ஈன்ற அன்னை
கண்டுகொள்ளவில்லை
உன்மை… நீ
அடைந்த தொல்லை
ஒன்றா இரண்டா
எடுத்துச் சொல்ல?
எழுதினால் பக்கம் காணாது
உன்னை
அலட்சியம் செய்தோர் பலர்.
உன்னால்
பலன் பெற்றோர் பலர்.
உனக்காக துக்கத்தை – நீயே
உன்னுள் புதைத்து வைத்தாய்.
கண்ணில் வழியும் நீரையும்
நீயே துடைத்துக் கொண்டாய்.
உன்மை
எடுபிடி வேலைகள்
பார்க்க வைத்தது
எத்தனை ஆட்கள்.
எத்தனை எத்தனை நாட்கள்
அப்பப்பா…
கண்கள் மூடி
எண்ணிப் பார்த்தால்
அத்தனையும் பாயும் முட்கள்.
உன்னை
ஈன்றவளை ஈன்றவருக்கு
உன் மீது ஓர் கனிவு.
அந்தக் கனிவுதான்
சுவைமிகு உணவு தந்தது.
அந்தக் கனிவுதான் – உன்
உறக்கம் கலையும்வரை
இடம் கொடுத்தது…
துணிவையும் தந்தது…
ஒவ்வொரு அடியாய்
விழுந்து விழுந்து
எப்படி ஓர் படைக்கருவி
உருவாகிடுமோ? அப்படித்தான்
உறவுச் சமூகம் உனை வாட்டியது.
சிறந்த முறையில் பட்டை தீட்டியது.
பருவம் வந்தது.
பக்குவம் வந்தது.
உனக்கான உடையை
நீயே தேர்வு செய்தாய்.
உனக்கான உணவையும் நீயே
தேர்வு செய்தாய்…
முத்தாய்ப்பாய் – எனக்கான
துணையையும் நீயே தேர்வு செய்தாய்.
உனைக் கண்டு
நகைக்க வைத்த உறவுகளைத்
திகைக்க வைத்தாய்.
உன் துணிவு
உனக்குத் துணைசெய்தது.
எதிர்ப்போர் எவருமில்லை
எனுமளவிற்கு
உன் செயல்
அனைவரையும் பணிய வைத்தது.
விடா முயற்சிக்கு
அயரா உழைப்பிற்கு
தளரா தன்னம்பிக்கைக்கு
விடையாய் வந்தது புது வாழ்வு.
இன்பத்தின் சிகரம் – உன்
அருகே வந்தபின்
துன்பத்தின் நிழலும்
தூரம்தான் இனி…
(2020யின் முதல் ஞாயிறு ஜனவரி ஐந்தாம் நாள் மாவிபக’வின் படைப்பரங்கில்
வாசிக்கப்பெற்ற மற்றுமொரு கவிதை)
No comments:
Post a Comment