கலகலப்பாய்
இயங்கும் வாழ்க்கை
கலையிழந்தது.
கைகலப்பில் முடியும்
மதுவின் கதகதப்பில்
பொழுதும் நகர்ந்தது.
விடியலும் இரவும்
விரக்தியாய் கடந்தது.
உழைக்கும் உடல்
நடுக்கம் கொண்டது.
அன்புக்கு ஏங்கிய உள்ளம்
அருகில் வரத் தயங்கி நின்றது.
உழைப்பை மறந்து
உறவை இழந்து
உலசம் முதுவென
இயங்கிக் கிடந்தாய்.
ஊரார் பழிக்க
கிறங்கி நடந்தாய்.
மதுவே உறவானது.
மயக்கம் துணையானது.
உன் நிலைகண்டு
மண வாழ்வு கசந்தது…
அழுதழுது
வற்றிப்போன – என்
கண்களைப் பார்.
துடித்துத் துடித்து
துவண்டுபோன – என்
உடலைப்பார்.
புலம்பிப் புலம்பி
விடையறியாது
வாயடைத்துப்போன
என் நிலையைப்பார்.
உன்னோடு
பணிந்து கிடந்தது
பலகீனமானது.
அடங்கிக் கிடந்தது
அடிமையாக்கியது.
புறக்கணிப்பைத்
தாங்கிக் கிடந்தது
பெருந் தலைகுணிவைத் தந்தது…
இனங்கிக் கிடந்தது
இழிவைத் தந்தது.
இனியும் கலங்குவதில்லை
பொறுத்தது போதும்
துணிந்துவிட்டேன்
கண்ணீரைத் துடைத்து
எறிந்துவிட்டேன்.
வள்ளுவர் குறள் படித்து
வாழ்வு நெறி அமைத்து
தெள்ளுத் தமிழ் நாட்டினிலே
தலை நிமிர்ந்து நடப்பேன்.
தந்தை பெரியார்
காண விரும்பிய
புரட்சிப் பெண்ணாய்…
(2020யின் முதல் ஞாயிறு ஜனவரி ஐந்தாம் நாள் மாவிபக’வின் படைப்பரங்கில்
வாசிக்கப்பெற்றது)
No comments:
Post a Comment