Wednesday, August 19, 2015

முடிவு - பாண்டூ


மிகுந்த ஆவலும்
எதிர்பார்ப்புமாய்
எப்போதும் தொடங்குகின்றன
விவாதங்கள்!

ரிவைண்டுக்கும்
ஃபாஸ்ட் ஃபார்வார்டுக்கும்
நடுவே ப்ளே பட்டனை
அழுத்திவிடாதபடி
அக்கரையாய்(!?) அறுத்துவிட்டு…

‘முடிவுறுமா தேடல்?
விடைதருமா விவாதம்?
வாருங்கள் விவாதிக்கலாம்!’ எனத்
தொடங்கிவைகிறார்
தொகுப்பாளர் பச்சோந்தி!

விவாதத்தை
முன்முடிவுகளோடு
முன்னெடுக்கின்றனர்
ஒவ்வொருவரும்!

மான்களின் கொம்புகள்
கொடூர ஆயுதமெனக்
கர்ஜிக்கிறது சிங்கமொன்று
தன் சிங்கப்பல்லை மறைத்து!

இரையாவதுதான்
இறையாண்மை என
வக்காலத்து வாங்குகிறது
வல்லூறு ஒன்று!

வலியதே வாழும்
அது வெல்லற்கரியதாய் புவிமேவுமென
கழுகொன்று
பீலிக்காட்டில் இருந்தபடியே
வீடியோ கான்ஃபரன்ஸில்
விஸ்தாரித்தது!

கடலைப் பொடி பூசி
காதுகளுக்குள்
ஓதுவார் ஓதியும்
நகர்வதாய் இல்லை நந்திகள்!

பண முதலைகளிடமிருந்து
கருப்பு யானைகளை மீட்பதாய்
பாசுரங்கள் ஒலிக்கப்படுகிறது!

மந்தியின் வாலறுந்து
மனிதனின் நாவான
பரிணாமத்தின் சாத்தியம் குறித்து
சந்தேகம் எழுப்பப்படுகிறது!

மனிதனும் மந்தியும்
சிறுத்தையும் மானும்
கொக்கும் மீனும்
விலங்கெனும் ஒரே தராசில்
சமத்துவமாய்(!?) நிறுக்கப்படுகின்றன!

அடிமுடியைத் தேடி
சில பன்றிகள் அகழ்வதும்
சில அன்னங்கள் பறப்பதுமாய்
நீள்கிறது விவாதம்…
இருத்தலைப் புறந்தள்ளி!

முடி கண்டு
பறத்தலுக்கான பாடலை
அன்னங்கள் பாடுவதாய்
தாழம்பு ஜால்ரா அடிக்க…

பொய்சாட்சியத்தின்
சாமர்த்திய வாசனையை
நுகர்ந்து
குடிபுகுகின்றன கருநாகங்கள்!

முடிவுக்கான தேடல்
முடிவுக்கு அப்பாலும்போய்
அப்பாலைக்கப்பாலைத் தத்துவமாய்
ஆளுக்கொரு திக்காய் அலையவிடுகிறது
கோடிக்கால் பூதங்களை!

தப்பித்தவறி
முடிவைத் தொட
எத்தனிக்கும் போதெல்லாம்
விடப்படுகிறது விளம்பர இடைவேளை!?

இருத்தலுக்கும் ஆகுதலுக்குமான
இழுவிசை ஊசலைக்
காட்சிப்படுத்தி; காசாக்கி;
தன் இருத்தலை
இருத்திக் கொள்கிறது ஊடக நரி!

ஆளாளுக்கு எழுப்பும்
கூச்சல் ஒலியில்
யார் காதுகளுக்கும் எட்டாமல்
கவனமாய்ப் பார்த்துக் கொள்ளப்படுகிறது…
உண்மையின் உயிர்வலி!

உண்மையின் குருதி நெடி
யார் நாசியும தீண்டிடாதபடி…
வெளிச்சமிட்டுப்
பிரம்மாண்டமாய்க் காட்டப்படுகிறது
வேர்வையின் வாச!

வெளிச்சம் படாத இருட்டறையில்….
தூக்கில்
தொங்கவிடப்பட்டுக் கொண்டிருக்கலாம்…
சிலுவையில்
அரையப்பட்டுக் கொண்டிருக்கலாம்…
தோட்டாக்களால்
துளைக்கப்பட்டுக் கொண்டிருக்கலாம்…
கழுவில்
ஏற்றப்பட்டுக் கொண்டிருக்கலாம்…
ஏன்
கருவறுத்துப்
பலாத்காரம்கூட
செய்துகொண்டிருக்கலாம்
… … …… … …
… … …
… … …
உண்மையை
அந்த விலங்குகள்!!
(2015 ஆகஸ்ட் 15 ஆம் நாள் அருப்புக்கோட்டையில் நடைபெற்ற படைப்பரங்கில் வாசிக்கப்பெற்ற கவிதை)

No comments:

Post a Comment