டி.மண்டபம் பழங்குடிப் பெண்கள் மீது நடத்தப்பட்ட கொடூரமான வன்புணர்ச்சி சம்பவம் குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) மற்றும் அகில இந்திய முற்போக்குப் பெண்கள் கழக ஆய்வுக்குழு விழுப்புரம் மருத்துவமனையில் இருந்த பாதிக்கப்பட்ட பெண்கள், அவர்களது உறவினர்கள், மருத்துவ அதிகாரிகள், இருளர் சங்கத் தலைவர்கள், பத்திரிகையாளர்கள், வழக்கறிஞர்கள், டி.மண்டபம் கிராமமக்கள் ஆகியோரை சந்தித்தது. மேலும் பாதிக்கப்பட்டோரின் வசிப்பிடம், திருக்கோவிலூர் நீதிமன்றம் உள்ளிட்ட இடங்களுக்கும் சென்று வந்தது. மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் மாநிலச்செயலாளர் தலைமையில் சென்ற இக்குழுவில் கட்சியின் மாவட்டச் செயலாளர் வெங்கடேசன், கோ.பாலகிருஷ்ணன், அகில இந்திய முற்போக்குப் பெண்கள் கழகத்தின் தேசிய செயற்குழு உறுப்பினர் ரஞ்சனி, மாவட்டத் தலைவர் சுசிலா, பேபி, மற்றும் கட்சியின் திருக்கோவிலூர் பகுதிக்குழு உறுப்பினர்கள் சிலரும் இடம் பெற்றிருந்தனர்.
திருக்கோவிலூர் காவல்நிலையத்தில் பணி புரிந்த (சஸ்பண்ட் செய்யப்பட்டுள்ளவர்கள்) திட்டமிட்ட வகையில் பழங்குடிப் பெண்கள் நான்குபேரை கொடூரமான வகையில் வன்புணர்ச்சி செய்துள்ளனர் என்பது ஆய்வில் உறுதியாகிறது. இரவு 8மணிக்கு இரண்டு வாகனங்களில் அழைத்துச் சென்றவர்கள் அதிகாலை 1 மணிவரை மண்டபம் கிராமத்தில் பலவிதமான வன்முறை செயல்களில் ஈடுபட்டுள்ளனர். பெண்காவலர்கள் யாரையும் அழைத்துச் செல்லாமல் பெண்களை கைது செய்து வாகனங்களில் ஏற்றிச்சென்றவர்கள் 4 பெண்களை மறைவிடத்திற்கு கொண்டு சென்று வன்புணர்ச்சி செய்துள்ளனர். இரவு நேரத்தில் பெண்களை கைது செய்வது, காவல் நிலையத்தில் சட்டவிரோதமாக வைத்திருப்பது, துன்புறுத்துவது, பெண்களது கண்ணியத்தை. தன்மானத்தைக் குலைப்பது உள்ளிட்ட சட்டத்திற்குப் புறம்பான பல குற்றங்களைச் செய்துள்ளனர்.
டி.மண்டபம் பழங்குடிப் பெண்கள் மீது நடத்தப்பட்ட வன்புணர்ச்சி சம்பவத்துக்கு முதலமைச்சர் பொறுப்பேற்றிருக்க வேண்டும். வன்புணர்ச்சி செய்த காவலர்களை உடனடியாக சிறையிலடைக்க உத்தரவிட்டிருக்க வேண்டும். உயர் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். மாறாக பெண்களின் தனமானத்துக்கும் கண்ணியத்துக்கும் விலை பேசுவது போல இழப்பீடு அறிவித்துள்ளார். நீதி கேட்டால் நிதியைக் காட்டி வாயடைத்து யாரைக் காப்பாற்ற முயல்கிறார்கள். குற்றவாளிளை விரைவாக கடுமையாக தண்டிப்பதுதான் பாதிக்கப் பட்டவரகளுக்கு ஓரளவாவது ஆறுதலளிக்கும்.
சம்பவத்தில் 9 காவலர்கள் சம்பந்தப்பட்டுள்ளனர். மீதமுள்ள 4 பேர்மீதும், திருக்கோவிலூர் சரக டிஎஸ்பி மீதும் சஸ்பண்ட் மற்றும் கைது நடவடிக்கை எடுக்க வேண்டும். சஸ்பண்ட் செய்யப்பட்டுள்ள கொடூரக் குற்றம் புரிந்த குற்றவாளிகளை காப்பாற்றும் வகையில் குற்றத்தை மறைக்க மாவட்ட கண்காணிப்பாளர் தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியுள்ளார். வன்முறை சம்பவம் எதுவும் நடைபெறவில்லை என்று தவறான செய்தியளித்துள்ளார். ஊடகங்கள் செய்தியை வெளிப்படுத்தாமல் போயிருந்தால் முழுக்குற்றமும் வெளிவராமல் மறைக்கப்பட்டிருக்கும். ஊடகங்களில் செய்திகள் வந்த பிறகும் மண்டல டிஅய்ஜி எந்த நடவடிக்கையும் எடுக்காமல் குற்றவாளிகளுக்கு உதவியாக செயல்பட்டுள்ளார். சட்டப்படி கடமை செய்யத் தவறிய மாவட்ட கண்காணிப்பாளர், டிஅய்ஜி ஆகியோரை சஸ்பண்ட் செய்யவேண்டும். அவர்கள் மீது வன்கொடுமை சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யவேண்டும். மாநிலக் காவல்துறை அமைப்பு வழக்கை விசாரித்தால் நீதி கிடைக்காது என்பதால் மனித உரிமை ஆணையம், தாழ்த்தப்பட்டோர்-பழங்குடி ஆணையம் மற்றும் மகளிர் ஆணையம் போன்றவை சம்பவம் பற்றி விசாரித்து குற்றவாளிகளை தப்பிக்க விடாமல் தண்டிக்க வழி செய்ய வேண்டும். மாவட்டம் முழுவதும் இருளர் சமூகத்தினர் மீது போடப்பட்டுள்ள பொய்வழக்குகளைத் திரும்பப்பெற வேண்டும். டி.மண்டபத்தை சேர்ந்த மூவரையும் உடனடியாக சிறையிலிருந்து விடுதலை செய்யவேண்டும். இருளர் சமூகத்து மக்கள் அச்சமின்றி கவுரவத்துடன் வாழ தமிழ்நாடு அரசாங்கம் சமூகப் –பொருளாதார நல்வாழ்வு சிறப்புத் திட்டங்களை விரைந்து செயல்படுத்திட வேண்டும்.
டிசம்பர் 2ஆம் தேதி காவல்துறை தலைவர், தமிழக உள்துறைச்செயலாளர் ஆகியோரை சந்தித்து குற்றவாளிகளை கைது உடனடியாக கைது செய்ய வலியுறுத்த உள்ளோம். இருளர் சமூக பெண்கள் மீது நடத்தப்பட்ட பாலியல் வன்முறை சம்பவத்தைக் கண்டித்தும் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து சிறையிலடைக்க வேண்டுமென்பதை வலியுறுத்தியும் வரும் டிசம்பர் 5ஆம் தேதி சென்னையிலும் விழுப்புரத்திலும் முற்றுகைப் போராட்டம் நடத்த உள்ளோம்.
{01-12-2011 அன்று விழுப்புரத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) மாநிலச் செயலாளர் பாலசுந்தரம் வெளியிட்ட பத்திரிகை செய்தி. பேட்டியின் போது விழுப்புரம் மாவட்டச் செயலாளர் மா.வெங்கடேசன், திருக்கோவிலூர் பகுதிக்குழு உறுப்பினர் லோகநாதன் ஆகியோர் உடனிருந்தனர்.}
No comments:
Post a Comment