“கிக்கீ.. குக்கூ... குவாவ். குக்குக்குக்குக்குக்....”
குயில்களின் சத்தத்தில் விழித்துக்கொண்டேன். இரவு குடித்த ஆல்கஹாலெல்லாம் வயிற்றிலிருந்து
வழுக்கிக்கொண்டு கண்களில் வந்து நின்று தொலைத்ததுபோல கண்கள் எரிந்தன. கண்களைத் கசக்கிக்கொண்டு
படுக்கையிலிருந்து எழுந்தேன். முந்தைய நாள் குடித்துவிட்டுப் போட்டிருந்த பாட்டில்
காலில்பட்டு உருண்டு ஓடியது. அதைத்துரத்த மனமின்றி கபோர்டினைத் திறந்து சிகரெட் ஒன்றை
எடுத்து பற்ற வைத்தேன். இதமான புகையை நெஞ்சில் நிறையவிட்டு வெளியே ஊதினேன். முதலில்
என்னைப் பற்றி சொல்லிவிடுகிறேன், நான் ஒரு எழுத்தாளன். அப்படிதான் சொல்லிக்கொள்கிறேன். என்னுடைய முதல் நாவலான “பூனைகளின் கனவுக”ளைப்
படித்திருக்கிறீர்களா? ஆம் எனில் இப்படி புருவத்தைத் தூக்கி என்னை முறைக்க மாட்டீர்கள்.
இரண்டாவது “சாம்பலின் சாபங்கள்”. அதைக் கிட்டத்தட்ட தென்னிந்தியாவின் எல்லா மொழிகளிலும்
மொழிபெயர்த்தாகிவிட்டது. மூன்றாவது நாவலுக்குத்தான் சாகித்திய அகாடமி விருது கிடைத்தது.
ஆம் அதே நாவல்தான், “ஒரு படிக்கட்டின் சறுக்கல்”. உண்மையில் அதன் பிறகுதான் நான் சறுக்கத்
தொடங்கினேன். இல்லையில்லை.. அவன் வந்தான், சிறுவன், இருபது வயது மீறாதவன், கிட்டத்தட்ட
10 வருடங்களுக்கு முன்னால் நான் வந்ததுபோலவே வந்தான். அவன் எழுத்துக்களுக்கு என்னுடைய
ரசிகர்களெல்லாம் வாசகர்களாகிப் போனார்கள்.
அதன்பிறகு
நான் எழுதியதுதான் “சாத்தானின் புனிதம்” அது ஒரு மாபெரும் தோல்வி என்று விமர்சகர்கள்
என்று சொல்லிக்கொண்டவர்கள் சொல்லிக்கொண்டனர். பெரும்பாலானவர்களுக்கு அந்த நாவல் பிடிக்கவில்லை.
நான் பழைய பாணியில் எழுதுவதாக பேசிக்கொண்டனர். உண்மையில் நான் எப்போதும்போல்தான் எழுதிக்கொண்டிருந்தேன்.
அவர்கள் ரசனைதான் மாறித்தொலைத்துவிட்டிருந்தது. எல்லாவற்றிற்கும் காரணம் அவன்தான்,
மிக அழகாக ரசனை உணர்வுடன் இருந்த வாசகர்களை கண்ட கழிசடைகளையும் படிக்க வைத்திருந்தான்.
அவன் எழுத்துக்களை நானும் படித்திருக்கிறேன், அழகியலெல்லாம் தற்கொலை செய்துகொள்ளும்
வக்கிரங்களின் வாந்திதான் அவனது எழுத்துக்கள். அதைப் படிப்பவர்கள் உளவியல்ரீதியான பாதிப்புகளுக்கு
உள்ளாவார்கள். இந்த உண்மையை தெரியாமல் ட்விட்டரில் போட்டுத் தொலைத்துவிட்டேன். உடனே
அவனது ரசிக குஞ்சுகள் எனக்கு உளவியல் ரீதியான சிகிச்சை தேவை என்று ஹேஷ்டேக் போட்டு
என்னைத் திட்டத் தொடங்கிவிட்டனர். இந்த “வத்தி டிவி”க்காரன் இதை தலைப்பாக வைத்து விவாத
நிகழ்ச்சி நடத்தி TRPயை ஏற்றிக்கொண்டான். கடைசியில் தீர்ப்பு வழங்குவதுபோல் அந்த போண்டாத்
தலையன் சொன்னான், ஒரு மூத்த எழுத்தாளராக என்னை எல்லோரும் மதிக்கிறார்களாம், நான் என்னுடைய
எழுத்துக்களில் கவனம் செலுத்த வேண்டுமாம், படைப்பாளிகள் படைப்புகள் மூலம் மட்டுமே பேச
வேண்டுமாம். இல்லையென்றால் ஓய்வெடுத்துக்கொள்ள வேண்டுமாம். அடேய்.. ஒரு எழுத்தாளன்
எத்தனை வயதிலடா ஓய்வெடுத்துக்கொள்வது? முப்பது வயதிலா? அதற்குள் நான் மூத்த எழுத்தாளனாகிவிட்டேனா?
சுவற்றில் முட்டிக்கொள்வதைத் தவிர எனக்கு வேறு வழி தெரியவில்லை.
ஆனாலும் அவர்கள்
வத்தி வைத்ததிலும் ஓர் உருப்படியான (இதை அந்த கிறுக்கன் அவன் நாவலில் ஒரு உருப்படியான
என்று எழுதுவான், எவ்வளவு பெரிய இலக்கணப் பிழை..) விஷயம் நடந்திருந்தது. நான் அடுத்த
நாவலை எழுதி என் மீதான விமர்சனங்களுக்கும் அவனுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப் போகிறேன்.
இந்த முறை அவனது பாணி என்கிறார்களே அதுபோல விறுவிறுப்பாகவும் அதே நேரம் என் அழகியல்
உணர்வினை விடாமலும் ஒரு புதிய பாணியை உருவாக்கப் போகிறேன். ஆம், இதுவரை உணர்வுகள் மீதான
கதை சொல்லியாக இருந்த நான் இனி உணர்ச்சிகள் மீது கதை சொல்லப் போகிறேன். இந்த சினிமா
சனியன் வந்து தொலைத்ததும் எதிலும் திரைக்கதை பாணியை எதிர்பார்க்கத் தொடங்கிவிட்டனர்.
இந்தமுறை ஒரு த்ரில்லர் நாவலை எழுதுவதாக முடிவுசெய்திருந்தேன்.
அதற்காகத்தான்
நான் சில நாட்களாக வெளியே திரிந்துகொண்டிருக்கிறேன். இந்த முறை கொஞ்சம் மனிதர்களை அனுபவித்து
எழுதவேண்டும் என்று முடிவுசெய்துகொண்டேன். நான் முதலில் தினமும் சில மனிதர்களைப் பின்தொடர
ஆரம்பித்தேன். தினமும் காலையில் எழுந்து கூட்டமான சென்னை நகர வீதிகளில் யாரையாவது பின்தொடர்வது
மிகவும் எளிமையானது. முதலில் நீலநிற கட்டம்போட்ட சட்டையுடன் போன சுருட்டை முடிக்காரனைப்
பின்தொடர்ந்தேன். நேராகப் போனவன் எதோ ஷாப்பிங் மாலுக்குள் புகுந்து அங்கிருந்த காபி
பாரில் யாருக்கோ காத்திருக்கத் தொடங்கினான். கையிலிருந்த போனைப் பார்த்துக்கொண்டு அதைச்
செல்ல நாய்க்குட்டிபோல் தடவிக்கொண்டிருந்தான். பின்பு அவன் மீதான சுவாரசியம் அற்றுப்போய்
அவனைக் கடந்து நடந்துபோன சிகப்புநிற கட்டம்போட்ட சட்டையும் நீல நிற ஜீன்சும் அணிந்த
பெண்ணைப் பின்தொடர்ந்தேன். அவளும் சுவாரசியமாக ஒன்றும் செய்யவில்லை. மாநகரப் பேருந்தில்
ஏறி எதோ ஒரு கல்லூரி வாசலில் இறங்கிவிட்டாள். அவளைப் பிக்கப் செய்ய பாய் பிரண்ட் கூட
வரவில்லை. அவளை யாரவது கடத்தியிருந்தால் சுவாரசியமாக இருந்திருக்கும் என்று நினைத்துக்கொண்டேன்.
இப்படியே ஒரு வாரம் ஒன்றுமேயில்லாமல் கழிந்தது.
அந்த ஒரு வாரத்தில்
சரியான கதைக்கரு கிடைக்காமல் செத்துப்போய்விடலாம் என்று முடிவு செய்துவிட்டேன். சொன்னால்
நம்ப மாட்டீர்கள், எனது “பூனைகளின் கனவுக”ளில் வரும் கதாநாயகியைப் போல செத்துவிடலாம்
என்று முடிவுசெய்து அதே பாணியில் பேனில் தூக்குக் கயிறு மாட்டிவிட்டேன், பின்பு கடைசி
நொடி சபலத்தில் கொஞ்சம் குடித்துவிட்டு சாவோம் என்று ஆசைப்பட்டு அளவுக்கு அதிகமாக குடித்துவிட்டு
அப்படியே படுத்துத் தூங்கிவிட்டேன். ஆல்கஹாலுக்கு நன்றி, நல்லவேளை நான் சாகவில்லை.
ஏனென்றால் அடுத்தநாளான இன்றுதான் எனக்கு அழகான கதைக்கரு கிடைத்தது. இல்லையில்லை கிடைத்தான்.
முதல்நாள் ஒரு பெண்ணைப் பார்த்தேனல்லவா? அவளுடைய தோழி ஒருத்தியினை இரண்டுநாள் முன்பு
பின்தொடர்ந்திருந்தேன். இன்று அந்த தோழியின் தங்கையைப் (தங்கையாகத்தான் இருக்க வேண்டும்,
முகசாடை ஒரே மாதிரி இருந்தது) பின்தொடர்ந்தேன். அவள் தி.நகரின் பிரதான நீரோட்டத்தில்
கலந்து போய்க்கொண்டிருக்கும்போது எதோ ஒன்றை தெருவோரக் கடையிலே வாங்கினாள். பின்பு தனது
பர்சை கைப்பைக்குள் போட்டவள் சரியாகப் போடாமல் அது கீழே விழுந்தது. நான் அவளிடம் அதைச்
சொல்ல குரலெடுப்பதற்குள் அவளைத் தாண்டி வந்த ஒருவன் சட்டென்று குனிந்து அதை எடுத்துக்கொண்டு
போனான். இப்போதுதான் எனக்குப் புரிந்தது. அவன் இவளைக் கடக்கும்போது லேசாக அவளது மார்பில்
இடித்தபடி வர இவள் எரிச்சலோடு அவசர அவசரமாய் கைப்பைக்குள் பர்சை வைக்க முயலும்போது
அது கீழே விழுந்திருந்தது.
என் மனதுக்குள்
மகிழ்ச்சி பீறிட அவனைத் தொடர ஆரம்பித்தேன். நடக்கும் வேகத்திலேயே அவள் பர்சை துழாவி
பணத்தை மட்டும் எடுத்துக்கொண்டு பர்சைத் தூக்கி குப்பைத் தொட்டியில் போட்டிருந்தான்.
இதெல்லாம் இருபதடிக்குள் செய்து முடித்த அவனது லாவகம் எனக்குப் பிடித்துப் போனது. கொஞ்ச
தூரம் போனதும் ஸ்டைலாக தலைக்குப் போட்டிருந்த குல்லாவை கழற்றி பின்னால் விட்டுக் கொண்டான்.
இப்போதுதான் அவன் முகத்தைப் பார்த்தேன். இருபத்தைந்து வயது தாண்டாத வாலிபன். நேராக
ஒரு ஷாப்பிங் பிளாசா போனான். கீழ் தளத்திலிருந்த ஒரு காபிபாரில் டீ சொல்லிவிட்டு சிகரெட்
வாங்கிப் பற்றவைத்தான். நானும் சிகரெட்டை வாயில் வைத்தபடி அவனை கவனித்துக்கொண்டிருந்தேன்.
பின்பு நேராக ஒரு துணிக்கடைக்குப் போனான். ஒரு ஜீன்ஸ். டீ சர்ட் வாங்கினான். பிறகு
எதோ வெளிநாட்டு பிராண்ட் உள்ளாடைகளை வாங்கினான். எல்லாம் அவள் பணம்தான். வாங்கியதை
ஒரு பிளாஸ்டிக் பையில் சுமந்துகொண்டு வெளியேறி நடந்துபோனான். பிறகு ஏதும் பெரிதாக செய்யவில்லை.
சாப்பிட்டான். எதோ தியேட்டரில் ஈவினிங் ஷோ படம் பார்த்தான். அந்த நேரத்தில் கூட தூங்கிதான்
வழிந்தான். அவன் படம் பார்க்க வரவில்லை என்று புரிந்துகொள்ள முடிந்தது. அவனோடு நானும்
ஒரு செட் ட்ரெஸ் வாங்கியிருந்தேன். என் சொந்தக் காசில். அவன் என்னை அடையாளம் கண்டுவிடாமலிருக்க
எச்சரிக்கையாக சட்டையை மாற்றி மேலே ஜாக்கட் போட்டுக்கொண்டேன். படம் முடிவதற்கு கொஞ்சம்
முன்பே வாட்சைப் பார்த்தபடி எழுந்து வெளியேறி பேருந்து நிறுத்தத்தில் நின்றவன் வந்த
முதல் பேருந்தில் ஏறினான். ‘இவனுக்கு மட்டும்
போக வேண்டிய பேருந்து உடனே வந்து விடுகிறது, நான் நிற்கும்போது பேருந்தே வராது’
என்று மனதுக்குள் கறுவிக்கொண்டே நானும் பேருந்தில் ஏறி அதன் கடைசி ஸ்டாப்பை சொல்லி
டிக்கட் எடுத்தேன். அவனை விட்டு ஆறேழு சீட்டுகள் தள்ளி உட்கார்ந்துகொண்டேன். எதோ ஒரு
இடத்தில இறங்கி அபார்ட்மென்ட் குடியிருப்புக்குள் போனான். அவன் பின்னாலேயே போன என்னை
வாட்ச்மேன் பிடித்துக்கொண்டான். “யார் சார் நீங்க? உங்களைப்பார்த்ததே இல்லையே?”என்றான்,
நானும் சளைக்காமல் “E ப்ளாக்ல ராஜேஷ் வீட்டுக்கு வந்துருக்கேன், கெஸ்ட்” என்றேன். சந்தேகமாகப்
பார்த்தபடி, கையெழுத்து வாங்கிக்கொண்டுதான் விட்டான். நான் இவனை தவறவிட்டுவிடுவோமோ
என்ற தவிப்போடு பார்த்துக்கொண்டே இருந்தேன், அவன் A பிளாக்கில் நுழைந்திருந்தான். நான்
கையெழுத்துப் போட்டுவிட்டு வருவதற்கும் அவன் இறங்கி வருவதற்கும் சரியாக இருந்தது. பின்பு
வேறு எதோ பிளாக்குக்குள் நுழைந்தான்.
பொறுமையாக
மாடியேறிப் போனவன் வாசலில் பேப்பர் சிதறிக் கிடந்த ஒரு வீட்டின் வாசலில் நின்றான்,
சட்டென்று திரும்பி என்னைப் பார்த்தான். ‘நாசமாப்போச்சு என்னைப் பார்த்துத் தொலைத்துவிட்டான்',
என்று நினைத்தபடி நான் அவனைக் கண்டுகொள்ளாததுபோல் மெதுவாகப் படியேறி மேலே போனேன், அவன்
தலையைக் குனிந்தபடி பின்னால் மாட்டியிருந்த பையில் கைவிட்டு எதையோ தேடினான், பைக்குள்
சாவி சிணுங்கியது. நான் மேலே போய் மறைந்து சட்டென்று குனிந்து மாடிப் படியின் வழியாக
கண்ணிடுக்கி அவனைப்பார்த்தேன். அவன் சாவிக்கொத்தில் பல்வேறு வகையான சாவிகள் இருந்தன.
அதில் இரண்டு, மூன்று சாவியை உள்ளே நுழைத்து எப்படியோ அந்த கதவைத் திறந்தான். பின்பு
வேகமாக உள்ளே நுழைந்து கதவைத் தாளிட்டுக்கொண்டான். “வாவ்" என எனக்குள் சொல்லிக்கொண்டேன்.
அவன் என் வாழ்க்கையையே
புரட்டிப் போட்டிருந்தான். ஆம், அடுத்த சில நாட்கள் என் போலிஸ் நண்பர்களை வைத்து அந்த
அபார்ட்மெண்டில் ஏதும் திருடு போயிருக்கிறதா என்று விசாரித்தேன். அப்படி ஏதும் நடந்திருக்கவில்லை.
ஆம் அப்படிதான் நானும் ஊகித்திருந்தேன். அவனைப் பார்த்த அன்றிரவு எதிரில் இருந்த லாட்ஜில்
ரூம் போட்டு பால்கனியில் அமர்ந்து இரண்டு மூன்று சிகரெட் பாக்கெட்டுகளை வீணாக்கி தூங்காமல்
அந்த அப்பார்ட்மெண்டின் வாசலையே பார்த்துக்கொண்டிருந்தேன். எதிர்பார்த்தது வீணாகவில்லை.
விடிவதற்கு சிறிதுநேரம் இருக்கும்போதே அவனது ப்ளாக்கிலிருந்து ஒரு உருவம் வெளிப்பட்டது.
கண்களைக் கசக்கிக்கொண்டு பார்த்தேன். கேட் வாசலில் வாட்ச்மேன் ஷெட்டில் நின்று கதவைத்
தட்டினான். ஆம் அவனேதான். நேராக வெளியேறியவன் கொஞ்ச தூரத்தில் இருந்த குப்பைதொட்டியில்
எதையோ போட்டுவிட்டு வந்த ஆட்டோவில் ஏறிப்போனான். உடனே கதவைப் பூட்டிக்கொண்டு இறங்கி
ஓடிப்போய் சுற்றிலும் பார்த்துவிட்டு அவன் போட்ட குப்பைத்தொட்டிக்குள் குதித்து அந்த
பையை அடையாளம் கண்டு எடுத்துவந்தேன். அதற்குள் அவன் முத்தைய நாள் போட்டிருந்த உடைகள்
இருந்தன. இந்தமுறை “வாவ்” சொல்ல வாயைத் திறந்தவன் மூடவே வெகுநேரமானது.
“களவாடப்பட்ட
மணித்துளிகள்” இந்த நாவலை நான் எழுத ஆரம்பித்து பல நாட்கள் ஆயிருந்தது, இதற்காக நான்
சில பரிசோதனைகளை செய்திருந்தேன். முதலில் சாவியின்றி பூட்டைத்திறப்பது எப்படி என்று
கற்றிருந்தேன். உங்களுக்கு சொல்லிதரட்டுமா? எல்லா பூட்டுகளும் சில எண்ணிக்கையிலான குழல்களால்
செய்யப்பட்டு அதற்கேற்றார் போல உருளையான மணிகளால் நிரப்பப்பட்டிருக்கும். நீங்கள் செய்ய
வேண்டியதெல்லாம் அந்த மணிகளை ஒவ்வொன்றாக குழல்களுக்குள் தள்ளிவிடவேண்டியது. அதைதான்
சாவிகள் செய்கின்றன. இதற்கு இரண்டே இரண்டு ஹேர் பின்கள் போதுமானது. மேலோட்டமாக இது
புரியவில்லையல்லவா? “களவாடப்பட்ட மணித்துளிகளி”ல் இதைப்பற்றி விலாவாரியாக எழுதியிருக்கிறேன்.
பொறுங்கள் கொஞ்ச நாளில் வெளிவந்துவிடும். இப்போதெல்லாம் வாட்ச்மேன்களிடம் சிக்குவதில்லை.
கேட்டைக் கடக்கும்போது போனில் பேசிக்கொண்டோ அல்லது மிகவும் சீரியஸாக எதையும் படிப்பதுபோல்
பாவனை செய்துகொண்டோ போகும்போது வாட்ச்மேனைக் கண்டு சிநேகமாக ஒரு புன்னகை செய்தால் போதும்.
இந்த யோசனையின் உபயமும் அவன்தான். கிட்டத்தட்ட அவனைப்போலவே மாறியிருந்தேன். திருடுவதைத்தவிர.
இந்த உலகம்தான் எத்தனை சுவாரசியமான மனிதர்களால் நிரம்பியிருக்கிறது? மனிதர்களின் வீடுகளுக்குள்
நுழைந்து அவர்கள் வாழ்க்கையைப் படித்து எழுதத் தொடங்கினேன். மனிதர்கள், அவர்களின் பிஸினெஸ்,
சொந்த வாழ்க்கை இதையெல்லாம் படிக்க முன்புபோல் டைரிக்களை எழுதுவது இல்லை என்பதால் கொஞ்சம்
கடினம்தான் என்றாலும், போட்டோக்கள், வீட்டிலுள்ள டாக்குமெண்ட்கள் இதையெல்லாம் பார்த்து
என் கற்பனைகளை சேர்த்து தினமும் குறிப்புகள் எடுத்து எழுதிக்கொண்டே இருந்தேன். எனக்கு
அதிர்ஷ்டம் இருந்தால் கம்ப்யூட்டர்களோ, லேப்டாப்போ கிடைத்து டுவிட்டரிலோ, பேஸ்புக்கிலோ
நுழைந்து பார்க்க முடியும். கொஞ்ச நாட்களில் இது எனக்கு பழக்கமாகிப்போனது வாரத்தில்
என் வீட்டிற்கு வரும் நாட்கள் குறைந்து போனது. கடைசியாக எப்போது வீட்டுக்குப் போனேன்?
தெரியவில்லை. ஒருவேளை ஒரு வாரம் இருக்கலாம், அல்லது ஒரு மாதம் இருக்கலாம், கையிலுள்ள
குறிப்புகளை வைத்து அடையாளம் காணத் தெரியவில்லை, வீட்டில் போய் ஒப்பிட்டுப் பார்த்துதான்
முடிவுசெய்ய வேண்டும். எந்த மனிதர்களை வைப்பது யாரை விடுவது என்று. எனது கதையின் பாத்திரங்கள்
மாறிக்கொண்டே இருந்தன. அல்லது புதிய பாத்திரங்களை சேர்த்துக்கொண்டே இருந்தேன். பிஸினெஸ்மேன்கள்,
மாத சம்பளத்தில் ஆடம்பரத்துக்கு அடிமையாகிப்போனவர்கள், கிரெடிட்கார்டுகளின் பில்கள்,
லோன் திருப்பி செலுத்த தவறியவர்கள் என மனிதர்களில்தான் எத்தனை வகைகள். ஒரு வீட்டில்
கண்ணும் காதும் குறைந்துபோயிருந்த கிழவியை வீட்டில் விட்டுப் போயிருந்தார்கள், அந்தக்
கிழவியோ என்னை வீட்டு வேலைக்காரி என்று நினைத்து ‘ஏன்மா ரெண்டு நாளா வரல? உன் குழந்தைக்கு
உடம்பு சரியில்லையா? சரி சரி.. அவகிட்ட சொல்லாத, கேட்டா நீ வந்துட்டு போனன்னு நான்
சொல்லிக்கறேன்’ என்று சொன்னாள். மனிதர்கள், மனிதர்கள், மனிதர்கள்... இப்படியே என்னுடைய
நேரங்கள், எண்ணங்கள் அனைத்திலும் மனிதர்கள் நிறைந்துபோனார்கள். இப்போதெல்லாம் குடிப்பதுகூட
குறைந்துபோயிருந்தது, வீட்டுக்குப் போனால்தானே குடிக்க?
இன்றும் வழக்கம்போல
ஒரு வார பத்திரிக்கைகள் சிதறிக்கிடந்த ஒரு வீட்டுக்குள் நுழைந்தேன். அடுக்கிவைக்கப்பட்ட
காலி பாட்டில்களைப் பார்த்தவாறு படுக்கையறையில் நுழையும்போதே லேசான துர்நாற்றம் நாசியைத்
துளைத்தது, படுக்கையறையில் பேனில் ஒருவன் தூக்கில் தொங்கிகொண்டிருந்தான். மனதுக்குள்
விசிலடித்துக்கொண்டு வேகமாகப் போய் கர்ச்சீபினை எடுத்து என் கை பட்டதாக தோன்றிய இடத்தையெல்லாம்
துடைத்துவிட்டு வந்தேன். கதவை வெளிப்புறம் துடைக்கவேண்டும் என்று எண்ணியபடி மெதுவாக
நடந்து சுற்றிவந்து அவனது முகத்தைப் பார்த்தேன். முப்பதைந்து வயது தாண்டாது. குறைந்தபட்சம்
ஒரு வாரம் முன்பு இறந்திருக்க வேண்டும். கண்கள் பிதுங்கி மூக்கிலிருந்து ஒழுகிய இரத்தம்
காய்ந்து தோல் லேசாக அழுகி வெடிக்கக் காத்திருந்தது, முகம் சற்று பரிச்சயமாக இருந்தாலும்
நாக்கு தொங்கி கண்கள் பிதுங்கிய கோரத்தில் அடையாளம் காண முடியவில்லை. யாரேனும் நடிகனாக
இருக்கும் என நினைத்துக்கொண்டேன். இப்போதெல்லாம் காதல் தோல்வியிலும், வாழ்க்கைத் தோல்வியிலும்
செத்துபோகும் இளம் நடிகர்கள்தான் எத்தனைபேர். சுற்றிலும் பார்த்தேன், ஒரு மூலையில்
மேசை மீது பேப்பர் வெயிட்டை சுமந்தபடி சில காகிதங்கள் இருந்தன. ஒருவேளை இவனது தற்கொலைக்
கடிதமாக இருக்கலாம். ஆர்வமாகப் போய் படித்துப் பார்த்தேன். அதிர்ச்சியில் உறைந்துபோனேன்.
அதில் கீழ்க்கண்டவாறு எழுதியிருந்தது.
“கிக்கீ..
குக்கூ... குவாவ். குக்குக்குக்குக்குக்....” குயில்களின் சத்தத்தில் விழித்துக்கொண்டேன்.
இரவு குடித்த ஆல்கஹாலெல்லாம் வயிற்றிலிருந்து வழுக்கிக்கொண்டு கண்களில் வந்து நின்று
தொலைத்ததுபோல கண்கள் எரிந்தன. கண்களைத் கசக்கிக்கொண்டு படுக்கையிலிருந்து எழுந்தேன்.
முந்தைய நாள் குடித்துவிட்டுப் போட்டிருந்த பாட்டில் காலில்பட்டு உருண்டு ஓடியது. அதைத்துரத்த
மனமின்றி கபோர்டினைத் திறந்து சிகரெட் ஒன்றை எடுத்து பற்ற வைத்தேன். இதமான புகையை நெஞ்சில்
நிறையவிட்டு வெளியே ஊதினேன். முதலில் என்னைப் பற்றி சொல்லிவிடுகிறேன், நான் ஒரு எழுத்தாளன்.
அப்படிதான் சொல்லிக்கொள்கிறேன்......
No comments:
Post a Comment