Friday, November 14, 2014

கலந்துரையாடல் - கடிதம் 8 - பாரதி சே

தோழர் மதிகண்ணன் அவர்களுக்கு
தம்பி இரமேஷ் எழுதுவது.
இங்கு வேலைப்பளு மற்றும் பணிக்கான தேடுதல்பளு காரணமாக குறித்த நேரத்தில் பதில் எழுத முடியாமைக்கு வருந்துகிறேன்.
தாங்கள் பதிவுசெய்த தலைப்புக்குப் பொருந்தி வருவது முதலும் முடிவும்தான். நடுப்பகுதி என்னவோ பொதுக்கருத்தைத் துரத்த ஆரம்பித்து, பின் மீண்டும் இணைக்கப்பட்டது போன்ற உணர்வு. மேலும் தாங்கள் "கருத்து மற்றும் பொருள் முதல் வாதக்கோட்பாடு"களை முன்வைத்து சொல்லவரும் கருத்தாழம், அதன் பொருள் புரியாததால் எனக்கு விளங்கவில்லை. அதனைப் பற்றி விளக்கினால் நன்றாக இருக்கும்.
 
பொதுவாக பாவம், புண்ணியம் என்ற வரையறை நல்லவை, கெட்டவை என்ற கோட்பாடுகளுடனே முன்னிறுத்தப்படுகின்றன. ஆனால் அதற்கான சரியான வரையறை என்பது உருமாறிக்கொண்டோ அல்லது உருமாற்றப்பட்டுக்கொண்டோ வந்துகொண்டிருக்கின்றது. "இடக்கரடக்கல்" என்பது என்னவென்று புரியவில்லை.  இடத்திற்கேற்பவே பொருள் கொண்டேன்.
நானறிந்தவரை சமூகத்தில் ஒவ்வொருவருக்கும் ஒரு அடையாளம் தேவைப்படுகின்றது. இது நான் பல சமயங்களில் அனுபவப்பட்ட உண்மை. அந்த அடையாளங்கள் ஆன்மீகம், நாத்திகம், மதம், சாதி, மொழி, தொழில், கொள்கைப்பிடிப்பு, கௌரவம், பகட்டு, புகழ், ஆராய்ச்சி, படிப்பு எனப்பல பரிமானங்களில் உலவுகிறது. இதற்குப் பங்கம் நேரும்பொழுது, அதற்கு முரண்படும் கூறுகளை பாவம் என்றும், சாதகமான கூறுகளை புண்ணியம் என்றும் பார்க்கின்றனர். மனிதன் எந்தவொரு சமயத்திலும் தன் அடையாளத்தினை நிலை நிறுத்த அரும்பாடுபடுகின்றான்.
வரலாற்றில் பாவ புண்ணிய ஒருங்கமைவுகள் மயில் பீலிகளால் மட்டுமல்ல, கிடைக்கும் ஆட்காட்டி விரல்களாலும் அவசரமாகக்கூட திருத்தியெழுதப்பட்டிருக்கின்றன. இந்தத்திருத்தலுக்கு ஏற்ப குழுக்களின் உறுப்பினர்கள் மாற்றப்படுகின்றனர் அல்லது குழுவே மாற்றப்படுகின்றது. ஆனால் அடையாளம் மட்டும் அப்படியே இருக்கிறது. இந்த அடையாளமே குழுவைத் தீர்மானிக்கின்றது. அடையாளமழித்த ஒரு மனிதனை அடையாளம் காட்டுவதென்பது சற்றே கூடுதல் கடினம். இந்த அடையாளத்தை நிலைநிறுத்தவே கட்டுப்பாடுகளும், கசையடிகளும் கையாளப்படுகின்றன. இந்த அடையாளத்தினைத் துறந்து தனக்கான அடையாளத்தினை மீட்டெடுக்கவே அதற்கு எதிரான போராட்டங்களும், கோட்பாடுகளும் இயல்பாகவே எழுகின்றன. இந்த அடையாளங்கள் தன்னை மட்டும் சார்ந்திராமல், பிறருக்கான எல்லையில் நுழைய எத்தனிக்கும்பொழுதுதான் இந்த வினைகளும், எதிர்வினைகளும் எழுகின்றன.
தோழமையுடன்,
பாரதி சே (தம்பி இரமேஷ்)

சென்னை

No comments:

Post a Comment