பெரிய
கிழவர் ஆழ்ந்த சிந்தனையிலிருந்தார். நல்ல உயரம். கருத்த மேனியுடன் பார்க்க அதிர்ஷ்டக்காரர்
மாதிரி இருந்தார்.
எனக்கு
புகைக்க வேண்டும் போலிருந்தது. நன்கு விரோதமாகியிருந்த ஒரு கிழவரிடம்
சிகரெட் கேட்டேன். பாராட்டுக்கு உள்ளாகியிருக்கும் கடைக்குட்டியாகிய
எனக்கு சிகரெட் கொடுத்து பெருங் கிழவரது மகிழ்ச்சிக்கு ஆளாவதா? அவர் மறுத்தது மட்டுமல்லாமல் மயிலிறகால் என்னை விளாசி விட்டார். இந்த சம்பவம் நடந்து கொண்டிருந்த போதே மேற்கு வீட்டைச் சேர்ந்த கிழவர் வந்து
விட்டார். பேரண்பில் அவரது மண்டை பளபளத்தது.
’இன்பம் வந்து விட்டது’ பெருங்கிழவர் தனக்குத் தானே சொல்லிக்
கொள்வது போலச் சொன்னார். சற்று நேரத்தில் பக்கத்து வீட்டுக் கிழவரும்
வந்து விட, விசாரணை தொடங்கியது. பெரிய கிழவர்
தொண்டையைக் கனைத்துக் கொண்டே கரடியின் ரோமத்தாலான தன் அரியாசனத்தில் அமர்ந்தார்.
“கேடுகெட்ட
சனியன்களே! இந்தக் கூட்டம் எதற்காக
என்பது குறித்து முடிவுரை
எதுவும் வழங்க அவசியமில்லை என்றே நினைக்கிறேன். இதோ இவர்கள் இருவர் மீதும் பாராட்டு சுமத்தப்பட்டிருக்கிறது.
கூரை வீடுகளின் விதிகளுக்குப் புறம்பாக இவர்கள் நடந்து கொள்வது மட்டுமல்லாமல்
பெருங்கிழவனாகிய என்னை மரியாதையாக நடத்துகிறார்கள். எனக்குள்
அதிர்ஷ்டம் இன்னும் இருக்கிறது என்று பிரச்சாரம் செய்கிறார்கள். அது மட்டுமல்லாமல் இவர்கள் அடிப்படையில் நஞ்சுண்டபுரத்திலிருக்கும் கூரை வீட்டைச்
சேர்ந்தவர்கள். ஏற்கனவே அந்த வீட்டுக் கிழவர் என்னிடத்தில் அன்பாக
நடந்து கொள்பவர். பல முறை நமது சவத்தெழவுக் குழு அவரைக் கூப்பிட்டுப்
பாராட்டியிருக்கிறது. இப்படிப்பட்ட சூழலில் இவர்களை விசாரிக்க
வேண்டும் என்று பலரும் கருதியதால் இந்தக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருக்கிறேன்.
இவர்களுக்கு என்ன மாதிரியான இன்பத்தை அளிக்கலாம் என்பதை குழு முடிவு
செய்யுமாறு வேண்டா வெறுப்பாகக் கேட்டுக் கொள்கிறேன்” என்றார்.
பெருங்கிழவர்
பேசி முடித்ததும் வட்டத்துக்குள்ளிருந்த எங்கள் இருவரைத்
தவிர அனைவருக்கும் இதமான சூட்டில் ஆமைக்கால் சூப் வழங்கப்பட்டது.
நீண்ட
அமைதிக்குப் பிறகு தெற்கு வீட்டுக்காரர் ஆரம்பித்தார்: “வெறுப்புக்குரிய சனியன்களே! கேடு கெட்ட பெருங்கிழவர் சொன்னது போல இவர்களது
செயல்கள் நமக்கு சாதகமாகவே இருக்கின்றன. இதோ இந்தக் கிழவர் இருக்கிறாரே,
இவர் ‘கொலை லேகிய பன்னாடைக் கும்பல்’ என்ற பெயரில்
தரித்திரங்களைப் பிரச்சாரம் செய்வதாகக்
கூறிக் கொண்டு கூரை வீட்டின் தொண்டரான பெருங்கிழவரைத் தொடர்ந்து
பாராட்டி வருகிறார். அதுமட்டுமல்லாமல் இதோ இந்தக் கடைக்குட்டியைப் போல பல கடைக் குட்டிகளுக்கு
மூளைச் சலவை செய்து வருகிறார். கூரை வீட்டின் விதிகளுக்கு அடங்கி
இருப்பதே கடைக்குட்டிகளின் கடமை என்பதை ஏற்காத இவனைப் போன்றவர்களால் கூரை வீடு பலப்பட்டுவிடும்.
எனவே இவர்களுக்கு கடுமையான இன்பமளிக்க வேண்டும்” என்றார்.
“பாராட்டிவிட்டோம்
பாராட்டிவிட்டோம் என்று தாலாட்டுப் பாடுகிறீர்களே, எங்கள் பாராட்டு என்ன என்பதைக் குறித்து சபை யோசித்ததுண்டா?” எங்கள் நஞ்சுண்டபுரத்துக்காரர் கேட்டார்.
“என்ன
உங்கள் பாராட்டு? சவத்தெழவுக்
குழுவுக்குத் தெரியாததா? குழுவின் தொண்டரான எனக்கு துன்பவியல்
தெரியாது என்பது தானே?” பெருங்கிழவரின் குரல் கொந்தளித்தது.
”அதுமட்டுமல்ல. உங்களுக்குள் அதிர்ஷ்டம் இருக்கிறது.
உங்கள் அதிர்ஷ்டம் கூரை வீட்டை பலப்படுத்தும். சபையோரே! உணர்ந்து கொள்ளுங்கள்.”
“நஞ்சுண்டபுரத்துக்காரரே. நான் அடிப்படையில் வெட்டியான் என்பது உங்களுக்குத் தெரியும்.
வெட்டியான் வேலை எனக்குப் பல துன்பவியல் கோட்பாடுகளைக் கற்றுக் கொடுத்திருக்கிறது.
என்னைப் பாராட்ட எவருக்கும் தகுதியில்லை.’’
“தீமை. எவருக்கும் தகுதியில்லை என்று உங்களால் எப்படிக்
கூற முடியும்? பிறரது பாராட்டுகளுக்குக் காது கொடுக்காதவன் எப்படி
தரித்திரக் காரனாக இருக்க முடியும்? உங்களுக்குள் அதிர்ஷ்டவியல்
இருப்பது இதன் மூலமே வெளிப்படுகிறது.”
“சபையோரே! நான் தரித்திரக்காரனே இல்லை என்று கூறும்
இவரது யோக்கியதை என்ன? கூரைவீட்டு விதிகளுக்குப் புறம்பாக இவருக்கு
மாடி வீடுகளிலிருந்து தங்கம் வருகிறது என்ற பாராட்டை அவர் மறந்து விட்டார் போலும்.
என்ன ஆட்டுத்தாடிக் கிழவரே! நீங்கள் தானே விசாரித்தீர்கள்?
நீங்களுமா மறந்து விட்டீர்கள்?”
இப்போது
மேற்கு கூரை வீட்டுக்காரர் குறுக்கிட்டார்: “இது வீண் வாதம். அவர் பாராட்டற்றவர் என்பதை சபையிடம் நிரூபித்தபின் அது குறித்து பேசுவது முறையல்ல” என்றார்
“உங்கள்
துன்பக் குறைபாட்டால் இவ்வாறு கூறுகிறீர்கள்.”
“எனக்கா
துன்பக் குறைபாடு? தரித்திரம்
வேண்டுமானால் இதுவரை சேகரம் செய்த தரித்திரங்களை துறக்க வேண்டும் என்ற உங்கள் தத்துவத்துக்கும் துன்பவியலுக்கும்
என்ன தொடர்பு எனக்கூற முடியுமா? துன்பவியலுக்கு எதிரான கருத்து
இது என்பது சபைக்கு வேண்டுமானால் தெரியாமலிருக்கலாம். ஆனால் சுடுகாட்டு மண்டையனான என்னால்
இதையெல்லாம் கேட்டுக் கொண்டு பொறுமையாக இருக்க முடியாது. இவர்கள்
இருவரும் செய்த குற்றமென்ன? இந்தக் கடைக்குட்டி நஞ்சுண்டபுரத்துக்
கிழவரது உருவத்தை உங்கள் மயிலிறகுகளும் பஞ்சுக்கத்திகளும் ஏற்படுத்திய ரணத்தை உணர்த்தும் விதமாக ஓநாயின் இரத்தத்தைக் கொண்டு ஓவியம்
வரைந்தான். அதை தன் கொலை லேகிய பன்னாடைக் கும்பலின் வீட்டுச்
சுவரில் வெளியிட்டார் இந்தக் கிழவர். அவ்வளவு தானே? இது தவிர பெருங்கிழவர் மீது சில நேரடிப் பாராட்டுகளை வைத்து இருவரும் ஓவியம்
வரைகிறார்கள். பாராட்டுகளை ஏற்றுக் கொள்ளத் தயங்குபவர் எப்படித்
தொண்டனாக இருக்க முடியும்? பாராட்டுகளுக்கு பதில் கொடுங்கள். முடிந்தால் அவர்களைப்
பாராட்டி நீங்களும் பதிலோவியம் வரையுங்கள்.”
“உன்னைக்
குழுவிலிருந்து நீக்குகிறேன்” என்று பெருங்கிழவர் கத்தினார்.
“நீர் சரியான
intelectual!” என பதிலுக்குக் கத்தினார் சுடுகாட்டு மண்டையன்.
பெருங்
கிழவர் தன் நல்லக்கை ஒருவரை அழைத்து “சுடுகாட்டு மண்டையன்
என்ன சொல்கிறான்?” என்று வினவ, நல்லக்கை “அறிவு
கெட்ட முண்டமான உங்களை அவர் உங்களை அறிவுச் சிகரம் என்று வாழ்த்துகிறார் தொண்டரே”
என்றது.
இப்போது
எங்களுக்கு அருகில் மற்றொரு ஆணியாசனம் போடப்பட்டது. மேற்கு வீட்டுக் கிழவர் எனக்கு சிகரெட் கொடுப்பதற்காகவே வந்து
சேர்ந்தார் போலும்!
சுடுகாட்டு
மண்டையன் என்று வெறுப்போடு அழைக்கப்படும் அந்தக் கிழவர் தரித்திரவியலில் கொட்டை
தின்று பழம் போட்டவர் என்றுதான் கூற வேண்டும். அவரது பெயருக்குப் பின்னால் ஒரு
கதையே உள்ளது. தரித்திர உலகின் மிக எளிய பயிற்சியான நாற்பத்தெட்டு நாட்கள்
சுடுகாட்டில் கழித்து எரியும் பிணத்துடன் எருமை இரத்தம் குடிக்கும் பயிற்சியினை முடித்த ஒரே தரித்திரவான் அவர்
மட்டுமே. பெருங்கிழவரை விட அவரே இழிவானவர் என்று தரித்திர உலகின் ஒலிப்பெருக்கிகள்
இரகசியமாகப் பாடிக் கொண்டிருந்தன. எனவே
அவர்மீது பெருங்கிழவர் மிகுந்த அன்பு வைத்திருந்தார். அதுமட்டுமல்லாமல்
பெருங்கிழவரது நிறைகளை முதுகுக்கு நேரே எப்போதும் கூறுவதால் அவருக்குத் தக்க பாடம்
புகுட்ட நேரம் பார்த்துக் கொண்டிருந்தார் பெருங்கிழவர். பாராட்டுக்கு ஆளாகியிருந்த என்னை தரித்திரக்காரனாக மாற்றிய ஆசானே சுடுகாட்டு மண்டையன்தான் என்பதால் இந்த
சந்தர்ப்பத்தை பெருங்கிழவர் பயன்படுத்திக் கொண்டார்.
ஆட்டுத்தாடிக் கிழவர்
இப்போது பேசலானார்:
“வெட்கம்கெட்ட
சனியன்களே! தரித்திர உலகத்திற்கென சில ஒழுங்கீன விதிகள் இருக்கின்றன. அதற்கு
அனைவரும் கட்டுப்பட்டவர்கள். பாராட்டுக்கு உள்ளாகியிருக்கும் இவர்களது
முன்னுரையைக் கேட்டு பின்பு சபையின் அரைமனதுத் தீர்மானத்தை
நிறைவேற்றலாம். அதுதான் பிணநாயகம்”
“நஞ்சுண்டபுரத்துக்
கிழவர் ஒருமுறை ‘அதிர்ஷ்டக்காரனால்
தரித்திரவானாக இருக்க முடியாது’ என்று சொன்னார். அது பெருங்கிழவரைக் குறிப்பிடுவதாகக் கூறி அவரை வீட்டைவிட்டு வெளியேறச் சொன்ன
உங்கள் சவத்தெழவுக் குழுவா பிண நாயகம் குறித்துப் பேசுகிறது? இறுதியாக ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்கிறேன். கொலையையும்
இலேகியத்தையும் கொண்டாடத் தெரியாத தரித்திரவான்கள் தரித்திர உலகின் வரப்பிரசாதங்கள்.” என்றார் எங்கள் நஞ்சுண்டபுரத்துக்காரர்.
பெருங்கிழவர்
தன் ஆசனத்திலிருந்து எழுந்து நின்று பேசினார்:
“சபையோரே! ‘கொலை லேகியம்‘ என்ற பெயரில் சவத்தெழவுக் குழு உறுப்பினர்கள் மீது வீண் புகழ்
சுமத்தப்படுவதை ஏற்க முடியாது. இவர்கள்மீது வைக்கப்பட்ட பாராட்டுகள்
நிரூபனமானதால் இவர்களுக்கு இன்பமளிக்கும் தீர்மானம்
நிறைவேறுகிறது. இவர்களுக்கு உடல் முழுக்க மயிலிறகு வைத்தியம்
செய்ய வேண்டும். ஏற்பாடுகள் தொடங்கட்டும். அதுமட்டுமல்லாமல் நஞ்சுண்டபுரத்தை தரித்திர உலகிலிருந்து விலக்கி வைக்கிறேன்.
இத்துடன் கூட்டம் ஆரம்பமாகிவிட்டது” பெருங்கிழவர் விறுவிறுவென அறையை விட்டு வெளியேறி கூடத்துக்குப் போனார்.
எங்கள்
மூவரையும் சபை கொஞ்சிக் குலாவியது. நாங்கள்
இன்பத்தில் துடிதுடித்துப் போனோம். அனைவரும் வெளியேறிய பின் இரகசியமாக
எங்களை அழைத்துச் சென்ற ஆட்டுத்தாடிக் கிழவர் எங்கள் காயங்களை சவுக்கால் துன்புறுத்தினார்.
ஆட்டுத்தாடிக் கிழவர் அதிர்ஷ்ட உலகில் கொடுமைக்கார முதலாளி ஒருவரை
உயிரோடு கொளுத்திய குற்றத்துக்காக (அங்கே
அது குற்றம்!) தண்டனை விதிக்கப்பட்டு பல இன்பங்களுக்கு ஆளாகியவர். ஆடு மேய்ப்பவர்
போல வேடமணிந்து தரித்திர உலகத்துக்குத் தப்பித்து வந்தவராதலால் ஆட்டுத்தாடிக்
கிழவர் என்று அழைக்கப்பட்டார். அவர் கொலை லேகியத்தில் நாட்டமுடையவர் என்பது
மட்டுமல்லாமல் கழுதைபோல இனிய குரல்வளமுடையவர். எங்கள் மீது அளவு கடந்த விரோதமிருந்தாலும் அவர் எப்போதும் அதை சபையில் காட்டியதில்லை.
பெருங்கிழவரது
பர(ர்+அ)க்கிரமங்களை பிரச்சாரம் செய்வதற்காக பிரத்யேகக் குழு அமைக்கப்பட்டது என பின்னாட்களில்
எனக்கு யாரோ சொன்னதாக நினைவு.
(2017 டிசம்பர் 24ல் நடைபெற்ற மாவிபக’வின் படைப்பரங்கில் வாசிக்கப்பெற்றது)
No comments:
Post a Comment