Saturday, February 4, 2017

அவரைத் தவிர யாராலும் அழிக்க இயலாது - மதிகண்ணன்


கதவு 8ல் கடலை மாடசாமி என்ற புனைபெயரில் ‘இவர் ஒரு புரட்சிகர எழுத்தாளர்’ என்ற சிறு கட்டுரையை தனக்கேயுரிய எள்ளல் தன்மையுடன் எழுதியிருந்தார் நண்பர் க.சீ.சிவக்குமார் என்ற நினைவுகளிலிருந்து தொடங்குகிறேன். அந்தக் கட்டுரையை அவர் எழுதுவதற்கு முன்னர் 1999 நவம்பர் 13-14ல் சிலம்பம் ஒருங்கிணைத்திருந்த ‘தமிழில் பின்நவீனத்துவ எழுத்து’ கருத்தரங்கம்தான் எங்கள் இருவரையும் நெருக்கமாக்கியது.
அதற்குச் சில நாட்கள் முன்பு, (1999 மார்ச்) கோணங்கியைப் பார்ப்பதற்காக கோவில்பட்டியில் அவருடைய வீட்டிற்குச் சென்றிருந்தோம். பல நாட்களில் நிகழ்வதைப் போலவே அன்றும் நிகழ்ந்தது. கோணங்கி வீட்டில் இல்லை. ‘விசை’ முதல் இதழ் மாரீஸில் இறுதிக்கட்ட வேலைகள் நடந்து கொண்டிருந்தது. தோழர்கள் ச.தமிழ்ச் செல்வன், நாறும்பூ நாதன், மாதவராஜ், ஷாஜஹான், உதயசங்கர், கமலாலயன் ஆகியோர் ஆசிரியர் குழுவில் இருந்தனர். விசை இதழ் வேலைகளை ஒருங்கிணைப்பதற்காக முருகபூபதி மாரீஸில் இருப்பதாகச் சொன்னதால் அவரைத்தேடி பேசிக்கொண்டே அங்கே நடந்து போனோம். (முதல் இரண்டு இதழ்கள் விசை  என்ற பெயரில் வந்து நின்றுபோன இதழை 5 ஆண்டுகளுக்குப் பின்னர் ‘புதுவிசை’யாக்கி இன்றுவரை தொடர்ந்து கொண்டுவந்துகொண்டு இருக்கிறார் தோழர் ஆதவன் தீட்சன்யா) மாரீஸுக்கு நாங்கள் சென்ற போது எல்லோரும் மதியச் சாப்பாட்டிற்குப் போயிருப்பதாக அங்கே(யே) சாப்பிட்டுக் கொண்டிருந்த ஒரு தம்பி சொன்னார். சரி பக்கத்தில் காத்திருப்போம் என்று இரண்டு கட்டு கணேஷ் பீடியுடன் தெப்பக்குளத்தின் கரையில் மரநிழலில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தோம். பீடிக்கட்டு காலியானவுடன் சரி அவர்களைப் போய்ப் பார்க்கலாம் என்று கிளம்பியபோது நன்றாக இருட்டியிருந்தது. இரவு. கதவு தட்டப்பட வேண்டிய காலம் என்றறிவிக்க, இனி அவர்களைப் பார்ப்பது நன்றாக இருக்காது என்று ஊருக்குப் பஸ்ஸேரினோம்.
பின்னர் மதுரையில் தலித் கலைவிழாவில் சந்திந்த போது ‘நமக்கும் சிறுகதைத் தொகுப்பு வந்திருச்சுல்ல’ என்று மகிழ்ந்து சிரித்து புத்தகக் கடைக்கு அழைத்துச் சென்று ‘கன்னி வாடி’ வாங்கித்தந்தார். என்னை சிறுகதைத் தொகுப்பு போடச்சொல்லி தூண்டியவர்களில் சிவாவும் ஒருவர். பின்னர் நெல்லையில் சிறுகதைத் தொகுப்புகள் விமர்சன அரங்கில், பின்னர் திருச்சியில், குற்றாலத்தில், மீண்டும் சென்னையில் என எங்கள் சந்திப்புகள் வேறு வேறு ஊர்களில் வேறு வேறு நிகழ்வுகளில்… ஒருமுறை கூட என் ஊரிலோ… அவர் ஊரிலோ… நாங்கள் சந்தித்துக் கொள்ள எங்களுக்கு வாய்த்ததேயில்லை. இருவரும் ஊர் சுற்றிகளாய்த் திரிந்த காலம் அது. 2004க்குப் பின்னர் சிவாவின் வட்டம் வட தமிழகமாகவும், என்னுடைய வட்டம் தென் தமிழகமாகவும் வேறு வேறு மையங்களுடன் வேறு வேறு பரிதிகளில் சுற்றிக் கொண்டிருந்தன. சந்திப்புகள் சாத்தியமற்றுப் போயின.
நூல்கள் வெளியாகும்போது சில நேரம் தொலைபேசி உரையாடல்கள் மட்டும். அது குறைந்து 10 ஆண்டுகளுக்கு மேலாக நேரடித் தொடர்பற்றுப் போனோம்.
வாஜ்பாய் பிரதமராகவும் கருணாநிதி முதல்வராகவும் இருந்த காலக்கட்டத்தில் ஆனந்தவிகடன் (என்று நினைக்கிறேன்) அவருடைய நேர்காணல் ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில் எழுத்தாளர் சிவாவிடம் கேட்கப்பட்ட
கேள்வி : இப்போதைய உங்கள் எதிர்பார்ப்பு என்ன?
பதில் : பிரதமர் கவிதை எழுதுபவராக இருக்கிறார். ஒரு கவிஞரே முதல்வராக இருக்கிறார். இந்த ஏழைக்கவிஞனுக்குத் தேவையெல்லாம் ஒரு கண்டக்டர் வேலை மட்டும்தான்.
முந்தா நாள் எழுத வந்து 8 (தொ) குப்பை (ப்) போட்டவர்களெல்லாம்  இப்படி ஒரு வாய்ப்புக் கிடைத்தால் விருதுகள் மறுக்கப்படுவதாகப் புலம்பியிருப்பார்கள். அல்லது (கிடைக்காதவரை) விருதுகளை நிராகரிப்பதாக மார் தட்டியிருப்பார்கள். ஆனால் சிவா, அவருக்கு என்ன தேவையோ அதை மட்டுமே கேட்கின்ற பக்குவம் பெற்றவர். விருதுகள் அவரைத் தேடி வந்தன. தானாகக் கிடைத்தன. (கடைசிவரை கண்டக்டராக மட்டும் ஆகமுடியவில்லை என்றே நினைக்கிறேன்) அவருடைய எளிமையை இருப்பிற்கு ஏற்ற எளிமை என்று நான் சொல்ல மாட்டேன். எவ்வளவு இருந்தாலும் எளிமை அவருடைய இயல்பு. அதை அவரால் மாற்றிக் கொள்ள முடியவே முடியாது.
அப்புராணியான முகத்துடன் காத்திரமான விஷயங்களைப் பேசுவதும் அதனைத் தொடர்ந்து பெரிதாகச் சத்தமிட்டு சிரிப்பதும் அவருடைய பண்பு. இருபதாம் நூற்றாண்டின் இறுதி ஆண்டுகளில் நான் முதன்முதலாகச் சந்திந்தபோதும் அப்படித்தானிருந்தார். 2015ல் சென்னையில் அவருடைய 7 நூல்களுக்கான விமர்சனக் கூட்டம் டிஸ்கவரி புக் பேலஸில் நடந்தபோதும் அப்படித்தானிருந்திருக்கிறார். அந்த ஏற்புரை யூடியூபில் கிடைக்கிறது. சிவாவை அறியாதவர்கள் அவரைப் பற்றி முழுமையாக அறிந்து கொள்ள அது ஒன்றே கூடப் போதுமானது. சிவாவிற்கு எதையும் உள்ளே வைத்துக் கொண்டு வேறு ஒன்றைப் பேசத் தெரியாது. அவருடைய உள்ளத்திற்கும் உதட்டிற்குமான இடையிலான சொற்களின் பயணம் எந்தத் தடைகளும் அணைகளுமற்று நேரடித் தாவல் திறன் உடையது.
பெரிய எதிர்பார்ப்புகள் ஏதுமற்று வாழ்க்கையை அதன் எதார்த்தங்களுடன் எதிர்கொண்டு பெருவருத்தம் தரும் விஷயங்களையும் தன் பகடிப் பேச்சாலும் வெடிச்சிரிப்பாலும் கடந்து சென்ற க.சீ.சிவக்குமாரின் மரணம் (மாடியில் துணிகாயப் போடக்கொடி கட்டும்போது தவறி விழுந்து இறந்துவிட்டார் (03/02/2017)) ஏற்படுத்திய வடுவை அவரைத் தவிர யாராலும் அழிக்க இயலாது.
(க.சீ.சிவக்குமார் என்ற படைப்பாளியின் படைப்புகள் மீதான என்னுடைய பார்வை என்றால் அது வேறு. இது சிவா என்றொரு என் சக பயணிக்கான அஞ்சலி மட்டுமே)

No comments:

Post a Comment