தமிழகத்தின் ஒரு கடற்கரையோர கிராமத்தில், தந்தையை கடலுக்குப் பறிகொடுத்துவிட்டு, தாய் சீலியின் ஆப்பக்கடை வருமானத்தில் வளர்ந்து, கடலின் அடியாழத்திற்குச் சென்று மூச்சடக்கிக் காத்திருந்து, வேல்க்கம்பால் குத்தி பெருமீனை வேட்டையாடும் ‘கடல்ராஜா’ என தன்னைத்தானே வரித்துக்கொண்ட கதாநாயக இளைஞன் மரியான். தமிழ்த் திரையுலக வரலாற்றின் அதிகபட்சங்களால் தீர்மானிக்கப்பட்ட வரையறையினை மாற்றாமல் மரியானுக்கு விரட்டி விரட்டி காதல் வலை விரிக்கும் கதாநாயகி பனிமலர். வேண்டா வெறுப்பாய் இருக்கும் மரியானுக்கு ’சாதிக்கணும்னு நெனைக்கிற அத்தனை பேருக்கும் பொம்பள வாட பட்டுக்கிட்டே இருக்கணும்லே’ன்னு போதிக்கிற மனைவியைப் பறிகொடுத்த பனிமலரின் அப்பாவின் ஒற்றை வாக்கியத்தால் மனம்மாறி பனிமலரைக் காதலிக்கத் தொடங்குகிறான். கழட்டிப் போட்ட பெண்ணின் செருப்பைப் பாதத்தால் தடவியே சுகம் காணும் வட்டிக்காரன் பனிமலரைப் பெண்கேட்க, அவனை அடித்துப் போட்டுவிட்டு ‘கடல்ல பொறந்து, கடல்ல வளர்ந்து, கடல்லையே சாக’ நெனச்ச மரியான் ஆப்பிரிக்காவில் கட்டிட சித்தாள் வேலைக்கு முன் பணம் வாங்கி பனிமலரின் கடனை அடைத்துவிட்டு, இரண்டு வருட ஒப்பந்தத்தில் குடிபெயர்கிறான்.
இரண்டு
வருட ஒப்பந்தம் முடிந்து திரும்ப இருக்கும்போது ஆப்பிரிக்கத் தீவிரவாதிகள் கம்பெனியிடம்
பணம் பறிப்பதற்காக அந்தக் கம்பெனியில் வேலை செய்யும் மரியான், தமிழ்நாட்டு சாமி, ஒரு
ஹிந்திக்காரன் என மூன்று சித்தாள்களைக் கடத்துகிறார்கள். ஈவு இரக்கமின்றி நடந்து கொள்ளும்
தீவிரவாதிகள் கோபமாக இருக்கும்போது மரியான் பாடும் தமிழ்பாட்டுக்கு குத்தாட்டம் போடுகிறார்கள்.
ஹிந்திக்காரன் செத்த பிறகு, கம்பெனிக்காரனிடம் பணம் கேட்டு மரியானைப் பேசச் சொல்ல அவன்
ஐஎஸ்டி போட்டு பனிமலருடன் பேசுகிறான். இதைக்கூட கண்டுபிடிக்க முடியாமல் கடைசியில் ரிசீவரைப்
பிடுங்கி கண்டுபிடிக்கும் கேணைகளான தீவிரவாதிகள். “நானும் தீவிரவாதி… நானும் தீவிரவாதி…”
என வடிவேலுபாணி டயலாக் மட்டும்தான் மிச்சம். மீதியெல்லாம் சரியாக வருகிறது. (சிரிப்பு
தீவிரவாதிகள்?) ஒரு வழியாத் தப்பிச்சு இருபதுநாள் தண்ணி சாப்பாடு இல்லாத தெம்போட
300 கிலோ மீட்டர் ஓடி ஓடி கடந்து வந்தா… வர்ற வழியில பொட்டக் காட்டுல மூணு சிறுத்தைகள்…
மரியானைப் பாத்துட்டு, “ரொம்ப எலும்புந்தோலுமா இருக்காரு இந்த தென்னகத்து புரூஸ்லீ…
நமக்கு வேற பல்லு வலி” அப்புடீன்னு திரும்பிப் போயிருது.
அப்புறம்
ஒரு தீவிரவாதி இவரக் கண்டு பிடிச்சு, துப்பாக்கியக் கீழ போட்டுட்டு அடிச்சுக் கொல்ல
வந்ததும், மரியான் ஓடித் தப்பிக்கப் பார்த்தால் கடல். அப்புறம் என்ன. நம்ம ‘கடல் ராஜா’
இடுப்பளவு தண்ணியில முங்கி மூச்சுப்பிடிச்சு அந்தத் தீவிரவாதிய அடிச்சு கொண்ணு போட்டுட்டு
மயக்கமாயிர்றாரு. இரண்டு மீனவர்கள் காப்பாத்தி, ஆஸ்பத்திரியில சேத்து, இவரு முழிச்சு,
தமிழ்நாட்டுக்கு வந்து, பாறையில குந்தியிருக்குற பனிமலர எந்திரிக்கச் சொல்லி கட்டிப்
புடிச்சுக்கிறாரு. இதாங்க ‘சாவே இல்லாதவன்’ கதை. ஆனா, படம் பாத்து முடிக்கிறதுக்குள்ள
நமக்கெல்லாம் சாவு ‘மிஸ்டு காலா’ வருது. இந்தக் கதைக்கு இடையில கடல்ல சக்கரையும் பாலைவனத்துல
சாமியும் சாகுறது, ஊரு மத்தியில அடிவாங்கி அவமானப்பட்ட வட்டிக்காரர், கடன் திரும்பி
வந்த பிறகு, ஏன்னு கேட்க மரியான் ஊருல இல்லாதப்பயும் பனிமலர எந்தத் தொந்தரவும் செய்யாம
இருக்கிறது, மரியான் திரும்ப வரப்போறான்னு தெரிஞ்சதும் கத்தி முனையில பனிமலர வன்புணர்ச்சி
செய்ய முயல்றது, அந்த நேரம் பார்த்து பனிமலரோட அப்பா வந்து ஒரு பார்வ பார்த்ததும் பேசாம
திரும்பப் போயிறது. இப்படி ஏகப்பட்ட சங்கதி இருக்கு படத்துல.
சில தொலைக்காட்சிகள்ல மரியானுக்காக பொதுப்பார்வை, சிறப்புப் பார்வை, சிறப்புக் கண்ணோட்டம், படம் வர்றதுக்கு முன்னால சிறப்பு முன்னோட்டம்,
படம் வந்தபிறகு சிறப்பு பின்னோட்டம்… அய்யோ… என்னால தாங்க முடியலையே… “நானும் எவ்வளவு
நேரம்தான் வலிக்காதமாதிரி நடிக்கிறது” சின்ன வயசுல பாத்த கார்டூன் படத்துல இரண்டு பேர்
கோல்ஃப் விளையாடுவாங்க. பந்து குழிய விட்டு விலகிப் போகும்போது குழிய இழுத்துக்கிட்டு
வந்து பந்து உருள்ற வழியில வச்சு ஜெயிக்கிறதா ஒரு காட்சி வரும். அந்தப் படைப்பாற்றலை
(Creativity) ரசிக்க முடிந்தது. குழி இழுபடுவதின் அபத்தம் குழியில் பந்து விழுந்தால்தான்
வெற்றி என்ற தர்க்கத்தில் (logic) அறிவை அமைதிப்படுத்தி, அது படைப்பாற்றல் ஆகிறது.
அறிவிற்கும் தர்க்கத்திற்கும் அப்பாற்பட்டு, படைப்பாற்றல் பாட்டில் என்ன விலை? என்ற
கேள்வியோடு வழக்கமான கமர்சியல் செம்மறியா(ன்)கக்கூட இல்லாத அபத்தங்களின் (தொகுப்பாக)
குப்பையாக மரியான் குவிந்து கிடக்கிறது உருவமற்று.
விமர்சனம் நன்றாக வந்திருக்கிறது. படம் பார்க்க வேண்டும்,..
ReplyDeletethangalin unmaiyana vimarsanam sirappu... sirippu...
ReplyDeleteSankar, Chennai