Tuesday, January 28, 2020

சராசரி தாளத்திலிருந்து கொஞ்சம் தள்ளி… – நூல் விமர்சனம் - ஏகாதசி



அதிசயங்களை சதா நிகழ்த்திவிட்டு ஆச்சரியங்களைப் படைத்துவிட்டு, என்ன செய்ய.. தேங்காய் சட்னியுடன் இட்லி தோசை மாதிரியான உணவைத் தான் உண்ணவேண்டியிருக்கிறது. 'என்னை வெட்டிக் கூறு போட்டாலும் ரெட்டை இலைக்கும் உதய சூரியனுக்கும் தவிர வேற எதுக்கும் ஓட்டுப் போட மாட்டேன்' என்கிற மரியாதைக்குரிய மகாசனங்களிடம்தான் பேசிக்கிடக்க வேண்டியிருக்கிறது. அப்படித்தான் பூவிதழ் உமேஷ் போன்ற கவிஞர்கள் இந்த சமூக புகை மூட்டத்திற்குள் மூச்சு முட்டித் திணறிக் கிடக்கிறார்கள்.
"ஒழுகும் குடம்
ஒற்றையடிப் பாதையின்மீது
உருவாக்குகிறது
மேலும் ஓர்
ஒற்றையடிப் பாதையை
யாரோ ஒருவருடைய தாகம்
அதன்வழியே வருகிறது"
இப்படி ஒரு கவிதையை எழுதியவரை மேற்படியன்றி வேறு எப்படிக் கூறுவது.
சில மாதங்களுக்கு முன் முகநூலில் இந்த " வெயில் ஒளிந்து கொள்ளும் அழகி" பெயரையும் இந்த நூலின் அட்டைபபட அழகையும் பார்த்துக் காதலுற்றேன். சில நாட்களில் என் கையில்  அந்த அழகி.
இந்த வாழ்வை எப்படி கொஞ்சம் கொஞ்சமாக தொண்டைக்குள் இறக்குவது.. மலைப்பாம்பு ஆட்டை விழுங்குவது போன்றா அல்லது மான் குளத்தில் நீரருந்துவது போன்றா. சூழலுக்கேற்ப சாமானியன். எந்தச் சூழ்நிலையிலும் கவிஞன் இரண்டாம் விதமாக வாழ்வை சுகிக்கவே விரும்புகிறான்.
"நீரின் சாயலில்
ஒரு பெண்
மணலாற்றில் நடக்கிறாள்
கூந்தலில் பெருகிய நதியில்
அவள் காலடித் தடங்கள்
மீன்களாகி நீந்துகின்றன"
இந்தக் கவிதையை எழுதியபோது உமேஷ் மணலாறாகத்தான் இருந்திருக்க முடியும்.  இனி, மீன்கள் அவள் பாதங்கள் அல்ல இந்த கவிதைதான். இது மாதிரியான கவிதைகள் அல்லது மீன்கள் இத்தொகுப்பு நிறைய நீந்தித் திரிகின்றன.
'தோழரின் பயணம்' என்கிற கவிதையில்,
"பத்து ரூபாய் பயணச்சீட்டு
சிறு குருவியாய் சட்டைப் பையில் கூடடைந்தது" எனச் சொல்லும் போதும்  'பறத்தலின் மிச்சம்' என்கிற கவிதையில், 
"பறவையின் பெயரை
மறைத்துக் கொண்ட இறகு ஒன்று
கொஞ்சம் கொஞ்சமாகப் பறந்து தீர்க்கிறது
தன் பறத்தலின் மிச்சத்தை" எனச் சொல்கிறபோதும் "எங்கே இந்த கவிதைகளுக்கெல்லாம் என் எழுத்து குறைந்தபட்ச நியாயத்தை செய்துவிட தவறிவிடுமோ என்கிற அச்சம் தொற்றிக் கொள்ளத்தான் செய்கிறது. அப்படியான கவிதைகள் தான் இத்தொகுப்பு முழுக்க அணிவகுத்திருக்கின்றன.
அடடா.. இத்தனை அழகாய் இப்பிரபஞ்சத்தின் பொருட்களை உமேஷால் பார்க்க முடிகிறதே.. அவரின் கண்கள் எனக்கேன் இல்லை என்கிற ஏக்கம் எனக்கு இல்லாமல் போனால் நான் நல்லவன் இல்லை என்றாகிவிடும்.
"நானே
எனக்குத் தம்பியாய் இருந்த நாள்களை
அப்படியே அளவெடுத்து வைத்திருக்கின்றன
என் பழைய சட்டைகள்"
-இந்தக் கவிதை தம்பி இல்லாதவர்களுக்கெல்லாம் ஒரு  தம்பியை தானம் செய்கிறது.
"கதவில் ஒட்டிய படத்திலிருந்து
சிறுவனைப் பார்த்து
குலைத்தபடியே இருந்தது நாய்
ஏன் காகிதத்தின் பின்னால்
சோற்றை வைத்தாய் என்று" - என்ன அழகு.. என்ன நுட்பம் . இந்தக் கவிதை உருவாக்கித் தந்துள்ள காட்சியை ஒரு முறையேனும் ஓட்டிப்பாருங்கள். ஒரு நாள் பசி அடங்கும்.
இப்படியாக.. இப்படியாக முற்றின்றி எழுதிச்செல்ல இத்தொகுப்பு தகுதி படைத்தது. பொதுவாக , காதலைப் பாடலாம், இயற்கையைப் பாடலாம், சமூக அவலங்களைப் பாடலாம், உமேஷும் இவையைத்தான் பாடியிருக்கிறார் ஆனால் சராசரி தாளத்திலிருந்து கொஞ்சம் தள்ளியெடுத்து மனதைப் பிசையச் செய்கிறார்.
துணிக்கடை சென்று எல்லா உடைகளையும் கலைத்துப் போட்டு 'எல்லாமே நல்லாருக்கு எதை எடுப்பதென' பெருமுழி முழிப்போமே அப்படி இருந்தது, இந்த தொகுப்பிற்குள் நான் சென்று வந்த அனுபவம். உங்களுக்காக சிலவற்றை தேர்வு செய்துவிட்டேன். இனி மற்றவற்றை என் மன அலமாரியில் நான்தான் அடுக்க வேண்டும். பேரன்பின் வாழ்த்துக்கள் பூவிதழ் உமேஷ். வேறொரு உயரம் உங்களுக்காகக் காத்திருக்கும். நன்றி!
நூலின் பெயர்:
வெயில் ஒளிந்து கொள்ளும் அழகி
நூலாசிரியர்:
பூவிதழ் உமேஷ்
விலை: 80 ரூ
படி வெளியீடு ,
கே.கே. நகர் மேற்கு ,
சென்னை - 600 078
(பாண்டிச்சேரி கெஸ்ட் ஹவுஸ் அருகில்)
தொடர்பு எண்:
87545 07070

No comments:

Post a Comment