திருநெல்வேலி, கன்யாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்கள் உள்ளிட்ட தென் தமிழக மக்களுக்கும் தமிழகத்திற்கும் பேராபத்து விளைவிக்கும் கூடங்குளம் அணுஉலையை மூடக் கோரி பகுதி மக்களின் பேராதரவுடன் 3வது கட்ட போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறீர்கள். போராட்டக் குழுவிற்கும் வீரஞ்செறிந்த வகையில் போராடிக் கொண்டிருக்கும் மக்களுக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்- லெனினிஸ்ட்) சார்பாக போராட்ட வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
கூடங்குளம் அணு உலை அமைக்கும் திட்டம் அறிவிக்கப் பட்ட 1988 முதல் அணு உலைத் திட்டத்தை எதிர்த்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்- லெனினிஸ்ட்) போராடி வருவதை தாங்கள் அறிந்திருப்பீர்கள். தற்போதய போராட்டத்தின் போதும் எமது கட்சியின் சார்பில் இடிந்த கரை உண்ணாவிரதப் போராட்டத்தின்போதும் நேரில் பலமுறை வந்திருந்து எமது ஒருமைப் பாட்டை தெரிவித்து வருகிறோம். நெல்லையிலும் எமது கட்சியின் சார்பாக எதிர்ப்பு நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளோம்.
வெளிநாட்டு, உள்நாட்டு பெருந்தொழில் குழுமங்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் மத்திய அரசு கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு போராட்டம் தொடர்பாக ஆணவம்மிக்க வகையில் நடந்து கொள்கிறது. கார்ப்பரேட் கொள்ளையர்கள் நடத்தி வரும் நிலம், கனிம வளக்கொள்ளைகளுக்கு வளர்ச்சி, முன்னேற்றம் என்ற பேரால் ஊக்கமளித்து வரும் மத்திய அரசு, காரப்பரேட் கொள்ளைகளுக்கு எதிராக இந்தியா முழுவதும் போராடி வரும் மக்களின் போராட்டங்களை மூர்க்கத்தனமாக ஒடுக்கி வரும் அதே அணுகுமுறையைத் தான் கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டம் தொடர்பாகவும் கடைப் பிடித்து வருகிறது. தமிழ்நாடு அரசாங்கமும் இந்த அழிவுகரமான பாதையிலிருந்து மாறுபட்டு நிற்பதாக தெரியவில்லை. இந்திய வளங்களைக் கொள்ளையடிக்க இந்திய மக்களை பேராபத்தில் தள்ள நடக்கும் மிக மோசமான கார்ப்பரேட் யுத்தத்திற்கெதிரான மக்கள் போராட்டமே கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு போராட்டம் என எமது கட்சி கருதுகிறது. எனவை இடிந்த கரையின் போராட்டம் இந்தியாவின் போராட்டம் என்று எமது கட்சி வாழ்த்துகிறது.
இடிந்தகரை-கூடங்குளம் மக்களின் அணு உலை எதிர்ப்புப் போராட்டத்தை வலுப் படுத்துகிற வகையில், கூடங்குளம் அணு உலையை மூடக் கோரி வரும் அக்டோபர் 30ம் தேதி எமது கட்சி சார்பில் தமிழ்நாடு முழுவதும் ‘அணு உலை எதிர்ப்பு நாள்’ நிகழ்ச்சிகள் நடத்துவதென எமது கட்சியின் மாநிலக் கமிட்டி முடிவு செய்துள்ளது. சென்னை, தஞ்சை,சேலம், கோவை, நெல்லை உள்ளிட்ட முக்கிய நகரங்களிலும் பிற பகுதிகளிலும் எதிர்ப்பு நிகழ்ச்சிகள் நடத்த உள்ளோம். 30-10-2011 அன்று கோவையில் தொழிலாளர்களின் பெருந்திரள் எதிர்ப்பு நிகழ்ச்சி ஒன்றை நடத்த உள்ளோம். அந்நிகழ்ச்சியில் எமது கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் தோழர் எஸ். குமாரசாமி கலந்து கொள்கிறார். 30-10-2011 அன்று நெல்லையில் ஆர்ப்பாட்டம் நடத்துவதோடு எமது கட்சி மாநிலச் செயலாளர் பாலசுந்தரம் மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் போராட்டம் நடந்து கொண்டிருக்கும் இடிந்தகரை-கூடங்குளம் பகுதிக்கு நேரில் வருகை தந்து ஆதரவு தெரிவிப்பதெனவும் முடிவு செய்துள்ளோம்.
(கட்சியின் மாநிலச் செயலர் தோழர் பாலசுந்தரம் அவர்களின் வாழ்த்து மற்றும் ஆதரவுக் கடிதத்திலிருந்து)
No comments:
Post a Comment