Tuesday, August 18, 2015

கௌரவம் - அரவிந்த்


ஈஸ்வரி எப்பொழுதும் தன்கடையை ஏழுமணிக்குத்தான் திறப்பாள். ஆனால் இன்று ஆறுமணிக்கெல்லாம் திறந்ததுடன், வேலைகளையும் வேகவேகமாக செய்துக்கொண்டிருந்தாள். மூன்றுவகைசட்னி, பாசிப்பருப்புசாம்பார், துவயல் எல்லாம் சமைத்துவிட்டு, இட்லியை வேகவைக்கத் தொடங்கினாள். குடிநோயால் கணவன் இறந்தபின், ஈஸ்வரிஇந்த இட்லிகடையை கடன்வாங்கி ஆரம்பித்தாள். பத்துவருடங்களாக இந்தகடைக்கு, அவள்தான்முதலாளி, வேலையாள் எல்லாம். மாலைநேரங்களில் மட்டும் அவளுடைய இரண்டு மகள்கள் உதவிக்கு வருவார்கள். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, மூத்தவளை தாய்வழியில் நெருங்கிய சொந்தத்தில் கட்டிக்கொடுத்தாள். மாப்பிள்ளை ஆட்டோ ஓட்டுகிறான். மகளை அவன் வசதிக்கேற்ப நன்றாகப் பார்த்துக் கொள்கிறான். இதுவரை பிரச்சனை இல்லை. அவள் யோசனையெல்லாம், இளயவள்மேல்தான். இன்று அவளை பெண்பார்க்க வருகின்றனர். ஒருமணிநேரம் முன்னரே கடையைத் திறக்க இதுதான் காரணம்.
பெண்பார்க்கும் படலம் இரண்டு நாட்களுக்கு முன்தான் அவசரம் அவசரமாக முடிவு எடுக்கப்பட்டது. அப்படி ஒன்றும் இளயவளுக்கு வயதாகி விடவில்லை. போனவருடம்தான் பத்தாவது முடித்தாள். அதற்காக காரணமில்லாமல் இல்லை. இளயவள் பள்ளிக்கு செல்கையில், அந்தப்பகுதி இளைஞன் ஒருவனுடன் பழக்கம் ஏற்பட்டு, பின் இருவரும் ஊர்சுற்றுதலும் நடந்திருக்கிறது. ஒருநாள் அவன், அவளைப் பார்க்க வீடுவரை வந்ததாகவும், உள்ளே இருவரும் வெகுநேரம் பேசிக்கொண்டிருந்ததாகவும், அக்கம் பக்கத்தினர் தன்காதுபடப் பேசும்போதுதான், ஈஸ்வரிக்கு இந்த விவகாரமே தெரிந்தது. போனவாரம், ஈஸ்வரி வீட்டில் இருக்கும் சமயம், குடிபோதையில், அவளைப் பார்க்க வீட்டிற்கே வந்துவிட்டான். ஈஸ்வரி கோபத்தில் அவனை அடித்து தெருவில் தள்ள, அவன் போதையில் தாயையும், மகளையும் ஏச, தெருவில் அவர்கள் சண்டையை வேடிக்கை பார்க்கக் கூட்டம் கூடிவிட்டது. அங்கு ரோந்தில் இருந்த போலீஸார், அவனைக் கண்டித்து அனுப்பி வைத்தனர். இதனால் பள்ளிப் படிப்பை நிறுத்தி விட்டாள். ரேசன்கடை, மளிகைகடை, குழாயடி, பால்டிப்போ என எங்குமே ஈஸ்வரியால் முன்பு போலச் செல்ல முடியவில்லை. யார் முகத்தையும் பார்க்காமல், யாரிடமும் பேச்சுக் கொடுக்காமல் தலையைக் குனிந்தே நடக்க வேண்டியிருந்தது. ‘இவமக எடம் கொடுக்கலைன்னா, அவே வீடுவரைக்கும் வருவானா?’ என தெருமுழுதும் ஈஸ்வரியைப் பற்றியே பேச்சு நிகழ்ந்தது. ஈஸ்வரியால் முன்புபோல் கடையில் வேலை செய்ய முடியவில்லை. ‘இத்தணநாள் சேத்து வச்ச கெளரவம் ஒரேநாள்ல போச்சே’ என்று தனக்குள்ளே பொருமிக் கொண்டிருந்தாள். மகளின் உடனடித் திருமணம்தான், அவள் குடும்பத்தின் கெளரவத்தை மீட்டெடுக்கும் ஒரே தீர்வாகப்பட்டது. தன்தம்பியிடம் எல்லா விவரத்தையும் சொல்லி, எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரத்தில் ஒருவரனைப் பார்க்கச் சொன்னாள். அப்படியமைந்ததுதான் இன்று பெண்பார்க்க வரும் வரன்.
மாப்பிள்ளை வீட்டார் பதினோரு மணிக்கெல்லாம் வருவதாகச் சொன்னதால், ஒன்பது மணிக்கு கடையை மூடிவிட்டாள். தேவையான பொருட்களை நேற்றே வாங்கி வைத்து விட்டாள். பெண்னை ஈஸ்வரியின் அக்காமகள்கள், நீராட்டு விழாவில் ஈஸ்வரியின் தம்பி சீராகக் கொடுத்த பட்டை உடுக்கச் செய்து அலங்கரித்திருந்தனர். அவர்கள் வருவதற்குள் வீட்டைச் சுத்தம் செய்வதுதான் பாக்கி. ஒரே ஒரு அறையும், அடுப்படியும் மட்டும் உள்ள வீட்டை சுத்தம் செய்வது அவளுக்குப் பெரிய காரியமில்லை. பத்துமணிவாக்கில் சிலநெருங்கிய சொந்தங்கள் வரத்தொடங்கின. பதினொரு மணி நெருங்கையில் அவளுக்குப் பயமும், கொஞ்சம் அவுமானமும் தொற்றத் தொடங்கியது. ‘தம்பி எல்லாத்தையும் சொல்லிருப்பான், அவுங்களும் அக்கம் பக்கத்துல விசாரிச்சுருப்பாங்க, எப்பிடி மாப்பிள்ள வீட்டுக்காரங்க மொகத்துல முழிக்கிறது. அதக்காரணம் வச்சு, பவுனும் கூடப்போடச் சொன்னா?’.
பதினொன்றரை மணிக்கு மாப்பிள்ளை வீட்டார் வந்தனர். மாப்பிள்ளை பெண்னைப்போல் மாநிறம். அதேபகுதியில் ஒருலேத்தில் வேலை செய்கிறான். மாதம்பத்தாயிரம் சம்பாதிக்கிறான். பெண் காப்பித் தட்டுடன் வந்தாள். அவள் முகம் அழுது அழுது வீங்கிப் போயிருந்தது. கண்களும் உள்புறமாக அமுங்கியிருந்தன. இவற்றை ஓரளவுக்கு முகப்பவுடர் மறைத்தாலும், கீழ்உதட்டருகே இருந்த ரத்தக்காயம் நன்றாக தெரிந்தது. அதனால் முந்திய இரவு என்ன நடந்திருக்கும் என்பதை யூகிக்க முடிந்தது. கல்யாணம் பேசி முடிக்கப்பட்டு, மடப்புறம் மாரியம்மன் கோவிலில், அதேமாதம் ஒருமுகூர்தத்தில் நல்லபடியாக நடந்து முடிந்தது. கையில் கழுத்தில் இருந்ததைப் போட்டு சீர்செய்துவிட்டாள். மாப்பிள்ளை வீட்டார் ஏற்பாடு செய்திருந்த வாடகை வேனில், தெருக்காரர்களை கல்யாணத்திற்கு அழைத்து வந்தது, அவளுக்குக் கெளரவமாக இருந்தது.‘ அந்தக் குடிகாரநாய் வந்து ஏதாவது பிரச்சண பண்ணாம பாத்துக்கனும்’ என்று தம்பியிடம் சொல்லிக் கொண்டிருதாள். அப்படி எதுவும் நடக்கவில்லை.

ஒரு வருடம் கழித்து, இளயவளுக்கு ஆண்குழந்தை பிறந்திருந்தது .அதை வீட்டு வாசலில் வைத்துக் கொஞ்சிக் கொண்டிருந்தாள். அணைவரையும் திரும்பிப் பார்க்கவைக்கும் நோக்கில், சத்தமாக தன்பேரனைக் கொஞ்சினாள். எல்லோரும் ஈஸ்வரியையும், அவள் பேரனையும் பார்த்துக் கொண்டிருந்தனர். குழந்தை சிரித்தது. அதைப் பார்த்து மகளும் சந்தோஷத்தில் சிரித்தாள். ஈஸ்வரிக்கு இப்போது எல்லாக் கவலைகளும், அவுமானங்களும் பறந்து போய்விட்டது போலிருந்தது. இனி ஈஸ்வரி, ரேசன்கடை, மளிகைகடை, குழாயடி, பால்டிப்போ என எங்கும் கெளரவமாகச் செல்லலாம் என நினைத்தாள். இதை நினைத்துத்தான் ஈஸ்வரி இப்போது பேரனைக் கொஞ்சும் சாக்கில் சிரித்துக் கொண்டே இருக்கிறாள்.
(2015 ஆகஸ்ட் 15 ஆம் நாள் அருப்புக்கோட்டையில் நடைபெற்ற படைப்பரங்கில் வாசிக்கப்பெற்ற /மின்னஞ்சல்/ சிறுகதை)

No comments:

Post a Comment