அன்புத்
தோழமைக்கு வணக்கத்துடன் விஜி
பாவம் புண்ணியம் கருத்தாக்கம் குறித்த தங்கள் (தோழர்
மதிகண்ணனின்) கடிதம் கண்டேன். பாவ புண்ணிய கருத்துருவாக்கம் செயல்தளத்தில் நீர்த்துப் போய் அவரவர் வசதி தேவைக்கேற்ப
அவற்றை வளைத்துக் கொள்வதாய் சூழல் மாறியுள்ள போதிலும்கூட இன்னமும் கருத்தியல் தளத்தில்
அவை வலுவாகவே வேரூண்றி நிற்கின்றன. தனிமனிதன் தனது செயல்பாடுகளில்
பாவ புண்ணியத்தைக் கருதவில்லை எனினும் சமூகமாகச் செயல்படும் சூழலில் பெயரளவிலாவது அவற்றைக்
கைக்கொண்டே வருகிறான்.
அதே நேரத்தில் பாவ புண்ணியக் கருத்தாக்கங்களுக்கு இறையோடு இருந்த தொடர்பு
பலவீனப்பட்டு,
சிதைந்து வருவது நிதர்சனமாகியுள்ளது. நித்யானந்தா
குறித்த புகார் எழுகையில் பெரிதளவில் அந்தப் பாவம் பேசப்படவில்லை. அது இறையோடு தொடர்புபடுத்திப் பார்க்கப்படவுமில்லை. (அவர் பாவம்… தனிமனிதர் என்ன செய்வார்?) அது தனிமனித ஒழுக்க்க் கேடாக
மட்டுமே பார்க்கப்பட்டது. சத்யசாய்பாபாவின அறை திறக்கப்பட்டு,
கோடி கோடியாய்ப் பதுக்கிய பணம் குறித்த தகவல் வெளியாகையில் அந்தப் ‘பாவம்’ பெரிதாகக் குற்றம் சாட்டப்படவே இல்லை. இந்தப் பாவங்களுக்காக இறைவன் தண்டனை
கொடுப்பான் / கொடுத்தான் என சிறுவர்கள்கூட நம்பவில்லை. காலங்காலமாகவே பாவம் X புண்ணியம் என்ற நம்பிக்கை கெட்டது X நல்லது,
செய்யக்கூடாதவை X செய்யக்கூடியவை வேறு வேறு சொற்களின் வழி என நிலவவே செய்கிறது.
(கடைப்பிடிக்கப்டாதபோதும்கூட)
அந்த நம்பிக்கையை தன் / தங்கள் நலனுக்காகப் பயன்படுத்திக் கொண்ட கூட்டமே அவற்றை இறையோடு தொடர்புபடுத்தி இறைமறுப்பாளர்களை ‘பாவி‘களாகச் சித்தரித்தது. (அதில் வெற்றியும் பெற்றது.) வரலாறு நெடுகிலும் பார்த்தால் இறையைப் புறக்கணித்த நாத்திகர்களே பாவபுண்ணியத்தைக் கடைப்பிடித்து வருகின்றனர் – நல்லது கெட்டது என்ற மனசாட்சியின் அடிப்படையில்.
நிலவி வரும் முதலாளித்துவ சமூக அமைப்பில் துறவிகள் (மண்ணாசை,
பெண்ணாசை, பொன்னாசை துறந்தவர்கள்)கூட கோடிக்கணக்காய் சொத்து வைத்திருப்பது பாவமாய் நினைக்கக்கூட தோன்றாத அளவு இயல்பாகிப்போனபோது, அம்பானிகளும் டாடாக்களும் லாப வரையறைக்குள் வரவேமாட்டார்கள்.
சொல்லப்போனால் தனிச்சொத்து ஒழியாதவரை பொருளியல் குற்றங்கள் பெரிதளவு பாவமாக
பார்க்கப்படாமல் அவை வாழ்விற்கான அடிப்படை குணமாகவே பார்க்கப்படும். எனவேதான்
பொருளியல் குற்றங்கள் (லஞ்சம், ஊழல்) வளர்ந்து வருகின்றன.
இத்தகைய சமூக அமைப்புக்குள் பொருளியல் தேவை, அளவு
குறித்து நாம் கொள்ள வேண்டிய நிலைப்பாடு பற்றிய கேள்வி அவசியமாகிறது. எந்தளவு
பொருளைத் தேடுதல், எந்தளவு பொருளைச் செலவிடுதல், எவ்விதம் பொருளைப் பயன்படுத்துதல்
போன்ற கேள்விகளுக்கு நமக்குள் பதில் காண தொடர்ந்து விவாதிப்போம்
தோழமையுடன்
விஜி
No comments:
Post a Comment