வாங்குறாரு. உழைக்கத் தேவப்படுற சக்தியையும் மத்ததுகளையும் வாங்குனதுக்கு அப்பறமா மொதலாளி அவருக்கு சொந்தமான உற்பத்திப் பொருளையும் கருவியையும் மட்டுமே வெச்சிக்கிட்டு துணியத் தயாரிக்கிறாரு. ஏன்னா நம்ம நெசவாளியும் ஒரு கருவியாத்தான் இருக்காரு. இந்த வகைக்கி நெசவாளியும் தறி மாதிரிதான். துணியிலையோ இல்ல அதோட வெலையிலயோ தறிக்கி என்ன பங்கோ அதே பங்குதான் நெசவாளிக்கு.

(எதிர்வினைகளை maveepaka@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்பவும்)

No comments:

Post a Comment