Sunday, March 12, 2017

கொலையாளிகள் – ஹரி ராஜா


மழைக்குப் பிந்தைய இரவில்
அவன் வந்து சேர்ந்தான்
மறுப்பேதும் கூறவியலாத
கேள்வியொன்றைக் கேட்டான்
“புகைக்கலாமா?”

ஆழ்ந்த இழுப்பொன்றில்
புகையை  வெளியேற்றியதவன் நாசி
சாம்பலை மட்டும்
நீரில் கரைத்தான்

இலைகளில் தேங்கிய
மழை நீர் கொண்டு
அறையின் வெம்மையை
சமண் செய்தான்

விடைபெறும் போழ்தில்
நீரில் கலந்த சாம்பல் கொண்டு
ஓவியம் வரையச் சொன்னான்

சமப்பட்ட வெம்மையை
எழுத்தில் வார்க்கச் சொல்லி
பதிலுக்குக் கத்தினேன் நான்

அவன் எனக்கு தூரிகை தந்தான்
நான் அவனுக்கு காகிதம் தந்தேன்
கோபம் கொண்டு என்னைக் கொன்றான்
நானும் அவனைக் கொன்றேன்

சுவற்றில் பதிந்த
தூரிகைக் கோடுகள்
ஓவியமாய் இருக்கவில்லை
என்றான் அவன்

வெம்மையில்  பொசுங்கிய எழுத்துக்கள்
காகிதத்தில்  கைகூடவில்லை
என்றேன் நான்

No comments:

Post a Comment