Saturday, August 18, 2018

வெறும் சோற்றுக்கா வந்ததிந்தப் பஞ்சம் - காயத்ரி

   
       இன்று பெண்கள் பல துறைகளில் அவர்களுக்கான அங்கீகாரங்களை பெற்றுவிட்டார்கள். அவை அவ்வளவு எளிதில் நமக்கு வாய்த்தவை இல்லை. போராட்டங்களாலும், சட்டங்களாலும் நாம் இன்று இந்நிலையை எட்டியுள்ளோம். ஆனால் இந்த இட ஒதுக்கீடும், சட்டங்களும் பெண்களுக்கு முழு சுதந்திரத்தை கொடுத்து விடுகிறதா என்னும் கேள்விக்கு நம்மால் நிச்சயமாக ஆம் என பதில் சொல்லமுடியாது. எப்படி தலித்துகளின் நிலை கொஞ்சமேனும் இன்றிருக்கும் சட்டங்களால் உயர்ந்திருந்தாலும் மனதளவில் நமக்கு அவர்கள் அடிமை என்னும் வன்மத்தை வைத்திருக்கிறோமோ அதேபோல் பெண்களையும் நேரம் பார்த்து வஞ்சம் தீர்க்கவே இந்த சமூகம் எப்போதும் துடித்துக்கொண்டிருக்கிறது.
உழைப்பு சுரண்டல், பாலியல் சுரண்டல் என பெண்ணுக்கு நடக்கும் அநியாயங்கள் உலகறிந்தவையே. இங்கு நான் மிக அடிப்படையான ஒரு விசயத்தைப் பற்றி பேச நினைக்கிறேன். கேட்க அது மிகவும் சாதாரண விஷயம் போல தோன்றினாலும் ஏனோ என்னால் அதனை இலகுவாக கடக்கவே முடியவில்லை. பொது வெளியில், கடைகளில் பெண்கள் தனியாக சாப்பிடும் போது எதிர்கொள்ளும் பிரச்சனைகள்.
ஒரு ஆண் நாள் முழுக்க உழைத்துவிட்டு மாலை நேரத்தில் வீடு வரும்போது பசியின் காரணமாக காபி டீயோ, வடை பஜ்ஜியோ சாப்பிட வேண்டுமென்று நினைத்தால் அவன் எந்தத் தடையுமின்றி ஒரு டீக்கடையில் நின்று சாப்பிடலாம். அதையும் மீறி அவன் டாஸ்மார்க்கிற்கு சென்று மது அருந்தாலாம். அவனுக்கு எந்தத் தடையும் இருப்பதில்லை. அதே போல ஒரு வேலைக்குச் செல்லும் பெண் அலுவல் முடிந்து வரும்போது பசியினாலோ, தேநீர் அருந்த வேண்டும் என்னும் ஆசையினாலோ ஒரு டீக்கடையில் நின்று அவ்வளவு எளிதாக டீ குடிக்க முடியுமா? ஒரு வடையோ பஜ்ஜியோ எவருடைய வித்தயாசமான பார்வையும் இல்லாமல் சாப்பிட முடியுமா? எந்தத் தயக்கமும் இல்லாமல் அவள் சாபிட்டாலும் அவளைக் கடக்கும் கண்கள் பொருட்காட்சியைப்பார்ப்பதைப் போல பார்ப்பது ஏன்?
சரி, டீக்கடைகளில் பெண்கள் நிற்பது என்றைக்குமே வழக்கமாக இருந்ததில்லை என வைத்துக்கொள்வோம். இப்போது புதிதாக வந்திருக்கும் பாஸ்ட் புட் கடைகளை பார்த்திருப்பீர்கள். அங்கு ஒரு பெண் அவள் தோழிகளோடு சென்றால் அங்கிருக்கும் ஆண்களின் பார்வை ஒருவாறாக இருக்கும். நானும் என் தோழியும் பணி முடித்து திரும்பும் போது வழக்கமாக ஒரு பாஸ்ட் புட் கடைக்குச் செல்வோம். நாங்கள் சாப்பிட்டு முடித்து வெளியில் போகும் வரை நாங்கள் எப்படி பேசுகிறோம், சாப்பிடுகிறோம் என்று அங்கு வேலை பார்க்கும் ஆண்கள் கவனித்துக்கொண்டே இருப்பார்கள். ஆனால் இப்போதிருக்கும் பெண் பிள்ளைகள் இவை எதையுமே கண்டு கொள்வதில்லை என்பது இன்று நிகழ்ந்திருக்கும் மகிழ்ச்சிக்குரிய மாற்றம். அவர்களின் உரத்த பேச்சும், சிரிப்பும் ஆண்களையும், ஆணாதிக்கம் மிகுந்திருக்கும் பெண்களையும் எரிச்சல்படுத்துவதை ரசித்துக்கொண்டே இருக்கிறேன். இதுவே தனியாக போய் சாப்பிட்டால் வேறு மாதிரியாகப் பார்ப்பார்கள். அங்கு நின்று சாப்பிடும் ஆணில் இருந்து அந்தக் கடையில் வேலை பார்க்கும் ஆண் வரை நாம் ஏதோ விபச்சாரம் செய்ய துணிந்ததைப் போல வித்யாசமாக பார்பார்கள். எத்தனையோ முறை இது போன்ற பாஸ்ட் புட் கடைகளுக்கு தனியாக சென்று ஆர்டர் செய்தால் “பார்சலா மேடம்?” என்னும் கேள்வியை கேட்டிருக்கிறார்கள். பசிக்கும் போதோ, சாப்பிட தோன்றும் போதோ ஒரு பெண் தனியாக இது போன்ற கடைகளுக்கு சென்று சாப்பிடக் கூடாதா?
                ஹோட்டல்களிலாவது தனியாக சாப்பிட வரும் பெண்ணை சகஜமாக பார்க்கிறார்களா என்றால் அதுவும் இல்லை. “இவள் ஏன் தனியாக வந்து சாப்பிடுகிறாள்? வீட்டில் எதோ பிரச்சனைப் போலும்” என்று ஹோட்டலில் தண்ணீர் ஊற்றும் இரண்டு பெண்கள் பேசிக்கொள்வதை காது படவே கேட்டிருக்கிறேன்.
            கணவரோடு ஹோட்டலுக்கு சென்ற என் அனுபவத்தை இங்கு பகிர்கிறேன். அவருக்கு எல்லா சனி ஞாயிறுகளும் விடுமுறை. எனக்கு எல்லா சனிக்கிழமைகளும் அலுவலகம் உண்டு. ஒரு சனிக்கிழமையின் மாலையில் இருவரும் கடைகளுக்கு செல்லும் வேலை இருந்தது. அவர் வீட்டில் நான்கு மணிக்கு மதிய சாப்பாடு சாப்பிட்டு வெளியில் வந்தார். நான் அலுவலகத்தில் ஒரு மணிக்கு சாப்பிட்டுவிட்டு நேரே வந்திருந்தேன். எனக்கு சரியான பசி. இருவரும் ஒரு ஹோட்டலுக்கு சென்றோம். உள்ளே நுழைந்ததும் அவர் ரெஸ்ட் ரூம் சென்றுவிட்டார். எனக்கு காளான் பிரியாணி வேண்டும். அவர் எப்படியும் லைட்டாக தோசைதான் சாப்பிடுவார் என எனக்குத் தெரியும். தோசை ஆர்டர் செய்ததும் வந்துவிடும். காளான் பிரியாணி வர குறைந்தது பத்து நிமிடம் ஆகும். இந்த பிரியாணியை ஆர்டர் செய்யலாம் என நினைத்திருந்தேன். நானும் என் கணவர் வரும்வரை பார்த்துக்கொண்டே இருக்கிறேன், அந்த சர்வர் என் அருகில்தான் நின்றிருந்தார். ஆனால் என்னிடம் வந்து என்ன வேண்டும் என்று கேட்கவே இல்லை. எனக்கு இங்கு என்ன சந்தேகம் என்றால் இதே போல நான் ரெஸ்ட் ரூம் சென்றிருந்தால் என் கணவரிடம் இதே போல எதுவுமே கேட்காமல் இருந்திருப்பாரா என்பது தான். குறைந்தது “அவங்க வரட்டுமா?” என்றாவது கேட்டிருப்பார் அல்லவா?.
            இவை எல்லாம் சாதாரண விஷயங்கள்தான் எனினும் ஆணைப் போலவே பெண்ணுக்கு நினைக்கும் நேரத்தில் நினைத்ததை சாப்பிடுவதற்கு உரிமை இருக்கிறதா? பெண்களின் கல்வியும் வேலைவாய்ப்பும் முக்கியம் என்று சட்டங்களால் உரிமைகளை சிறிதே பெற்றிருக்கிறோம். ஆனால் சாப்பாடு என்பது மிக மிக அடிப்படையான விஷயம். இங்கு யாரும் பெண்களை தடுப்பதில்லை எனினும் தனியாக சாப்பிட வரும் பெண்களை பார்வைகளாலேயே அவள் சாப்பிட நினைத்ததே தவறென்று அவளையே ஒரு குற்றவுணர்ச்சிக்கு ஆளாக்கும் சமூகம் இது.
            பெண்கள் சிரிக்கக்கூடாது, நினைத்த ஆடையை உடுத்தக்கூடாது, காமம் போன்ற உணர்வுகளைக் வெளிக்காட்டக்கூடாது, இந்த வரிசையில் ஒரு கடையில் தனியாக நின்று சாப்பிடும் ஒரு பெண் ஆயிரம் தவறான பார்வைகளுக்கு ஆளாகும் கொடுமையை என்ன சொல்ல? நீங்கள் உங்கள் வழிகளில் டம்பப்பைகளுடன் இது போல் தனியாக சாப்பிடும் பெண்களைப் பார்த்தால் தயவு செய்து உணருங்கள், அது அவர்களின் சுதந்திர வெளி.
            இன்றைய பெண்கள் எத்தனையோ தடைகளைத் தாண்டி சாதனை படைக்கிறார்கள். அவர்களுக்கு இது போன்ற பார்வைகள் மயிருக்குச் சமானம். ஆனால் இந்தச் சிறு விசயத்தில் ஆணைப் போலவேதான் பெண்ணும் என்று இந்த சமூகம் இயல்பாக நடந்துகொள்ளப் போவது எக்காலம்?

No comments:

Post a Comment