Wednesday, February 17, 2016

கவுண்டமணியிலிருந்து கராத்தேமணிவரை – ஹரி ராஜா


சில ஆண்டுகளுக்கு முன் ஒரு பாடலை நான் தினமும் கேட்க நேர்ந்தது. “பூவே இளைய பூவே” என்ற அந்தப் பாடல் மிர்ச்சி பன்பலையில் ஒலிபரப்பப்படும். எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் அது. அந்தப் பாடலின் மெட்டு என்னை மிகவும் ஈர்த்தது. மற்றபடி  அதைப் பாடியவர் குறித்து  நான் சிந்தித்தது இல்லை.
பாடல் கேட்கும் வசதி கொண்ட கைபேசி வாங்கிய பிறகு தூக்கத்துக்கு முந்தைய பொழுதுகள் இளையராஜாவின் இசையோடு கழிந்தன. பிறகு ஒரு  குரல் என்னை பாடாய்ப் படுத்தியது. அது தூங்க வைக்கும் குரல் அல்ல; தூக்கம் கெடுக்கும் குரல் என்பதாக உணர்ந்தேன்.
அவர் அறியப்பட்ட பாடகர் என்று நான் எப்போதும் ஏற்றுக் கொள்வதில்லை. ஏனெனில் ஒரு கலைஞன், அவனது கலையில் அவன் வெளிப்படுத்தும்  மேதைமையின் காரணமாக அறியப்படவும் கொண்டாடப்படவும் வேண்டும். அந்த வகையில் அறியப்படாத எத்தனையோ கலைஞர்களில் மலேசியா வாசுதேவனும் ஒருவர்.
வாசுதேவனது குரல் டி.எம்.எஸ் குரலை ஒத்திருக்கும் ; அவர் சி. எஸ் ஜெயராமன் போலவே பாடுவதில் வல்லவர். ஆனாலும் அவர் தனித்தன்மை வாய்ந்த பாடகர் என்பதில் எந்த முரணும் இல்லை. உதாரணமாக, ’ஒரு கூட்டுக் கிளியாக’ பாடலில் அவரது குரல் டி. எம். எஸ் குரலும் அல்ல; சிவாஜி குரலும் அல்ல. அது ஒரு அண்ணனின் குரல். அந்தப் பாடல் தர வேண்டிய உணர்வு அதுதான். அதை மிகச்சரியாகச் செய்திருப்பார் மலேசியா.
இன்னும் எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் சரி. ”மாரியம்மா மாரியம்மா” பாட்டு இல்லாத கோவில் திருவிழாவும் “பொதுவாக என் மனசு தங்கம்” பாட்டு இல்லாத பொங்கத் திருவிழாவும் நடைபெறுவதற்கு சாத்தியமே இல்லை. எனது கைபேசியின் பாடல் பட்டியலில் “மாரியம்மா மாரியம்மா” பாடலுக்கு அடுத்த பாடலாக “ஆகாய கங்கை” பாடலை வைத்துள்ளேன்.  இரண்டிலும் ஒலிப்பது ஒரே குரல் தான் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாத வகையில் அவர் காட்டியிருக்கும் வேறுபாடுகள் அபாரமானவை.
அவரது முதன்மையான சிறப்பே இந்தப் பன்முகத்தன்மை தான். பாலுவின் காலத்தில் அவருக்கு நிகரான பன்முகத்தன்மை வாய்ந்த பாடகர் என்று வாசுதேவனைச் சொல்லலாம்.
பாலசுப்பிரமணியம் பாடுவதை விட பேசுவதை கேட்டுக் கொண்டே இருக்கலாம். ஆனால் மலேசியா விசயத்தில் இதுவும் முரண்பாடுதான்.  சினிமாவில் (பெரும்பாலும் கொடூரமான வில்லன் வேடத்தில்) அவர் பேசும் வசனங்களில் அந்தப் பாடகன் வெளிப்பட்டதே இல்லை. இன்னும் சொல்லப் போனால் அவர் பாடகர் என்று அறியாமல் அவர் நடித்த படங்களை மட்டும் பார்க்க நேர்ந்த ஒருவருக்கு மலேசியா பாட்டு பாடுவார் என்பதை நம்புவதுகூட கடினமாக இருக்கும். ஆனால் அந்தக் குரல்தான் ”கோடைகாலக் காற்றே”, “அள்ளித்தந்த பூமி” போன்ற பாடல்களைப் பாடியது.
உணர்வின் எல்லையில் நின்று பாடுவது அவரது மற்றொரு சிறப்பு. மேல்க்கட்டையில் பாடுவதை இங்கு குறிப்பிடவில்லை. மாறாக, ஒரு பாடல் கேட்பவருக்கு என்ன உணர்வினை அளிக்க வேண்டுமோ அதன் எல்லையிலிருந்து ஒலிக்கும் அவரது குரல். “ஒரு தங்க ரதத்தில்” பாடலின் முதல் சரணத்தை அவர் தொடங்கியிருக்கும் விதம் மேற்சொன்ன கூற்றுக்கு உதாரணம். முதல் மரியாதை படத்தில் “பூங்காத்து திரும்புமா” பாடலில் அவர் வெளிப்படுத்தியிருக்கும் ஏக்கம் மானுட சமூகத்தினை அன்புக்காக முறையிடுவதாகவே இருக்கிறது. .
”ஓ பார்ட்டி நல்ல பார்ட்டி தான்”, “சுட்டி உன் வாலைக் கொஞ்சம் சுருட்டிக் கொள்ளடி”, ”கட்டை வண்டி கட்டை வண்டி” போன்ற நையாண்டிப் பாடல்களிலும் தனது நேர்த்தியை வெளிப்படுத்தியிருப்பார் மலேசியா.
”காதல் வந்திருச்சி ஆசையில் ஓடி வந்தேன்” பாடலைப் பாடியவர் கமல் என்றே எண்ணத் தோன்றும் வகையில் அவரைப் போலவே பாடியிருப்பார். “இந்த மின்மினிக்கு” பாடலும் அப்படியே.
இவர் பாடிய பாடல்கள் தான் அதிகமாக மீளாக்கம் செய்யப்பட்டுள்ளன.( ”தண்ணி கருத்திருச்சு”, “காதல் வைபோகமே”, “வெத்தலையப் போட்டேன்டி”, “பொதுவாக என் மனசு தங்கம்”, “காதல் வந்திருச்சு”, “என்னம்மா கண்ணு - பாலுவுடன், “என்னோட ராசி நல்ல ராசி”, “ஊரு விட்டு ஊரு வந்து”). மேற்சொன்ன பாடல்களின் மீளாக்கம் நினைவுக்கு வருகிற போதே தொற்றிக் கொள்ளும் எரிச்சல் அவற்றின் மூலப் பாடல்வரை பரவுகிறது. குறிப்பாக “காதல் வைபோகமே” பாடல் நகைப்புக்குள்ளாக்கப் பட்டது.
மலேசியா வாசுதேவனின் குரல்  நாயகர்களுக்காக ஒலித்த அதே விகிதத்தில் குட்டி கதா பாத்திரங்களுக்காகவும் ஒலித்திருக்கிறது. சீர்காழி கோவிந்தராஜனுக்குப் பிறகு அந்தப் பணியைச் செய்தவர் மலேசியா. ரஜினியின் முதன்மையான பாடகராக இருந்தாலும் “என்னம்மா கண்ணு”, “பட்டுக்கோட்டை அம்மாளு” ஆகிய பாடல்களில் சத்யராஜுக்கும் கராத்தே மணிக்கும் பாடியிருப்பார். எண்பது, தொண்ணூறுகளில் படத்தின்  முக்கியமில்லாத கதாப்பாத்திரம் பாடுகிறது என்றால் அங்கு இவரது குரல்தான் ஒலிக்கும்.
அவரது பாடல்களுக்கு கிடைத்த வரவேற்பை தனதாக்கிக் கொள்ளத் தெரியாத மனிதர் அவர். முப்பது ஆண்டுகால திரையிசை வாழ்வில் அவரோடு பயணம் செய்தவர்கள் அவரை புறக்கணித்த போதிலும் அவரால் அதை ஏற்றுக் கொள்ள முடிந்திருக்கிறது. எந்த அங்கீகாரமும் கிடைக்கப் பெறவில்லை என்றாலும் கூட நிறைவான வாழ்க்கை வாழ்ந்து மறைந்தவர்.  நிச்சயமாக கொண்டாடப்பட்டிருக்க வேண்டிய பாடகர் அவர். 

No comments:

Post a Comment