Tuesday, October 3, 2017

காத்திருப்பு - காயத்ரி - சிறுகதை

 

‘இன்னும் ஒரு நாள்’, வேதா தனக்குள் சொல்லிக்கொண்டே படுத்தாள். ஒரு பெண்ணுக்குத்தான் எத்தனை காத்திருப்புக்கள்? காதலுக்கு, கணவனுக்கு, குழந்தைக்கு என அத்தனை இன்பங்களுக்கும் காத்திருந்தே பெண்களின் வாழ்க்கை முடிந்து போகிறது. இவையெல்லாம் இன்பமானவை. ஆனால் சிறிதும் விருப்பமின்றி துன்பத்தை மட்டுமே தரக்கூடிய ஒரு காத்திருப்பு. அதையே அவள் வாழ்நாளில் பெரும்பகுதி செய்கிறாள். மாதவிலக்கு.
பதின்மூன்று வயதில் பூப்பெய்தியவளுக்கு முதல் மாதம் எல்லாம் கொண்டாட்டமாகத்தான் இருந்தது. அடுத்த மாதத்தில் இருந்து பிடித்தது சனி. அத்தனை நாட்கள் செல்லமாய் வளர்ந்திருந்தவளுக்கு வீட்டில் பார்க்கும் தீட்டு சாத்திரங்கள் வித்தியாசமாக இருந்தது. ஜடைகூட போட்டுக்கொள்ள தெரியாதவளை யாரும் தொட்டு தலை சீவிவிட மாட்டார்கள். இரண்டு நாட்களில் ஒரு நாள் மட்டும் தொட்டு ஜடை போட்டுவிட்டு அம்மா தலைக்குக் குளிப்பாள். இன்னொரு நாள் வேதா முதல் நாள் ஜடையோடுதான் பள்ளிக்குச் செல்ல வேண்டும். காலையிலேயே கலைந்திருக்கும் அவள் தலைமுடி சொல்லிவிடும், அவளது நிலைமையை. அவளுக்கென்று ஒரு தட்டு, தலையணை, தம்ளர் கொடுத்து விடுவார்கள். அதைவிட்டு எதையும் வீட்டுக்குள் அவள் தொடக்கூடாது. இவையெல்லாம் சிறு வயதிலேயே அவள் மனதில் மாதவிலக்கு என்பது தாய்மைக்கான காத்திருப்பு என்ற இன்பமான எண்ணத்தைத் தாராமல், அதன் மீது ஏதோ ஒரு பயத்தை உண்டாக்கி விட்டிருந்தது. அதுவே பின்நாட்களில் எரிச்சலும் கோபமுமாய் மாறி இருந்தது.
கல்லூரிக்குப் போனாலாவது பரவாயில்லை. ஒருமுறை சனி ஞாயிறுகளில் மாதவிலக்காயிருந்த நாட்களில் வீட்டுக்குள் இவள் உட்காரும் மூலையில் இருந்த மீட்டர் பெட்டியில் இருந்து தீப்பொறி வந்து உடனே மின்சாரம் போய் விட்டது. அதைச் சரிசெய்ய வந்தவன் நைட்டியோடு அமர்ந்திருந்த இவளையும் இவள் தட்டு, தம்ளர், தலையணையையும் ஒரு நிமிடம் உற்று பார்த்த பொழுது தூக்கு மாட்டிகொள்ளலாம் போல இருந்தது. அப்படி இல்லாவிட்டால் எல்லாவற்றையும் தூக்கிக்கொண்டு சொந்த வீட்டிலேயே அகதியைப்போல மாடிப்படியில் போய் உட்கார வேண்டும். தெருவில் செல்பவன் எல்லோரிடமும் சென்று ‘நான் இன்று தூரம்’ என்று சொல்லாததுதான் பாக்கி. அதுவும் அமாவாசையாக இருந்து தொலைத்துவிட்டால் கேட்கவே வேண்டாம். தர்ப்பணம் கொடுக்கும்வரை அப்பா இவளைப் பார்க்கவும் மாட்டார். மாடிப்படியில்தான் இருக்க வேண்டும். எங்கே சென்று தொலைக்க முடியும். கழுத்தில் ஒரு அட்டையில், ‘இவள் இன்று தீட்டு’ என்று எழுதாததுதான் மிச்சம். சுயமரியாதை என்னும் உணர்வு வீட்டில் இருப்பவர்களை கத்தி கூப்பாடு போட்டு திட்டி விட்டு எங்காவது போய் விடு என்று சொல்லும். ஆனால் முடியாது.
மூன்று நாட்கள் முடிந்து குளிக்கப் போனவளிடம், அப்பா டேபிள்க்கு கீழ துணிமணி பாத்திரம் ஏதாவது இருக்கான்னு பாரு என்றார். ஆத்திரம் பொங்க அதெல்லாம் பழகி எட்டு வருஷம் ஆச்சு. நீங்க இன்னைக்கு வந்து சொல்லி குடுக்கணும்ன்னு அவசியம் இல்ல என  கத்திவிட்டு சென்றாள்.  குளித்து முடித்து வந்தவளை அம்மா கோவிலுக்கு போகலாம் என கூப்பிட்டாள். என்னமா இன்னைக்கு போறேன்னு சொல்றீங்க? சாமிக்கு ஒரு சுத்தம் வேணாமா? என்றார் அப்பா. பதிலுக்கு நான் ஷாம்பூ போட்டு குளிச்சுட்டேன். அது போக எனக்கு ப்ளீடிங் நின்னு போச்சு. எல்லாத்தையும் உன் கிட்ட சொல்லணுமா? நீ சாமி மேல வெச்சுருக்கற மரியதைய வேற பெத்த பொண்ணுகிட்டயும் காமிப்பா. நீ இந்த தீட்டுல தான் பொறந்தன்றத ஞாபகம் வெச்சுக்கோ என்று பொறுமையாக சொல்லப்போக பெரியார் புக்கெல்லாம் படிக்கறாள்ல, அதான் திமிரு என்று திட்டிவிட்டு நான்கு நாட்கள் பேசாமல் இருந்தார். தாய்மையை புனிதமென பிதற்றுபவர்கள் அதற்கு அடிப்படையான மாதவிலக்கு காலங்களில் பெண்களை நாயினும் கீழாகத்தான் நடத்துகிறார்கள். பெரியார் சொன்னதுபோல பெண்களை அடிமைப்படுத்தும் கர்பப்பையை அகற்றிவிட்டால் என்ன என்று இவள் நினைக்காத மாதங்களே இல்லை.
நாளை மறுநாள் புதன், வியாழன் வெள்ளியென மூன்று நாட்கள் என்று நினைத்துக்கொண்டே தூங்கிப்போனவளுக்கு வழக்கத்திற்கு மாறாக காலை ஆறு மணிக்கெல்லாம் விழிப்பு வந்து விட்டது. எதிர்பார்த்த வலிதான் என்றாலும் ஒரு நாளைக்கு முன்னதாகவே அதுவும் காலை எழுந்தவுடன் வந்தது எரிச்சலாக இருந்தது. நான்கு நாட்களாகவே எல்லோரிடமும் எரிந்துதான் விழுந்து கொண்டிருந்தாள். காலையிலேயே தூரம் என வீட்டில் சொல்லி விட்டால் காபியே தனி தம்ளரில் தான். சொல்லாமல் இருக்கலாம் எனில் சனியன் நைட்டியில் எல்லாம் கறை பட்டு விட்டது. அவளுக்கு பிடித்த புது நைட்டி. இந்தக் கரைவேறு போய்த்தொலையாது. என்னத்தை செய்ய? வேறு வழி இல்லை. சொல்லித்தான் ஆகவேண்டும். மூலையில் அமர்த்தி வைக்கப்பட்டாள்.
கல்லூரிக்குக் கிளம்ப வேண்டும் இந்த வயிற்று வலியோடு. மற்ற நாட்களானால் நேரம் ஆகிவிட்டால் வழக்கமாக அம்மா ஊட்டிக்கூட விடுவாள். இந்த நாட்களில் கிளம்பும் அவசரத்தில் சாப்பிட்ட தட்டை கழுவி வைத்து சாப்பிட்ட இடத்தை துடைத்துவிட்டுத்தான் போகவேண்டும். பேட் சரியான இடத்தில இருக்கிறதா? ஏதும் கறை பட்டு வெளியே தெரிந்துவிடுமா? இந்த பயமில்லாமல் நாட்கள் கடந்ததே இல்லை. கல்லூரி பேருந்துவர ஐந்து நிமிடங்கள் மட்டுமே இருந்த நிலையில் ஐந்து நிமிடம் நடக்க வேண்டிய நிறுத்தத்திற்கு அடி வயிற்று வலியோடு மூன்றே நிமிடத்தில் சென்றடைந்தாள். ஒவ்வொரு அடியும் எடுத்து வைக்கையில் அடிவயிற்றில் எதோ நரம்பினைக் கட்டி இழுத்ததுபோல் வலித்தது. இந்த நாப்கின் விளம்பரங்களைப் போலவே வாழ்க்கை இருந்துவிட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று நினைத்துக்கொண்டாள். ஒரு விளம்பரத்தில், நாப்கின் போட்டுக்கொண்டதும் கவலையின்றி டென்னிஸ் விளையாடி வெற்றி பெறுவாள் வீராங்கனை, இன்னொருத்தி சைக்கிள் ஓட்டினால், அடுத்தவள் ஒரு மடங்கு மேலே போய் குதிரை ரேசில் கலந்துகொள்வாள். விளம்பரம் எடுப்பவன்தான் ஆணாதிக்க சிந்தனையோடு எடுத்தால், நடிப்பவர்கள் பெண்கள்தானே? உதிரப்போக்கு மட்டுமேவா மாதவிலக்கின் பிரச்சினை? நாப்கின் போட்டால் வலிகளெல்லாம் பறந்துபோகுமா? கல்லூரி பேருந்தில் ஏற காலைத் தூக்கியதும் வலி இன்னும் அதிகமானது. இன்னொரு விளம்பரத்தை நினைத்துக்கொண்டாள். அதில் ஒரு பெண் நாப்கினைப் போட்டுக்கொண்டு மலையேறி ட்ரக்கிங் போவாள். வலியை மீறி சிரிப்பு வந்தது இவளுக்கு.
கல்லூரியில் இரண்டாவது வகுப்பு செந்திலுடையது. பெண் பொறுக்கிகள் இரண்டு முறைகளை கையாள்வதுண்டு. அதில் ஒன்று பெண்களிடம் வழிவது. இன்னொன்று அதிகாரத்தை உபயோகித்து அவளை அதட்டி திட்டி கவனத்தை ஈர்ப்பது. இவன் இரண்டாவது வகை. என்ன வேதா காலங்காத்தாலேயே தூக்கம் வருதா? நைட்டெல்லாம் தூங்கலையோ? என்றான் நக்கலாக. இவள் எழுந்து நின்று இல்ல சார். தூங்கமெல்லாம் இல்ல என கூறி அமர்ந்தாள். ஒருவழியாக நாள் முழுக்க உடலும் மனதும் வலியாக கழிந்தது.
அம்மாவிடம் எத்தனையோ நாட்கள் சண்டை பிடித்திருக்கிறாள். பதிலுக்கு அவள் வீட்டுக்குள்ள இதெல்லாம் பாக்குறதுக்கே திட்டுறியே? எங்க காலத்துல எல்லாம் காம்ப்பௌண்டு வீடு. இதுக்குன்னு தனியா ரூம் வெச்சுருப்பாங்க. பத்து வீட்டு ஆம்பளைக்கும் தெரிஞ்சுடும் நாம தீட்டுன்னு. இத்தன நாள் பாத்துட்டோம். திடீர்னு விட முடியாதும்மா என சமாதானம் கூறுவாள். அப்போதெல்லாம் தேவையில்லாமல் குறுக்கிடும் அப்பா, இவளயெல்லாம் எங்க ஊருல கொண்டு போய் விடணும். அங்க ஊருக்கு வெளிய தனியா வீடே இருக்கு. பொம்பளைங்க மூணு நாளும் ஊருக்குள்ளயே வரமாட்டா. பெரியார் புக்க படிக்கறள்ல? உன்னையெல்லாம் அங்கதான் அனுப்பணும் என்று வயிற்றெரிச்சலை கொட்டிக்கொள்வார்.
ஒரு வழியாக மூன்று நாட்கள் முடிந்து குளித்திருந்தாள். மனதிற்கு நிம்மதியாக இருந்தது. வலிகளெல்லாம் பறந்துபோய் உடலே லேசாகி புதியதாக பிறந்ததுபோல இருந்தது. அம்மா கறைபட்ட நைட்டிக்குப் பதில் வேறு நைட்டி வாங்கித் தருவதாகச் சொல்லியிருந்தாள். மனதுக்குள் கல்லூரியையும் தோழிகளையும் நினைத்துக்கொண்டாள். இதமாக இருந்தது. குளித்துவிட்டு வந்ததும் கட்டிப்பிடித்து ‘என்னம்மா பண்ணுறது? எல்லாம் சாஸ்திரம்மா’ என்று கூறியபடி கண்களில் நீர் தளும்ப நெற்றியில் முத்தமிட்ட அப்பாவை மன்னித்து விட்டிருந்தாள்.
பகுத்தறிவு என்னும் வார்த்தைக்குக்கூட இடம் கொடுக்காமல் பெரியார் என்பவரை எதிரியாக நினைத்துக்கொண்டு தனக்கு எதுவுமே செய்து விடாத சாத்திரங்கள்தான் தனது பெருமை என நம்புபவரிடம் வேறு என்ன சொல்லி புரியவைக்க முடியும்?
தனக்குப் பிறக்கப்போகும் மகளின் மேல் இச்சாத்திரங்களின் நிழல்கூட படாமல் பார்த்துக்கொள்ள வேண்டுமென உறுதி எடுத்துக்கொண்டாள்.

‘இன்னும் இருபத்தேழு நாள் இருக்கிறது’ வேதா தனக்குள் சொல்லிக்கொண்டு மீண்டும் காத்திருக்கத் தொடங்கினாள்.
(நன்றி : உயிர் எழுத்து செப்டம்பர் 2017)

No comments:

Post a Comment