நீலப் பெட்டியின்
விளிம்பில் முளைத்த இலைகளைக் கழித்துவிட்டு
ஒற்றை குச்சியை உடைத்து
பல் தேய்த்து துப்பிவிட்டு
கொய்யாப்பழங்களை விற்கத் தொடங்குகிறாள் ராக்காயிப்பாட்டி
பேருந்துகளின் ஜன்னல்வழி
பேரம் பேசும் தலைகளுக்கெல்லாம்
சலிக்காமல்
தன் ஒடுங்கிய கைகளில் ஐந்து பெரிய பழங்களை
அள்ளிப்பிடித்தபடி ஓடுகிறாள்
கையே வராமல் பணம் கொடுத்தாலும்
கடைசியில்
கூட ஒரு பழம் போடாமல் கொடுக்கமாட்டாள்
கரையேறிய மஞ்சள்
சாக்கை விரித்து
மண்ணெண்ணையை ரேஷனாக
ரெண்டு சொட்டு
விட்டு
முகத்துக்கு நேரே
கால்வைத்த ஷூக்களுக்கு
பாலிஷ் போடுகிறார்
கந்தசாமி தாத்தா
கருத்துச் சுருங்கி
ஒடுங்கிய கண்கள்
கூசும் என்பதால்
அவர் எவனையும்
நிமிர்ந்து பார்ப்பதேயில்லை
இப்போதும் தடித்த
ஊசியால்
தோல் வார்களைப்
பிணைத்து
தைத்துக்கொண்டிருக்கிறார்
விளம்பரத்தையும் கடைகளையும்
மீறி
ஏதேனும் ஒரு
ஜோடிக் கால்கள்
வரும் என்ற
நம்பிக்கையில்
பிய்ந்த செருப்புடன்
நொண்டியபடி
பேருந்துகளைத் தேடி
அலையும்
பள்ளிச் சிறுவர்களை
அழைத்து
செருப்பு தைத்துக்கொடுப்பார்
சிரிப்புகளை மட்டும்
பெற்றுக்கொண்டு
மணலுக்குள் புதைந்த பானைகளுடன்
நீல பெயிண்ட் அடித்த தள்ளுவண்டியில்
ஏதேதோ சாமிகளின் பெயரை
எழுத்துப்பிழையுடன் துணைக்கழைத்து
தூக்குச்சட்டியில் கொண்டுவந்த கம்மஞ்சோற்றைக்
கரைத்து அண்டாவில் ஊற்றுகிறாள் பேச்சியம்மா
பச்சை சிவப்பு மஞ்சளென நட்சத்திர அப்பளங்களும்
கொத்தவரங்கா மோர் மொளகா வத்தல்களும்
கணக்கேயில்லாமல் மாங்காய்த் துண்டங்களும்
ஒரு சொம்பு கூழுக்குத் தருவாள்
பேருந்து டயர் நிழலில் உறங்கி
ஒரு காலையும் கொஞ்சம் வாலையும் பறிகொடுத்து
இவள்வண்டி நிழலில் உறங்கப் பழகிய
பழுப்பும் வெள்ளையும் கலந்த
நாய்க்குப் பங்கிடாமல்
மதியச் சோற்றைத் தின்னதேயில்லை
மீசையைக் காட்டி
அரிவாள் செஞ்சதா
அரிவாள் காட்டி
மீசை செரைச்சதா
என்று குழப்பும்
அறிவாளில்
பச்சைக் கரும்புகளை
சுரண்டி சுரண்டி
மெசினில் திணித்து
'ஹேப்' என்ற
சத்தத்துடன்
கண்களை உருட்டியபடி
மூச்சை இழுத்து
கைப்பிடியைப் பிடித்து
சுற்றி சாறு
பிழிகிறார் பேய்க்காமய்யா
'சட்டப்'படி
அளந்து
மதியப்பசிக்கு பீடி
குடித்துக் கிடந்தாலும்
அம்மாவோடு வரும்
குழந்தைக்கு
அரைக்கிளாசு சும்மா
கொடுத்துவிட்டு
பீடிக்கரையுடன் சிரிக்கத்
தவறுவதில்லை
அஞ்சரைக்கு ஏறிய பஸ்ஸிலேயே
மடியில் போட்டு கட்ட ஆரம்பித்த மல்லியை
விடாமல் கட்டியபடி புறணி பேசுவாள் மலரக்கா
கடை தாண்டி நீட்டப்பட்ட
மரப்பலகைகளில் ஈரத்துணி முண்டில்
மல்லிச்செண்டை வைத்தபின்
வாழைநாரைக் கிழித்து
துளசியையும் ரோஜாவையும் சாமந்தியையும் கலந்து
மாலை பண்ணுவாள்
சாமிக்கென்றால் சாமிக்கு
எழவுக்கென்றால் எழவுக்கு
எல்லா மாலைகளும் விற்றுத்தீர்த்தாலும்
கடைசி பஸ்ஸைப் பிடிக்கும் முன்பு
அவசரமாய் ரெண்டு மாலைகள் பின்னி
வெளியே தொங்கவிட்டுத்தான் கடையை மூடுவாள்
சாமிக்கென்றால் சாமிக்கு
எழவுக்கென்றால் எழவுக்கு
பஸ்ஸ்டாண்ட் வாசலில்
சிவப்பும் நீலமும்
மஞ்சளும் பச்சையுமான
குடை விரித்து
மடக்கு சேரையும்
டீபாயையும் விரித்து
வரிசையாக பேனாக்கள்
சொருகி வைத்த
பெட்டிகளை அடுக்குவார்
காதரண்ணன்
அக்குளிலிருந்து அரையடி
மட்டுமே நீண்ட
மூளியான வலக்கையை
மீன் துடுப்பாக
ஆட்டி ஆட்டிப்
பேசும்போது இல்லாத
அவரது கை
மெய் நிகர்
கையாகி காற்றில்
ஆடும்
பேனாக்களை அக்குளில்
சொருகி
மூடியைத் திருகிக்
கழற்றி
பேனாவின் பின்னால்
சொருகி
வெள்ளைத்தாளில் கிறுக்கிக்
காட்டுவார்
அதுபோக சிவப்பும்
நீலமும் பச்சையும்
வெள்ளையும்
கோடாக நீண்ட
ஓரடி மைபேனாவும்
மரத்தாலான வேலைப்பாடுகளுடைய
பேனாக்களும்
அவரிடம் உண்டு
சரசரவென்று ஓடிவந்து
பையைக் கழற்றி
ஜாமெட்ரி பாக்ஸை
கடித்துத்திறந்து
பேனாவைக் கழற்றி
உரிமையாய் இங்க்
ஊற்றிப்போகும் குழந்தைகளுக்காகவே
தினமும் ஒரு
பிளாஸ்டிக் பாட்டிலை மையால் நிரப்பி வருவார்
எல்லாவற்றிலும்
குழிதோண்டி
மண்ணள்ளிப்போட்டு
இடித்துத்தள்ளிவிட்டு
தயாராகிறது
ஸ்மார்ட் சிட்டியின்
எல்லாவற்றிலும் அழகான பேருந்து நிலையம்
No comments:
Post a Comment