Friday, November 6, 2015

ஆக்கவோ... நீக்கவோ... - மதிகண்ணன் - சிறுகதை

இலைகள் ஆளாய்ப் பறந்து திரிந்து, பின் சருகாகித் தனிமைப்பட்ட காலம். காலைச் சூரியன் உச்சத்தில் நின்று, பின் இற்று வீழ்ந்த நேரம். மூவண்ணம் பூசப்பட்ட பரம்பரைச் சுதேச முடி திருத்தகத்திலிருந்து அந்தப் பொதுமனிதன் “ஐயோ… வேண்டாம் ஆளை விடு” என்றபடி வெளியில் ஓடி வந்தான். அவனது முகத்தில் இடப்புறம் சவரம் செய்வதற்காகப் பூசப்பட்ட சோப்பு நுரை வழிந்து கொண்டிருந்தது. வலக் கன்னம் மழிக்கப்பட்டிருந்தது. மழிக்கப்பட்ட கன்னத்தில் சம இடைவெளியில் படுக்கை வசமாக மூன்று கீறல்கள் தெரிந்தன. கீறல்களில் ஆங்காங்கே செம்புள்ளிகளாய் இரத்தத் துளிகள் எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தன. கன்னக் காயத்தில் எரிச்சலை ஆற்ற முடியாதபடி கை பட்ட இடங்களிலெல்லாம் எரிச்சலின் வீரியம் அதிகமானது. அந்தப் பொதுமனிதன் கன்னத்திலிருந்து கைகளை விலக்கி வைத்துக் கொண்டான். வெக்கையின் கொடூரத்தால் தலைக்குள் வியர்ந்து கன்னத்தில் வழிந்த வியர்வைத் துளி கீறலைத் தொட நின்ற நிலையிலேயே அவன் அனலில் விழுந்த அப்பளமாய் சுருண்டு புரண்டான். பதட்டமாக கைகள் இரண்டையும் விரல்கள் உதிர்ந்து விழும்பட உதறிக் கொண்டான். அப்படி உதறும்போது எரிச்சலின் தீவிரம் கட்டுக்குள் இருப்பதாக உணர்ந்தான். தொடர்ந்து பல்வேறு வேகங்களில் கைகளை உதறிக்கொண்டே முதல் முறையாக தான் நின்று கொண்டிருக்கும் இடத்தில் அக்கம் பக்கம் நோட்டம் விட்டான் அந்தப் பொதுமனிதன்.
சாலையின் ஓரத்தில் பூட்டப்பட்ட சிற்றங்காடி ஒன்றின் வாசலில் அவன் நின்று கொண்டிருந்தான். அந்தக் கடையின் பூட்டப்பட்ட இரும்புக் கதவின் அலைஅலையான வளைவுகளில் இது மிகவும் புரட்சிகரமானது என்ற குறிப்புடன் டூத் பிரஸ் ஒன்றின் படம் வரையப்பட்டிருந்தது. அவனுக்கு அந்த விளம்பரத்தைப் பார்த்தவுடன் ஏனோ குமட்டிக் கொண்டு வந்தது. குமட்டல் வாந்தியாகி விடக்கூடாது என்ற பதைபதைப்பில் தலையை அண்ணாந்தான். கொட்டும் மலையில் சின்ன சிம்மக் குரலோன் நகைக்கடைக்காக புரட்சிக் குடை பிடித்திருந்தது கண்களில் தைத்தது. அடுத்த வினாடி அடக்க நினைத்த வாந்தி வந்துவிட்டது. அடைக்கப்பட்ட புரட்சிகரக் கடையின் வாசலில் அமர்ந்து வாந்தி எடுத்துவிட்டுத் தலையை லேசாக நிமிர்த்தி சலையை நோட்டமிட்டான்.
சாலையில் பலரும் தங்களின் தேவைகளுக்கேற்ப இருபுறமும் ஓடிக்கொண்டிருந்தார்கள். அவர்களின் முகத்தில் வலியும் வேதனையும் சிறுமகிழ்ச்சியும் பெருமிதமும் திருப்தியும் அதிருப்தியும் கோபமும் துவேசமும் குறுநகையும் நிதானமும் கபடமும் கம்பீரமும் கலவையாக அப்பிக் கிடந்தன. தங்களின் தகுதிக்கேற்ற வாகனங்களாலும் கால்நடையாகவும் சாலையை அவர்கள் இயக்கிக் கொண்டிருந்தார்கள். அவர்களின் தனக்குள்ளான முணுமுணுப்பும் அருகிலிருப்பவர்களுடனான கமுக்க உரையாடலும் சுற்றுப் புறத்தைப்பற்றி சற்றும் கவலைப்படாத உரத்த பேச்சும் சொல்லித் தீர வேண்டிய விஷயங்களைச் சொல்ல முடியாமல் தவித்தாலும் சொல்ல முயல்வதால் உண்டான குளறலும் தெரியாத விஷயங்களை நன்றாகத் தெரிந்த ஒன்றைப் பேசுவதுபோல் பேசுவதால் உண்டான உளறலும் மிகத் தெளிவாகத் தெரிந்தவற்றையும்கூட தெளிவாகப் பேசமுடியாதபடிக்கு சூழல் தந்த குமைச்சலால் வெளிப்படும் வார்த்தைகளுமாய் சாலை பேரிரைச்சலாய் இருந்தது. வாழ்க்கை துரத்தும் வேகத்திற்கேற்ப தங்களின் பயண வேகத்தையும் தூரத்தையும் தீர்மானித்துக் கொண்டிருக்கும் இவர்களுக்கு தன்னுடைய எரிச்சல் புரிவதற்கு வாய்ப்பில்லை என்பதை அவன் உணர்ந்தான். இப்படி ஓடிக் கொண்டிருக்கையில் அக்கம் பக்கத்தில் வேதனையுடனும் மனஉளைச்சலுடனும் தவித்திருந்த யாரையும் தானும் ஒருபோதும் கண்டு கொண்டதில்லை என்ற குற்ற உணர்ச்சி அவர்களின் மேல் பலிசொல்வதற்கான வாய்ப்பினை அவனுக்கு வழங்கவில்லை.
சாலையின் எதிர்சாரியில் சிலர் தனியாகவும் சிற்சிலராகவும் நின்றபடி எம்பி எம்பி முஷ்டி தூக்கி முழங்கிக் கொண்டிருந்தார்கள். அவர்களின் வலதுகாலை முன்டுக் கற்கள் மீதும் இடதுகாலை ஒற்றையான அல்லது அடுக்கப்பட்ட செங்கல்களின் மீதும் வைத்து நின்று கொண்டிருந்தார்கள். அப்படி நிற்பதே மிகவும் சிரமம் என்றாலும் அவர்கள் தங்களின் சமநிலை காத்து நின்று கொண்டிருந்தார்கள். அவர்கள் நிற்கும் நிலையில் இருந்து சமநிலை தகர்ந்தால் விழவேண்டிய இடமாக நெடுநாட்களாகச் சுத்தம் செய்யப்டாத பெருஞ்சாக்கடைக் குழியாக இருந்தது. அப்படி விழுபவர்களை வாரி அணைத்துத் தங்களவராக்கிக் கொள்ளும் ஆர்வத்துடன் சில சாக்கடைப் பெருச்சாலிகள் பெருங்குழியருகே அமைதிகாத்து, காத்து நிற்றுகொண்டிருக்கின்றன. அவர்கள் ஒவ்வொரு அணியும் வெவ்வேறு விஷயங்கள் குறித்து முழக்கம் எழுப்பிக் கொண்டிருந்தார்கள். ஆனால் அவர்களுக்குள் ஏதோ ஒற்றுமை இருப்பதுபோல் அவனுக்குத் தெரிந்தது. அவர்களில் சிலர் அருகில் முழங்குபவர்களைக் கைகாட்டி முழங்குவதாகவும் தெரிந்தது. அவர்களின் முழக்கத்தின் தீவிரம் முகங்களில் தெரிந்தது. நம்பகத் தன்மை முழக்கத்தின் தொனியில் தெரிந்தது. தாங்கள் நம்புகின்ற விஷயங்களில் அவர்களுக்கத் துளியும் ஐயமில்லை என்பதை அவர்களின் செயல்கள் நிரூபித்தன. ஆனால் அவர்களின் குரலில் முன்வைக்கும் எந்த ஒரு விஷயமும் அவனை வந்தடைய முடியாதபடிக்கு சாலையின் பேரிரைச்சலும் கன்ன எரிச்சலும் தடுத்தன. அவர்களும் பல்வேறு விதமான முழங்கங்களை ஒரே நேரத்தில் முன்வைப்பதால் எதுவும் பிடிபடவில்லை. காதில் விழுந்தவரை அவர்கள் முன்வைக்கும் விஷயங்களும்கூட இவனுக்கு மிகவும் அன்னியமானதாக அவன் உணர்ந்தான். பேராசிரியராக இருந்து ஓய்வுபெற்ற கவிஞரான இன்குலாப்பின் பெயரை அவர்கள் அடிக்கடி தங்கள் முழக்கதினிடையே சொல்லிக் கொண்டிருந்தார்கள். “பாவம் அவருக்கு ஏதும் ஆகிவிட்டதோ என்னவோ?” என்று அவன் நினைத்துக் கொண்டான்.
அக்கம் பக்கம் வேடிக்கை பார்த்து ஒவ்வொன்றைப் பற்றியும் யோசித்துக் கொண்டிருந்தாலும் கன்னத்தின் எரிச்சல் சற்றும் குறையவில்லை. இப்போது அவனை நோக்கி சிலர் வந்து கொண்டிருந்தார்கள். வந்தவர்கள் அவனை மிகவும் பரிதாபத்துடன் பார்த்தார்கள். “அடடா இப்படி ஆக்கிட்டானுகளே” “இவனுகள இந்த ஊருலயே இல்லாம ஆக்கினாத்தான் சரியா வரும்” சிலர் சொல்லிக் கொண்டிருக்கும்போதே ஒருவன் அவன் கன்னத்தின் காயத்திற்கு காற்று வேண்டுமென வாயால் ஊதிக் கொண்டிருந்தான். காற்று பட்டவுடன் கீறல் விழுந்த இடத்தில் கொஞ்சம் எரிச்சல் குறைந்ததுபோல் தெரிந்தது. ஆனால் ஊதுகிறவனின் வாய் பிண நாற்றம் அடித்தது.  ஊதுகின்றபோது இவன் மூச்சு விடுவதை தற்காலிகமாக நிறுத்திக் கொண்டான். அவர்கள் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். “நீங்க அங்க போயிருக்கக் கூடாது” “உங்க பேர் என்ன?” என்ற அவர்களின் கேள்விக்கு “சுதேசி” என்றான். உடனே அவர்கள் மிகமிக மகிழ்ச்சியாக “அட நம்ம ஆளு” என்றார்கள். ஊதுபவனும் குஷியாகி வேகமாக ஊதினான். இவனுக்கு மூச்ச வாங்கியது. இவன் கன்னத்தில் இருந்த சோப்பு நுரை ஏற்கனவே காற்றில் கரைந்திருந்தாலும் சோப்பின் பிசுபிசுப்பு மட்டும் அப்படியே இருந்தது. அவர்கள் சுதேசியின் கன்னத்தில் இருந்த பிசுபிசுப்பை துடைக்க முயல்கையில் இவனுக்கு சுரீர் என ஏதோ குத்தியது. “ஆ…” என்றான். “ஒன்னுமில்லை. ஒன்னுமில்லை. சும்மா துடைச்சு சுத்தம் பண்ணுனோம்.” “எப்படி இருந்த சுதேசிய இப்படி  ஆக்கிட்டாங்களே” என்று ஆதங்கப்பட்டவர்கள். “பரம்பரை சுதேச முடிதிருத்தகம் சரியா வராது, பாரம்பரிய சுதேச முடிதிருத்தகம்தான் சரியா வரும்ன்றத ஏன்தான் பொது மக்கள் இன்னும் புரிஞ்சுக்க மாட்டேன்றாங்களோ?” “கொஞ்சம் இப்படி நம்ம கடைக்கு வாங்க. எல்லாத்தையும் சரிபண்ணிரலாம். அவங்களையும் ஒரு கை பாத்திரலாம். தரமில்லாத தயாரிப்புகளாலதான் இப்படி கீறல் விழுது. நம்மகிட்ட கீறல்ன்ற பேச்சுக்கே இடமில்லை. வாங்க… வாங்க…” என்றபடி கைத்தாங்கலாக சுதேசியை அழைத்துச் செல்கின்றார்கள். கன்னத்தில் மட்டுமே கீறல்பட்டிருந்த சுதேசியும் அவர்கள் கைபட்டதும், கைகால் விளங்காதவனைப்போல் அவர்களின் ஆதரவுடன் தடுமாறித் தடுமாறி உடன் சென்றான். ‘பாரம்பரிய சுதேச முடிதிருத்தகம்’ என்ற ஒற்றை வண்ணம் பூசப்பட்ட அந்தக் கடைக்குள் நுழைந்தாகி விட்டது. அந்த முடி திருத்தகத்தில் பல்வேறு விதமான பங்காளித் தகறாறுகளுக்கு மத்தியில் தன்னை நிர்வாகியாக நிலைநிறத்திக் கொண்ட அரைகுறையாய் முடிதிருத்திக் கொண்ட அந்த நாயகர் இருந்தார். கடைக்குப் பெயர்தான் பராம்பரிய சுதேச முடிதிருத்தகம். நாயகர் வெளிநாட்டு நாவிதர்களைப்போல் தொழிற்கவசஉடை  (apron) போன்ற உடை அணிந்திருந்தார். அந்த உடையும்கூட வெளிநாட்டு நிபுணரால் வடிவமைக்கப்பட்டதாக இருக்கலாம்.
உள்ளே நுழைந்தவர்களை கோபக்குறிப்பு காட்டும் புன்னகையுடன் நாயகர் தலையசைத்து வரவேற்றார். வந்தவர்கள் சற்றே விலகி நிற்க ‘சுதேசி’ சுழல் நாற்காலியில் அமர்த்தப்பட்டார். அவருக்கு முன்னே இருந்த கண்ணாடியில் அவர் நேர்முகம், புறமுதுகு என வரிசை காட்டி அமர்ந்திருந்தது தெரிந்தது. கண்ணாடிக்கு மேலே ‘இங்கே ஆக்கு’ ‘இங்கே நீக்கு’ என்று ஒளிர்ந்தது. ‘MAKE HERE’ ‘CLEAN HERE’ என்ற ஆங்கிலப் பதங்களும் இடையிடைய அதே இடத்தில் ஒளிர்ந்து மறைந்தன. சுழல் நாற்காலியில் அமர்த்தப்பட்டதும், சுதேசி பெரிய முரட்டுப் போர்வை ஒன்றால் நாற்காலியுடன் சேர்த்துக் கட்டப்பட்டான். போர்வை மிகவும் பாரம்பரியமானது போலும். படிந்திருந்த அழுக்கே அரை அங்குலம் இருக்கலாம். சுதேசிக்கு உள்ளுக்குள் நமநமக்கத் தொடங்கியது. எதிர்பாராத நேரத்தில் பின்னால் நின்றிருந்த நாயகர் சுதேசியின் இரண்டு கன்னங்களிலும் உள்ளங்கையால் ‘சப் சப்’ என நான்கைந்து முறை தட்டினார். கீறல் விழுந்த கன்னத்தில் அடி சுரீர் என விழுந்ததும் சுதேசி நாற்காலிக்குள்ளேயே குதித்தான். தட்டும் கைகளைத் தட்டிவிட முடியாதபடி கைகள் போர்வைக்குள் சிக்கிக் கொண்டன. வலியால் “ஆ… …” எனக் கத்தினான். சுதேசியின் அலறல் கேட்ட மறுவினாடி எங்கிருந்தோ அவனது மடியில் குதித்தது ஒரு கொழுத்த பூனை. சுதேசி தன்னுடைய அலறலை மீண்டுமொரு முறை எதிரொலித்தான். இதுவரை அந்தப் பூனை எங்கிருந்தது எனத்தெரியவில்லை. அது மென்மையாகத்தான் கத்தியது. பூனை கத்தியதும் நாயகர் பதட்டமானார். பூனையைத் தூக்கி மெதுவாகத் தடவிக் கொடுத்தார். அதனைத் தன் முகத்தருகில் தூக்கிப் பிடித்தார். பூனை ‘மியாவ்… மிய்யா..வ்… மி…ய்ய்யா…வ்…’ என உடம்பை அஷ்ட்ட கோணலாக்கி மெதுவாகத் கத்தியது. அதன் முனகலுக்குச் செவிசாய்த்துத் தலையாட்டிய நாயகர் தன்னுடைய வேலைகளை அப்படியே போட்டுவிட்டு, சுதேசியின் காதில் இருந்த ஒற்றைக்காதுக் கடுக்கனைக் கழற்றினார். கடுக்கனை கழற்றிக் கொண்டு பூனையைத் தூக்கிக் கொண்டு நாயகர் வெளியேறினார்.
சுதேசி சுற்றி நின்றவர்களிடம் “என்னாச்சு?” என்றார்.
அவர்கள் “ம்… பூனை அழுவுது… அதுக்கு ஆயி வருது. அதான் அவரு அதக் கூட்டிக்கிட்டு ‘ஆஸ்திரேலியா கார்டன்’ போயிருக்காரு. அங்க ஒரு குழி தோண்டி அதுல அது ஆயி போகும்”
“என்னோட கடுக்கனை எதுக்குக் கழற்றிட்டுப் போறாரு?”
“அது ஆயி போக காசு வேணுமில்ல”
“உங்க பூனை ஆயி போக நான் ஏன் என் கடுக்கனைக் கொடுக்கணும்?”
“யோவ்… அது என்ன சாதாரனப் பூனையா. புணுகுப் பூனை. அது ஆயி போனாத்தான் அதத் தடவி உன்னோட முகத்தை மணக்க வைக்க முடியும். அப்ப நீதானே பணம் குடுக்கணும்?”
“நல்லா மணத்துச்சு போங்க… இப்ப என்னமோ நானு நாறிப்போயிக் கிடக்கிறு மாதிரியில்ல பேசுறீங்க?”
அவர்கள் எந்தப் பதிலும் சொல்வதாக இல்லை. சுதேசிக்கு ஒன்றும் புரிந்தபாடில்லை. உள்ளுக்குள் நமநமத்தது. உடம்பெல்லாம் அரிப்பெடுப்பது போல் இருந்தது. போர்வையின் உள்ளுக்குள் சொறிந்து கொண்டான். இதற்குள் நாயகர் பூனையின் ஆய் போகும் வைபவத்தை முடித்து வெற்றிகரமாகத் திரும்பியிருந்தார். இறக்கி விடப்பட்ட பூனை மகிழ்ச்சியாக கடை முழுவதும் சுற்றிச் சுற்றி வந்தது. நாயகர் என்னுடைய முகத்தைப் பார்த்தபடி தன்னுடைய வேலையைத் தொடங்கினார். கட்டித் தொங்கவிடப்பட்டிருந்த பாரம்பரியமிக்க தோல் பட்டையில் மழிப்பதற்கான நவீன கத்தியை ‘சர் சர்’ என தீட்டத் தொடங்கினார். சுதேசிக்குத் தெரிந்து பிளேடு மாட்டும் ஹோல்டரை தீட்டுற முதல் ஆள் இவராத்தான் இருப்பார். ஒன்றும் சொல்லும்படியாக இல்லை. நடப்பது நடக்கட்டும் என அமைதியாக இருந்தான். கைகள் கத்தியைத் தீட்டிக் கொண்டிருந்தாலும் நாயகரின் கண்கள் என்னவோ சுதேசியின் முகத்திலேயே நிலை குத்தி நின்றன. தீட்டல் முடிந்த ஹோல்டரை அருகில் இருந்தவரிடம் கொடுத்ததும் அவர் அதை எச்சில் துப்பிப் பதமாக்கி அதில் வெளிநாட்டு பிளேடு ஒன்றை மாட்டி வேலைக்கு ஆயத்தமாக்கினார்.

சுதேசியின் முகத்தில் சோப்பு நுரை தடவப்பட்டது. ஏற்கனவே கீறல் விழுந்த கன்னத்தில் சோப்பு நுரை பட்டதும் எரிச்சல் தாங்கமுடியாததானது. சுதேசி மீண்டும் கத்தத் தொடங்கினான். இவனுடைய கத்தல் சத்தம் கேட்டதும், இலகுவான தள்ளுகதவைத் தள்ளிக் கொண்டு வெளியில் இருந்து சில நாய்கள் ஓடி வந்து சுழல் நாற்காலியைச் சுற்று நின்று கொண்டன. வந்த நாய்கள் நாயகரையும் உடனிருப்பவர்களையும் நன்றியுடன் பார்த்து மகிழ்ச்சியாக வாலாட்டிக் கொண்டிருந்தன. அனைத்தும் வெளிநாட்டு நாய்கள். முதலில் தான் கத்திய போது பூனைக்கு ஆயி வந்தது. இப்ப வெளிநாட்டு நாய்கள் வந்திருக்கு, என்ன நடக்கப்போகுதோ என்ற பதட்டத்தால் ஏற்பட்ட நடுக்கத்துடன் சுதேசி “என்ன இது?” என்றான். நாயகரின் வழக்கமான புன்னகைக்கிடையே இந்தக் கேள்விக்குப் பதில் சொல்வதற்கென்ற நியமிக்கப்பட்ட உடனிருப்பவர்களில் ஒருவர் “இதெல்லாம் இங்கதான் திரியுது. நீங்க ஒன்னும் கவலைப்படாதீங்க. ஆட்களை அனாவசியமாக் கடிக்காது. இடத்தைச் சுத்தமா வைச்சுக்கிற்றதுக்கு ரொம்ப பயன்படும். நம்ம கடையில சவரம் பண்ணும்போது ஒன்னு ரெண்டு கறித்துண்டு கீழ விழுமுல்ல. அதத் தூக்கிக்கிட்டு அதுகபாட்டுக்கப் போயிரும்.” என்று நிதானமாகச் சொல்லிக் கொண்டிருக்கும்போது, பின்புறமிருந்த நாயகர் கத்தியுடன் சுதேசியை நெருங்கிக் கொண்டிருப்பது கண்ணாடியில் தெளிவாகத் தெரிந்தது. ஒற்றை நிறத் துணியால் நாற்காலியில் கட்டப்பட்டிருந்த ‘சுதேசி’ திமிறலுடன் கத்தத் தொடங்கியிருந்தான். நாற்காலி இவனது திமிறலில் சுழலத் தொடங்கியது. நாற்காலியைச் சுழலவிடாமல் சுற்றியிருப்பவர்கள் பிடித்துக் கொள்ள நாயகர் தன்னுடைய வேலையைத் தொடங்க ஆயத்தமானார். நாய்கள் ஆர்வமாகக் காத்திருக்கின்றன. இத்தனையும் தனக்கு நடக்கும் இந்தச் சூழலில்தான் சுதேசியின் காதுகளில் அடைக்கப்பட்ட கதவுகளையும் சாலைப் பேரிரைச்சலையும் மீறி எதிர்சாரியில் செங்கலில் இடக்கால் பதித்து முண்டுக்கல்லில் நின்று முழக்கமிட்டவர்களின் வார்த்தைகள் தெளிவாகக் கேட்டன. அவர்களின் முழக்கங்கள் அவனுடைய கன்னக் கதுப்பையும் பாதுகாப்பதற்காகத்தான் என்பதை இப்போதுதான் சுதேசிக்குப் புரிந்தது. சகாக்களின் துணையுடன் நாயகர் தன்னுடைய வேலையைத் தொடங்கியிருந்தார். எதிர்சாரி முழக்கங்களால் உத்வேகம் பெற்ற சுதேசியும், இவர்களின் அடக்கு முறைக்கு எதிரான ‘எதிர்சாரி முழக்கங்கள்’ இந்த நாய்களிடமிருந்து தன்னைக் காக்கும் என்ற நம்பிக்கையுடன்’ தானும் வீறலுடன் திமிறிக் கொண்டிருக்கின்றார்.
(நன்றி : உயிர் எழுத்து - ஆகஸ்ட் 2015)

No comments:

Post a Comment