‘வேகம் வேகம் போகும் போகும் மேஜிக் ஜர்னி’ என்ற பாடல் எங்கோ பாடிக்
கொண்டிருப்பது ஈஷானியின் காதுகளில் மெதுவாகக் கேட்டுக் கொண்டிருக்கிறது. பாடலின் இசைக்கு
ஏற்றபடி தலையாட்டிக் கொண்டே ஆறாம் வகுப்பு படிக்கும் ஈஷானி சைக்கிளில் பள்ளிக்கூடம்
நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறாள். இன்றைய தேர்வுக்கான பாடங்களை நன்றாகப் படித்திருப்பதால்
அவள் மிகவும் மகிழ்ச்சியாக பள்ளிக்கூடம் நோக்கிச் சென்று கொண்டிருக்கிறாள். வீட்டிலிருந்து
பாதி தூரம் வந்திருப்பாள். பைபாஸைக் கடந்து அடுத்த ரோட்டில் திரும்பினால் அவளுடைய பள்ளி.
போகிற வழியில் அவளுடன் படிக்கும் நிவாஸின் வீடு இருக்கிறது. தினமும் அவன் இவளுக்காகக்
காத்திருப்பான். அவன் வீட்டு வாசலில் நின்று பெல் அடித்தால் போதும். இருவரும் பாடங்களைப்
பற்றிப் பேசியபடியே பள்ளிக்குச் செல்வார்கள். நிவாஷின் வீடு நெருங்கிவிட்டது. பிரேக்
போட்டு பெல் அடிக்க எத்தனித்தபோதுதான் பார்த்தாள். ‘சைக்கிளில் முன்னால் இருக்கும்
கூடையைக் காணவில்லை. அய்யோ சைக்கிளில் ஹேண்ட் பாரையும் காணோம். அப்படீன்னா… இவ்வளவு
தூரம் சைக்கிள் எப்படி வந்தது? இப்ப எப்படி சைக்கிளை நிறுத்துவது? பெடலைச் சுற்றுவதையாவது
நிறுத்தலாம் என்று பார்த்தால், பெடலையும் காணோம். ஏற்கனவே கால்கள் இரண்டும் அந்தரத்தில்
சும்மா சுற்றிக் கொண்டிருக்கிறதே’. அவள் மிகவும் பயந்து விட்டாள்.
அடுத்து கதையை நகர்த்த வேண்டிய திசை நோக்கி யோசித்துக் கொண்டிருந்த
சந்திரனைத் தொந்தரவு செய்தது அந்தத் செல்பேசி அழைப்பு.
“பாவலர் ஸ்வர்ண மூர்த்தி இறந்துட்டாரு” என்றான் கணேசன்.
“எப்ப…?”
“கொஞ்ச முன்னாலதான். ஒரு 9 மணி இருக்கும்”
“எங்க…?”
“மதுரை ஆஸ்பத்திரியில… பாடிய கொண்டு வராங்க…”
“எங்க கொண்டு வராங்க…?”
“அவரு வீட்டுக்குத்தான்… வைரவம்பட்டிக்கு”
“சரி. காலைல போகலாம்”
“சரி. காலைல 10 மணிக்கு நான் வந்து உங்களப் பிக்கப் பண்ணிக்கிறேன்.
ரெடியா இருங்க.”
“சரி….”
செல்பேசி இணைப்பைத் துண்டித்தான் சந்திரன். ஜிஏ நசன் என்ற பெயரில்
நவீன கவிதைகளும் எதார்த்தபாணிக் கதைகளும் எழுதிக் கொண்டிருக்கும் கணேசனுக்கு எழுத்தாளர்
என்ற முறையில் முதலில் பழக்கமானது வைரவம்பட்டி ஸ்வர்ண மூர்த்திதான் என்பதால் அவரது
மரணம் அவனைக் கொஞ்சம் உணர்ச்சி வசப்படுத்தியிருக்கிறது என்பதை அவன் குரலிலிருந்தே தெரிந்து
கொண்டான் சந்திரன். எழுதி முடித்ததைத் தொடர முடியாமல் நிறுத்திய சந்திரன் நினைவுகள்
வழியாக ஏறக்குறைய பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர் பயணித்தான்.
ஓரளவு எழுதிப் பார்த்து சில பத்திரிகைகளில் சந்திரனின் எழுத்துகள்
வரத் தொடங்கியிருந்த காலம். குழந்தைகளுக்கான எழுத்துதான் தனக்கு இலக்குவாக வருகிறது
என்று முடிவு செய்து அவன் குழந்தைகளுக்கான பத்திரிகைகளைத் தேடித்தேடித் தனக்கான இடத்திற்காக
தத்தளித்துக் கொண்டிருந்த நேரம். மாவட்ட அளவில் வெளியாகும் இலவச விளம்பர இதழ் ஒன்றில்
‘குழந்தைகளுக்கான பாடல் எழுத முனைபவர்கள், ஒரு குழந்தைப் பாடலுடன் தொடர்பு கொள்ள வேண்டிய
முகவரி – குழந்தை இலக்கிய மணி பாவலர் ஸ்வர்ண மூர்த்தி, வைரவம்பட்டி’ என்றொரு விளம்பரம்
வந்திருந்தது.
ஒரு குழந்தைப் பாடலுடன் தொடர்பு கொள்வதென்றால், யார் எழுதிய பாடலை
அனுப்ப வேண்டும். இவனுக்கு ஒன்றும் புரியவில்லை. இருந்தாலும், அவருக்கு ஒரு கடிதம்
எழுதி
ஆயிரம் தங்கக் காசிருந்தால்
ஆனை ஒன்று வாங்கிடுவேன்.
ஆனை ஒன்று வாங்கிடுவேன்.
அதன்மேல் ஏறி அமர்ந்திடுவேன்.
தெருவில் எங்கும் சுற்றிடுவேன்.
சிறுவர் தொடரச் சென்றிடுவேன்.
அருமை நண்பன் முத்துவையும்
அருகில் ஏற்றிக் கொண்டிடுவேன்.
'நானே ராஜா' என்றிடுவேன்.
நண்பன் முத்து மந்திரியாம்.
ஆனை வாங்கப் பணம்தேவை.
ஆசை உண்டு; காசில்லையே!
ஆனை ஒன்று வாங்கிடுவேன்.
ஆனை ஒன்று வாங்கிடுவேன்.
அதன்மேல் ஏறி அமர்ந்திடுவேன்.
தெருவில் எங்கும் சுற்றிடுவேன்.
சிறுவர் தொடரச் சென்றிடுவேன்.
அருமை நண்பன் முத்துவையும்
அருகில் ஏற்றிக் கொண்டிடுவேன்.
'நானே ராஜா' என்றிடுவேன்.
நண்பன் முத்து மந்திரியாம்.
ஆனை வாங்கப் பணம்தேவை.
ஆசை உண்டு; காசில்லையே!
என்ற பாடலை ‘ஆயிரம் தங்கக் காசிருந்தால்…’ என்று தலைப்பிட்டு அவருடைய
முகவரிக்கு அனுப்பி வைத்தான்.
மூன்று நாட்களுக்குள் பதில் கடிதம் வந்தது. ‘கவிஞர் சிரஞ்சீவி சந்திரனுக்கு
ஆசீர்வாதங்கள்…’ என்று தொடங்கிய அந்தக் கடிதத்தில், சந்திரன் அனுப்பிய பாடலிலிருந்த
சில பிழைகளைச் சுட்டிக் காட்டியதுடன், இன்னும் நீங்கள் அதிகம் தெரிந்து கொள்ள வேண்டுமென்றால்
இந்த மாத ‘பால ஸ்நேகன்’ இதழின் 32ஆம் பக்கம் பாருங்கள் என எழுதப்பட்டிருந்தது. சந்திரனுக்கு
இருந்த எழுத்தார்வத்தால் உள்ளூரில் கிடைக்காத பால ஸ்நேகனை மதுரையில் இருக்கும் நண்பர்
மூலமாக அஞ்சலில் வரவழைத்திருந்தான். பால ஸ்நேகன் 32ஆம் பக்கத்தில் குழந்தை இலக்கிய
மணி பாவலர் ஸ்வர்ண மூர்த்தி எழுதிய குழந்தைப் பாடல் ஒன்று வெளியாகி இருந்தது என்பதைத்
தாண்டி அதில் வேறு ஒன்றுமில்லை. இவனுக்கு முதலில் எரிச்சலாக இருந்தாலும், தன்னுடைய
எழுத்தை மற்றவர்களை வாசிக்க வைப்பதற்காக, நேரடியாகச் சொல்லாமல், அவர் எடுத்த முயற்சி
கொஞ்சம் யோசிக்க வைத்தது.
போகிற போக்கில் காலம் ஐந்தாண்டுகளை உருட்டிக் கொண்டோடியது. எட்டையபுரத்தில்
டிசம்பர் 11 அன்று நடைபெறவிருந்த ஒரு நிகழ்ச்சியில் கணேசனுக்கு ‘பாரதி வழிச் செம்மல்’
விருது வழங்கப்பட இருப்பதாகவும், முதல்நாள் நிகழ்ச்சி உள்ளூரில் இருப்பதாகவும் அழைத்தான்.
எழுதத் தொடங்கிய ஆண்டிலேயே அவன் ‘பாரதி வழிச் செம்மல்’ விருது பெறுவது சந்திரனுக்கும்
மகிழ்ச்சிதான். ‘என்னத்த எழுதி…’ என அடிக்கடி துவண்டு போகும் கணேசன் போன்றவர்களுக்கு
இப்படியான விருதுகள் ஊக்க மருந்தாகச் செயல்படும்.
சந்திரன் கணேசனுடன் நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தான். நிகழ்ச்சி
தேசிய அளவிலான தமிழ் எழுத்தாளர்கள் அமைப்பொன்றின் பதாகைப் பின்னணியுடன் நடைபெற்றுக்
கொண்டிருந்தது. நிகழ்ச்சியில் பாரதி பற்றியோ அவருடைய படைப்புகள் பற்றியோ பாரதி வழிச்
செம்மல் விருது பெற்றவர்கள் பற்றியோ யாரும் வாய் திறக்கவில்லை. பேசத் திறந்த வாய்கள்
அனைத்துமே நிகழ்ச்சிக்கான ஒட்டு மொத்த செலவையும் ஏற்றுக் கொண்டு பாரதி பிறந்த நாளில்
எட்டையபுரம் சென்று திரும்புவதற்கான பேருந்துச் செலவையும் ஏற்றுக் கொள்வதை கடந்த சில
ஆண்டுகளாகத் தொடர்ந்து செய்து கொண்டிருக்கும் முதலாளியை வள்ளல் எனப் புகழ்ந்து கொண்டிருந்தன.
பார்வையாளர் பகுதியில் பல வாய்கள் மூடப்படாமல் திறந்தபடி கேட்டுக் கொண்டிருந்தன.
சந்திரன் கணேசனிடம் “பாரதி விழான்னு சொன்ன… இங்க வேற ஏதோ நடந்துக்கிட்டிருக்கு…
மண்டபம் மாறி வந்துட்டமா…?” என்றான்.
“நீங்க கொஞ்சநேரம் வாயை மூடிக்கிட்டு சும்மா இருங்க…” என்றபடி முதலாளிக்கு
‘பாரதி வழி மாச்செம்மல்’ விருது வழங்கலாம் என்ற கருத்தை முன்வைத்த பேச்சைக் கேட்டு
எல்லோருடனும் சேர்ந்து கைதட்டிக் கொண்டிருந்தான் கணேசன். ‘வாயுள்ள பிள்ளை பிழைக்கட்டும்’
என நினைத்தபடி சந்திரன் மௌனியானான்.
இந்தக் கூட்டத்திற்கு பாவலர் ஸ்வர்ண மூர்த்தி முன்னிலை வகித்துக்
கொண்டிருந்தார். அவர் அமைப்பின் மாநிலப் பொறுப்பில் இருப்பதாகவும், முதலாளிக்கு நெருக்கமானவர்
என்றும் இந்த நிகழ்ச்சி தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக நடப்பதற்குக் காரணம் அவர்தான்
என்றும் இடையில் கணேசன் சந்திரன் காதில் கிசுகிசுத்தான்.
ஒரு வழியாகக் கூட்டம் முடிந்தது. சந்திரனை ஸ்வர்ண மூர்த்திக்கு
’குழந்தை எழுத்தாளர்’ என்று அறிமுகம் செய்து வைத்தான் கணேசன். அவர் சந்திரனிடம் “நீங்கள்
குழந்தைகளுக்காக எழுதுவததென்றால் அழ. வள்ளியப்பாவின் எழுத்துக்களையும், பாரதியின் குழந்தைப்
பாடல்களையும், என்னுடைய எழுத்துக்களையும் ஊன்றிக் கற்க வேண்டும்’ என்றார். சந்திரன்
சிரித்தபடி தலையாட்டி, தலை வலிக்கிறதென்று சொல்லி அந்த இடத்திலிருந்து தப்பிக்க முயன்றான்.
ஐந்தாண்டுகளுக்கு முன்னர் எழுதிய கடிதம் பற்றி ஏதும் பேசவில்லை.
புறப்படும்போது அவர் சந்திரனிடம் “நீங்களும் அமைப்பில் உறுப்பினராகலாமே…
உறுப்பினராகி விட்டால் அடுத்த டிசம்பர் 11ல் உங்களுக்கும் பாரதி வழிச் செம்மல் விருது
கொடுத்து விடலாம்” என்றார்.
“நானு கேட்டுச் சொல்றேனே…”
“யாரிடம்…?”
“பாரதிகிட்ட…”
அவர் அதிர்ச்சியாக “பாரதியிடமா…?” என்றார்
“ஐயா… அவரோட மனைவி பேரு பாரதி… அதைத்தான் சொல்றார்…” என இடை மறித்த
கணேசன், விஷயம் வில்லங்கமாவதைப் புரிந்து கொண்டு, “அவரு தலைவலிக்கிதுன்றாரு… நாம இன்னொரு
நாள் பேசலாம்…” என அத்துக் கொண்டு கிளம்ப எத்தணித்தான்.
அவர் சந்திரனைத் தலைசாய்த்துப் பார்த்து “பேசலாம்… பேசலாம்…” என்றபடி
விடை தந்தார்.
அடுத்த ஒரு வருடம் அந்த நிகழ்ச்சிக்குச் சென்ற கணேசன், சிறுபத்திரிகைச்
சூழலில் ஜிஏ நசனாக அவதாரம் எடுத்த பின்னர் போகவில்லை.
பின்னரும் காலம் ஐந்தாறு ஆண்டுகளை கடத்திச் சென்றிருந்தது. ஜிஏ
நசனும் சந்திரனும் சிறுபத்திரிகைச் சூழலில் குறிப்பிட்டுச் சொல்லும்படியான எழுத்தாளர்களாக
வளர்ந்திருந்தார்கள். மாவட்ட கலை இலக்கிய அமைப்பு ஒருநாள் இலக்கிய நிகழ்ச்சி ஒன்றிற்கு
ஏற்பாடு செய்திருந்தது. ‘நானும் என் எழுத்தும்’ என்ற தலைப்பில் சந்திரனையும் ஜிஏ நசனையும்
உரையாற்றக் கேட்டிருந்தார்கள். நிகழ்ச்சிக்கான அழைப்பிதழ் வரவில்லை என்றாலும் செல்லிடப்
பேசியில் தகவல் சொல்லியிருந்தார்கள்.
நிகழ்ச்சி நடக்கும் அரங்கில்தான் அழைப்பிதழ் கொடுத்தார்கள். நிகழ்ச்சியில்
அதே தலைப்பில் உரையாற்ற பாவலர் ஸ்வர்ண மூர்த்தியும் பேராசிரியர் கு. ஜெமினி கணேசனும்
கங்காணி நாவலாசிரியர் தோழர் கொகொ சாமியும் அழைக்கப்பட்டிருந்தார்கள்.
ஒவ்வொருவரும் அவர்களின் எழுத்துகள் பற்றியும், எழுதத் தூண்டிய சம்பவங்கள்
பற்றியும் பேசினார்கள். இறுதியாக பாவலர் ஸ்வர்ண மூர்த்தி பேசத் தொடங்குகையில் அழைப்பிதழில்
தன் பெயரில் ஏற்பட்ட ஒற்றுப் பிழையைச் சுட்டிக் காட்டி, இது எதார்த்தமாக நடந்ததா அல்லது
திட்டமிட்டுச் செய்யப்பட்டதா என்று கேட்டார். அதுவரை திறக்கப்படாத அழைப்பிதழை அப்போதுதான்
சந்திரன் திறந்து பார்த்தான். மற்றவர்களும் பார்த்தார்கள். பாவலர் பாவலா ஆகியிருந்தார்.
சிரமப்பட்டு சிரிப்பை அடக்கியபடியே ஜிஏ நசனிடம் காண்பித்தான். ஜிஏ நசனுக்கும் சிரிப்பு
வந்தது. ஒற்றுப் பிழையும்கூட சரிதான் என்றும் அழ. வள்ளியப்பாவை முழுமையாக உள்வாங்கியிருப்பதாகவும்
அவரைத்தான் தான் பிரதி எடுப்பதாகவும் பாவலர் ஸ்வர்ண மூர்த்தி பேசினார்.
வழக்கமான கூட்டத்திற்குப் பிறகான கூட்டத்தில், சந்திரன் ‘பத்தாண்டுகளுக்கு
முன்னரே உங்களுக்கு நான் ஒரு கடிதமும் குழந்தைப் பாட்டு ஒன்னும் அனுப்பியிருக்கிறேன்”
என்றான்.
“அப்படியா… நினைவில்லை… மிக்க மகிழ்ச்சி…”
“நீங்கள்கூட நான் அனுப்பின பாட்டுல பிழைகளைத் திருத்திக்கச் சொல்லி
பதில் கடிதம் போட்டீங்க”
“திருத்திக் கொண்டீர்களா?”
“அத எழுதுனவர்தானே திருத்தணும். நான் திருத்த முடியாதே. ஏன்னா அந்தப்
பாட்ட நான் எழுதல”
“எழுதியவரிடம் சொல்லி திருத்திக் கொள்ளச் சொல்ல வேண்டியதுதானே?”
“அது அழ. வள்ளியப்பா எழுதுன பாட்டு”
சந்திரனின் இந்த பதில் பாவலர் ஸ்வர்ண மூர்த்திக்கு அதிர்ச்சியளித்திருக்க
வேண்டும். அமைதியாக இருந்தார். சந்திரனுக்கும்கூட சங்கடமாகத்தான் இருந்தது. ஜிஏ நசன்
சந்திரனை முறைத்துக் கொண்டிருந்தான். சூழல் இறுக்கமானதாய் இருவரும் நினைத்துக் கொண்டிருக்கையில்
பாவலர் மென்மையாகச் சிரித்தபடியே, “பத்து ஆண்டுகளுக்குப் பின்னர், நான் பாவலர் இல்லை.
பாவலாதான் என்று ஒத்துக் கொண்டதால் சொல்ல வேண்டும் என்று தோன்றியதா?” என்றார்.
சந்திரன் “சாரி..” என்றான்
“பரவாயில்லை…. பிழை எங்கிருந்தாலும் சுட்டிக் காட்டுகிற உறுதி எல்லோரிடமும்
இருப்பதில்லை. அது உங்களிடம் இருக்கிறது. இழந்துவிடாதீர்கள்” என்றார்.
தன் மீதான எரிச்சலையோ, கோபத்தையோ, நிராகரிப்பையோ எதிர்பார்த்த சந்திரனுக்கு
அவரின் இந்த வார்த்தைகள் அதிர்ச்சியாக இருந்தன.
அடுத்த இரண்டாண்டுகளுக்குப் பின்னர் அவர் எழுதிய நாவலை சந்திரனிடம்
கொடுத்து விமர்சனம் எழுதித்தரச் சொல்லிக் கேட்டார். நாவலை வாசித்து முடித்த சந்திரன்
மூத்த குடிமகனை மீண்டும் மீண்டும் மனம் புண்படச் செய்ய வேண்டாம் என்பதால் சந்திக்கும்
பொழுதுகளில் நாவல் பற்றி அவரிடம் பேசவில்லை.
நீண்ட நாட்களுக்குப் பின்னர் அவராகவே ஒரு நாள் “சந்திரனின் விமர்சன
வட்டத்திற்குள், என்னுடைய நாவல் வரவில்லை போலும். எழுத மறுப்பதும்கூட ஒருவிதத்தில்
விமர்சனம்தான்” என்றார்.
“அப்படி இல்லீங்கய்யா…”
“அப்படி இல்லை என்றால் விமர்சனம் எழுதித் தருகிறீர்களா சந்திரன்”
“இல்லீங்கய்யா… அது வந்து…” என சந்திரன் இழுத்துக் கொண்டிருக்கையில்
அவர் சிரித்தபடியே “எனக்கு இது இழப்புதான். பரவாயில்லை…” என்றார்
இப்படி அவர் தொடர்பான நினைவுகள் ஒவ்வொன்றாய் வந்து போய்க்கொண்டிருந்தன
சந்திரனிடம். ‘தன்னைச் சிரஞ்சீவி என்றழைத்துக் கடிதம் எழுதிய, எப்போதும் எழுத்து நடையிலேயே
பேசுகின்ற, விரோதம் பாராட்டத் தெரியாத குழந்தை ஒன்று இன்று அமரர் ஆகிவிட்டது. இதுவும்
எழுத்துப் பிழையாகி என் நினைவுகளில் அது அமரா ஆகிவிட்டது.’ என்ற அபத்த நினைவுடன் கண்ணயர்ந்தான்
சந்திரன்.
நன்றி : அந்திமழை (மே 2016)
ஓவியங்கள் : மனோகர்
No comments:
Post a Comment