(எழுதி சுத்தமா 8 ஆண்டுகள் ஆனபிறகும் காலப் பொருத்தமிக்க சிறுகதை - 2010 மார்ச் கதவு இதழில் வெளியானது... மீண்டும் இப்போது... சங்கிகளின் ராஜ்ஜியத்தில் பகிர்ந்து கொள்ளத் தோன்றியதால்...)
அவனுக்கு இவனை நினைக்கும் பொழுதெல்லாம் ஒரு இனந்தெரியாத பதட்டம் உள்ளுக்குள் வந்து உட்கார்ந்து கொள்கிறது. அது ஏனென்ற முதல் யோசிப்பில் நிறையக் காரணங்கள் ‘நான், நீ’ என்று அணி வகுத்தாலும், மீண்டும் யோசிக்கையில் ‘நானெல்லாம் ஒரு பொருட்டா?’ என ஒவ்வொரு காரணமும் தன்னைத்தானே ‘ஒப்புக்குச் சப்பாணி’ என அறிவித்துக் கொள்கின்றன. அவனுக்கு இதுவும் பிரச்சினையாகிப் போகிறது. விளையாட்டில் விளையாடுகிறவர்களுடன் விளையாடலாம். ஆனால், இந்த ‘ஒப்புக்குச் சப்பாணி’களுடன் விளையாடுவது மிகவும் சிரமம். அவர்களை வெற்றி கொள்ள முடியாது. முடியாது என்பதை விட… கூடாது. ஆனால் அவர்கள் விளையாட்டில் இருப்பார்கள். இந்த சிறுபிள்ளைத்தனமான ஆட்டம்தான் அவனைப் பதட்டப்பட வைக்கிறது. இங்கே, ‘ஒப்புக்குச் சப்பாணி’களும் விளையாட்டும் புலனுக்கு உட்பட்டாலும் பரவாயில்லை. அரூபமானவை. கட்புலனாகா விளையாட்டும், அதனூடே திரியும் ‘ஒப்புக்குச் சப்பாணி’க் காரணங்களும் அவனுக்குச் “ச்சீ...” என்றிருக்கிறது. பல நேரங்களில் தன் வெற்றியை அறிவிக்கிறபொழுது பரிதாபமான மற்றவர்களின் பார்வைகளில் அவன் கூனிப்போகிறான். அதனால் அவன் வென்றாலுங்கூட அது வெற்றியா? தோல்வியா? என அவனால் தீர்மானிக்க முடியாமல் போய்விடுகிறது. ‘ஒப்புக்குச் சப்பாணி’ காரணங்களை விளையாட்டில் சேர்த்து விட்டதால் இவன்மேல் அவனுக்கு கோபம் கோபமாகத்தான் வருகிறது. அந்தக் கோபத்தை மறைக்க நினைத்தால் பதட்டம், மன அழுத்தம் எல்லாம் அவனை ஆட்கொண்டு விடுகின்றன.
ஒவ்வொரு முறையும் பதட்டம் தனிக்க வேறுவழியின்றி இவன் வந்தடையும் முடிவு “இவனே நான் விளையாட விட்ட ஒரு ஒப்புக்குச் சப்பாணிதானே!”. அவன் அடிக்கடி தோற்றுக் கொண்டிருக்கும் அகவிளையாட்டின் தோற்றுவாயான புற எதார்த்தங்களை யோசித்துப் பார்க்கிறான்.
சில ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த ஒரு உடைமாற்றல் நிகழ்வில் தொடங்குகிறது. நீட்டலின் பிறப்பு நாளில் மழித்தலாற்றங்கரையில் கூட்டாகப் புத்தாடை அணியும் வைபவம் நடைபெறுகின்றது. பெரிய காலர் வைத்த மேலங்கிக்காரரும், காலரில்லா மேலங்கிக்காரர்களும், சில சிற்றங்கிக்காரர்களும், சமீபத்திய குடும்ப வைபவத்தில் காலர் கிழிக்கப்பட்ட காலரற்ற சட்டை போட்டவரும், ப்ளைன் சட்டை போட்டவர்களும், வெயிலில் திரிந்ததாலோ பூட்டியே வைத்ததாலோ வெளுத்துப் போன சட்டை போட்டவர்களும், சமீபத்தில் நல்ல திக்காக நிறமேற்றப்பட்ட சட்டை போட்டவர்களும், சட்டையைக் கழற்றிக் கக்கத்தில் வைத்திருப்பவர்களும் எனச் சிலர் கூடியிருக்கின்றனர். புத்தாடை அணிய ஏதுவாக போட்டிருந்த சட்டையின் பொத்தான்கள் கழற்றி ஆயத்தமாகி ஆறுபேர் காத்திருக்கின்றார்கள். அணிய ஆயத்தமாய் அதிக சட்டைகள் இருந்தாலும் அணிய அணியமானவர்களும், அணிய அனுமதி பெற்றவர்களுமாய் ஆறுபேர் மட்டுமே இருக்கின்றார்கள். அந்த ஆறுபேரில் அவனுமிருக்கிறான். இவனுமிருக்கிறான். தான் தவிர்த்த மீதி ஐந்து பேரையும் தேர்ந்தெடுத்தது தான்தான் என்பதில் அவனுக்கு இன்றுவரை ஒரு கர்வம் உண்டு. சட்டை அணிய வேண்டியவர்களின் பெயரை அவன் அறிவிக்கிறான். சட்டைகளில் கொஞ்சம் பெரிய காலர் இருக்கும் சட்டயை அணிய இவன் பெயரை முன்மொழிகிறான். இவனைத் தேர்ந்தெடுக்க அவனிடம் சில காரணங்கள் இருக்கின்றன. அவன் அணிந்திருக்கும் காலருடன் கூடிய மேலங்கியின் மேல் இந்தச் சட்டையை அணிய முடியாது. விரும்பினாலும் அணியமுடியாதபடி இன்னொருவர் சிற்றங்கிக்காரராக இருக்கிறார். தொழிலாளி சீருடையில் இருப்பவருக்கு இந்தச் சட்டையை அணிவதில் சில சிரமங்கள். தொழில் முனைபவருக்கும் இதே போன்றதொரு தடை. மற்றொருவர் இதனை உள்ளாடையாக மட்டுமே பயன்படுத்தும் படியான பணியில். உள்ளாடையென்றாலும் பணியிடத்தில் வெளியில் தெரிந்துவிடக் கூடாது. விடுபடுபவன் இவன். நிராகரிப்பின் அரசியல்தான் பலரையும் ‘நிறுத்தி’ வைக்கிறது. இவனைத் தேர்ந்தெடுக்க அவனுக்கு வேறுசில தனிப்பட்ட காரணங்களும் இருக்கின்றன. இவன் ஏற்கனவே போட்டிருக்கும் சட்டையில் இருந்து இது நிறத்தால் பெரிய வேறுபாடற்றது. அதனால் பார்ப்பவர் கண்களுக்கு உறுத்தாது. இவனுக்கு பல்வேறு வடிவங்களில் காலர் வைத்த சட்டை, ப்ளைன் சட்டை, பூப்போட்ட சட்டை, கோடு போட்ட சட்டை, கட்டம் போட்ட சட்டை, இளநிற, தளிர்நிற, உலர்நிற, அடர்நிற, நிறமற்றநிற சட்டை அணிந்த நிறையப் பேரைத் தெரியும். சட்டை அணிய வேண்டியிருந்தும் அதைச் சட்டை செய்யாமல் சட்டையின்றித் திரிகிறவர்களையும் தெரியும். அவர்களிடமெல்லாம் இவன் அணிந்திருக்கும் புதிய சட்டை பற்றி பகிர்ந்து கொள்வதில் சட்டை பிரபலமாகும். இவையெல்லாவற்றையும் மீறி, அவனுக்கு இன்னொரு நம்பிக்கையும் இருக்கிறது. இவன் தானாகவே “நான் நான்தானுங்க. ஆனால், இந்த சட்டை அவன் தந்ததுங்க. நான் ஒரு ‘ஒப்புக்குச் சப்பாணி’ங்க” எனச் சொல்வான் என. சட்டை அணியும் வைபவ நிகழ்விலேயே கூடியயிருந்த அனைவருக்கும் அவன் “இந்தச் சட்டை மிகவும் பழையது. இதனை நான்தான் தைத்தேன். முன்னரே சிலர் இதை அணிந்திருக்கிறார்கள். அவர்களுக்கும் நான்தான் அணிவித்தேன். ... ... ...” சொல்லிக் கொண்டிருந்தான். இவனும் மற்ற நால்வரும் அதையெல்லாம் சட்டை செய்ததாகவே தெரியவில்லை. வந்திருந்த மற்றவர்களும் அப்படியே.
ஆனாலும், அவனுக்கு அது ஒரு மகிழ்ச்சிகரமான நாள். அனைவரும் அனைவரையும் நம்பிய நாள் அது. அந்த நம்பிக்கையை வெளிப்படுத்தும் விதமாக பெரிய காலர் அங்கிக்காரர் ‘நெருப்பில் குளித்த குருவிகளின் பனி நீர் விருந்து இந்நிகழ்வு’ எனப் பதிவு செய்கிறார். அவனுக்கு ஒரே பெருமையாக இருக்கிறது. அடுத்த நிகழ்வு வரை சடங்கில் தாய்மாமன் முறைபற்றி அவன் பேசிக்கொண்டிருக்கிறான்.
பிரச்சினைகள் ஏதுமற்று அமைதிப் பூங்காவாய் இருக்கிறது அவன் மனம். அவன் இவன் வழியாக சட்டையை பிரபலமாக்க சில முயற்சிகள் எடுக்கிறான். அனைத்திலும் இவன் ஒத்துழைக்கிறான். இவனாகவும் சில முயற்சிகள் எடுக்கிறான். அவன் அந்த முயற்சிகள்பற்றி ஏதும் சொல்லுவதில்லை. சட்டை அணிந்திருப்பவர்களின் எண்ணிக்கை எட்டாக உயர்கிறது. பின்னர் தற்காலிக அணிதல் உரிமையுடன் இருவர் இணைக்கப்படுகிறார்கள். இந்த நால்வரையும்கூட அவனே தேர்ந்தெடுக்கிறான். இப்படி எல்லாமே நடந்தது நல்லபடி, நடப்பது நல்லபடி, நடக்க இருப்பதும் நல்லபடி இருக்கின்றன. சிற்சில சமயங்களில் மட்டும் பிரச்சினை வருகிறது. பிரச்சினை வந்தது ஒரு பிரச்சினையே இல்லை. ஆனால், அதைப் பிரச்சினை என மற்றவர்கள் புரிந்து கொள்வதில்தான் பிரச்சினையே இருப்பதாக அவன் நினைத்தான். ஒருமுறை கவித்துவமான தன் எரிதழல் வார்த்தைகளால் அவன் ‘சிலுவை சுமக்கும் தோள்களில் அழுத்தித் தழும்பாகிப் போன சாதிச் சும்மாடு’ என கேட்போர் உணர்வுகளை எரிமலைக் குழம்பாக்கி தகிக்கத் தகிக்க கொதிப்பேற்றி இவனைச் சட்டை பற்றித் தொடரச் சொல்கிறான். அவன் பேசிக்கொண்டிருந்போது கையிலிருந்த தன் உரைக்கான குறிப்புகளின் காகிதத்தில் கவனமாகக் கப்பல் செய்து விளையாடிக் கொண்டிருந்த இவன் தொடங்குகிறான்; தன் கையிலிருந்த காகிதக் கப்பலை அனைவருக்கும் காட்டி, ‘தகிக்கும் உங்கள் மனதில் பொங்கி வழியும் எரிமலை ஊற்றின் வெள்ளப் பெருக்கினைக் கடக்க உதவும் இந்தப் படகு’ என. இப்படித் தொடங்குவது ஒரு பிரச்சினை என்பது இவனுக்குத் தெரியாது சரி. மற்றவர்களுக்கும் புரியாதபோது அவனுக்குக் கோபம் வருகிறது. இப்படியான ஏதோ ஒன்றால் கோபம் தலைக்கேறி நிற்கின்ற ஒருநாளில், எதற்கெடுத்தாலும் காலரைக் கைகாட்டும் சிற்றெறும்பு சிறுகாலன் மாட்டிக் கொள்கிறான் இவனது கோபத்திற்கு வடிகாலாய். வழக்கம்போல் சிறுகாலன் காலரைக் கைகாட்ட, அவன் இவனைக்காட்டி “காலர் என்ன பெரிய காலர் என் கக்கூஸ் தொடைக்கிற துணி. எனக்கு முதல்ல பதில் சொல்லு” என்கிற போது, அருகில் இருந்த இவன் ‘ஜீராபோலி’ தின்னும் வாயில் ஒழுகும் ஜீராவையும் மீறிச்சிரித்தபடியே ‘சொல்லு... சொல்லு... கேட்கிறான்ல...’ என்கிறபோது ‘இப்படி உதிர்த்துவிட்டுத் திரியும் இவனை...’ எனக் கோபம் கூடுகிறது. அப்புறம் ஒருநாள், அவன் சட்டைக்காரர்கள் எல்லோருடனும் கலந்துபேசி, ‘காலர்காரன்’ இவன்தான் என்பதால் பெரிய அங்கிக் காலரில் இருக்கும் தூசு தட்டச் சொல்கிறான். இவன் ஆளுடன் அங்கியை அடித்துத், துவைத்துப், பிழிந்து, காயப்போட்டு விடுகிறான். அங்கிக்காரர்களுக்கு பதில் சொல்ல வேண்டிய நிலையில் இருக்கும் அங்கிக்காரர்களில் ஒருவனான அவனுக்கு அடக்கவே முடியாமல் கோபம் கொப்பளித்து வியர்வைத் துவாரங்கள் வழியாகத் தெரித்து சுற்றி நின்ற அனைவரையும் கூட சுடுகிறது. ஆனால், இவனோ மெதுவாகத் தன் சட்டைக் காலரைத் தூக்கி விட்டுக் கொண்டு, மிகவும் அமைதியாக கழுத்தைச் சொரிந்தபடியே ‘கழுத்தெல்லாம் அரிக்குதுடா... இங்கயும் தூசு தட்டணும் போல...’ என்றதும், கொதித்து நின்ற சுற்றம் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டு திடீரென ஒரே குரலில், ‘பனிவிழும் மலர் வனம் உன்பார்வை ஒரு வரம்’ என இவனைப்பார்த்துக் கோரஸாகப் பாடியபோது அவனிடம் பொங்கிய கோபம் எழுநூறு ஸ்வரங்களில் இரவெல்லாம் அழுகையாய் ஒழுகியதை அந்த முழு நிலவு மட்டுமே அறியும்.
இப்படி எந்த உணர்வையும் வெளிக்காட்ட முடியாமல் அடையும் பதட்டம், ஒரு விதமான மன அழுத்தத்திற்கு அவனை ஆளாக்குகிறது. பார்ப்பவர்களிடம் எல்லாம் ‘பாலூட்டி வளர்த்த கிளி’ ‘வளர்த்த கிடா முட்ட வந்தா’ ‘பூ ஒன்னு வளர்த்தேன்’ என நிறை வசனக்காரர்களின் பாடல்களைப் பாடிக் காட்டி ‘பாவம்’ சரியாக இருக்கிறதா கருத்துக் கேட்டுக் கொண்டிருக்கிறான். எல்லோருமே அவனிடம் “நீங்கள் பாடுவது சரி போலமவும் இருக்கு...” என இரண்டுங்கெட்டானாகக் கருத்துச் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.
அவன் பாட்டுகளுக்கும், பாடுகளுக்கும் முடிவுகட்டுவதாக ஒரு நாள் வருகிறது. அந்தநாள் அவனுக்குத் தொடர்ந்த வறட்சியான நாட்களில் ஒரு இனிய நாள். கழுத்தில் வேர்க்கூறு என சப்பட்டையான ஒரு காரணம் காட்டி தான் போட்டிருக்கிற சட்டையின் காலரைக் கிழிக்கப் போவதாக சட்டை மடிப்பைச் சரிபார்க்கும் ஒருநாளில் இவன் கூற, சட்டைக்காரர்கள் அனைவரும் அவரவர் பிடரியில் இரண்டு கைகளையும் கோர்த்து வைத்துக் கொண்டு “முடியாது. முடியாது” என ஊளையிடுகின்றார்கள். வேர்க்கூறு இவன் கழுத்தில் இல்லை என்பது அவர்களுக்குத் தெரிகிறது. இவனும் இவன் பங்கிற்கு “முடியாது. முடியாது” என ஊளையிட்டபடியே காலரை மட்டும் கிழித்து, பிடரியில் கைவைக்காமல் இருந்த அவனை நோக்கி வீச அது அவன் போட்டிருந்த சட்டையில் அங்கியுடன் சேர்ந்து ஒட்டிக் கொள்கிறது. அவனுக்கு அப்பாடா என்றிருக்கிறது. அவன் உடனடியாக செயல்படத் தொடங்குகிறான். காலர் இடமாற்ற விஷயம் பரபரப்பாகப்பட நினைத்தாலும், பரபரப்பிற்கு எத்தனை எழுத்து எனக் கேட்கின்ற பல்வேறு அங்கிகள் வட்டாரத்திற்குள் அது நொண்டிக் கொண்டிருக்கிறது. காலர் இடமாற்றம் பயனற்றது என்பது அவனுக்கு நீண்ட நாட்களுக்குப் பின்னரே தெரிகிறது. காலரைக் கழற்றி எறிந்த இவன் கழுத்தில் பல்லி கழற்றி விட்ட வால் போல காலரொன்று முளைத்துக் கொண்டிருக்கிறது. அதேபோல் காலர் சிறிதும் பெரிதுமாக ஆங்காங்கே பலரின் கழுத்துகளிலும் முளைக்கிறது. அவற்றைப் பார்க்கக் கூடாது என அவன் கண்களை மூடிக்கொண்டாலும் அது காதுகளின் வழியாகவும், சுவாசத்தின் வழியாகவும் தெரிகிறது. அந்தக் காலர்கள் கொஞ்சம் அழுத்தமாக இருப்பதாகவும் அவனுக்குப் படுகிறது. ஓர்நாள் அவனது அங்கியும் குடும்பப் பிரச்சினைகளால் கிழித்தெடுக்கப்படுகிறது.
அங்கி கிழிக்கப்பட்ட பிறகு மிகவும் சிரமப்பட்டு காலரைத் தக்க வைக்க நினைத்து, நிறைய ‘ஒப்புக்குச் சப்பாணி’களை உருவாக்க நினைத்த அவன், தன்னைத்தானே ‘ஒப்புக்குச் சப்பாணி’ என அறிவித்துக் கொள்கிறான். இதில் அவனுக்கு ஒருவகை நிம்மதி கிடைப்பதாய் உணர்கிறான் - இனி வெற்றி பெற முடியாவிட்டாலும் தோல்வி இல்லை. விதவிதமான காலர்களை பையில் வைத்துக் கொண்டு யார் கழுத்தில் கைவைப்தென அவன் சுற்றி வருகிறான். ஜவுளிக்கடை மஞ்சள் பையில் சேகரிக்கப்பட்ட மழைநீரில் தாகம் தீர்த்துக் கொண்டு நீர்த்துப் போகாத வீரர்கள் சிலர் எப்படியும் வருவார்கள் சட்டையே இல்லாத போதும் காலர் மாட்டிக் கொள்ள என அவன் காத்துக் கொண்டிருக்கிறான்.
அவன் இப்படி முழுச்செயல்பாட்டாளனாக இருக்க காகிதக் கப்பலில் எரிமலைக் குழம்பாற்றைக் கடக்கும் இவன் என்ன ஆனான். விசாரித்தவர்களிடம் அவன் கூறுகிறான் ‘இவன்’ என்று யாரும் கிடையாது ‘அவன்’ ‘இவன்’ எல்லாம் ‘தான்தான்’என. இருந்தபோதே இவனைப் பற்றிய சிரத்தையற்ற அவனுக்கு எப்படித் தெரிந்திருக்கும் இவன் தன் காகிதங்களை வைத்துக் கொண்டு
எங்காவது, ஏதாவது செய்து கொண்டிருப்பான் என்பது?
(கதவு - மார்ச் 2010)
No comments:
Post a Comment