எனது பள்ளி நாட்களில் குடை என்பது ஒரு அந்தஸ்து. அது எல்லோருக்கும்
அமைவதில்லை. நான் படித்த ஏற்காட்டில் செப்டம்பர் முதல் டிசம்பர் வரையிலான மழைக்காலத்தில்
மழை பெய்யாத மாலைகள் இருந்ததில்லை. நான் ஏற்காட்டிலிருந்து பதினேழு கிலோமீட்டர் தொலைவிலுள்ள
கொட்டச்சேடு கிராமத்தைச் சேர்ந்தவன். கொட்டச்சேட்டு மாணவர்கள் ஐந்தாம் வகுப்பு படித்தால்
போதுமென்று அரசாங்கம் நினைத்தால் அதற்கு மேல் படிக்க அங்கே பள்ளி கட்டவில்லை. செந்திட்டு,
அரங்கம், பலாக்காடு என பல்வேறு ஊர்களுக்கு கொட்டச்சேடுதான் ஒரே பஸ் ஸ்டாப். அந்த காலத்தில்
அங்கே மற்ற ஊர்களுக்கு சாலை போடப்படவில்லை. இருபுறமும் இருந்த செடிகளை வெட்டி உருவாக்கப்பட்ட
சாலையில் சில லாரிகளும் டெம்போக்களும் போவதுண்டு. அதும் எப்போதாவதுதான். ரேஷன் கடைக்கு
மாதம் ஒருமுறை லாரி வருவதுண்டு. அதில் ஆட்கள் ஏறி அரிசி மூட்டைகளின் மீதமர்ந்து ஆத்துப்பாலத்திலிருந்து
கொம்புத்தூக்கி வரை செல்வார்கள். சட்டப்படி ரேஷன் பொருட்கள் ஏற்றி வரும் லாரிகளில்
யாரையும் ஏற்றக் கூடாது. அப்படித்தான் முதன்முறை ஏற்றாமல் போனார்கள். “பாராயா.. பரதேசிப்பய
ஏத்தாம போறான். கிரித்தரம் புடுச்சவன்..” என்றபடி கோபமாக போகும் வழியெல்லாம் ரோட்டில்
கருங்கற்களை உருட்டிவிட்டுப் போய்விட்டனர். பதினைந்து கிலோமீட்டர் தொலைவை ஐம்பதடிக்கு
ஒருமுறை நிறுத்தி கற்களைத் தூக்கிப்போட்டு ஐந்து மணி நேரமாகக் கடந்தவர்கள் அதன் பிறகு
யார் கை காட்டினாலும் ஏற்றப் பழகிவிட்டனர். சட்டமாவது மயிராவது.
பேருந்துகள் குறிப்பிட்ட நேரத்தில்தான் வரும். ஆறு மணி பஸ்,
எட்டரை பஸ், பத்துமணி பஸ், பதினோரு மணி பஸ், ரெண்டு மணி பஸ், (சாயங்காலம்) ஆறு மணி
பஸ் என்று ஏற்காடு போக ஆறு பஸ்கள்தான். புவியியல் அமைப்பு படி ஏற்காட்டின் புடனிக்குப்
பின்னால் கொட்டச்சேடு அமைந்திருந்ததால் ஏற்காட்டின் மற்ற கிராமங்களுக்கு இல்லாத பெருமை
கொட்டச்சேட்டுக்கு உண்டு. பேருந்தைப் பிடித்து ஏற்காடு டவுனைத் தொடாமலேயே சேலத்துக்குப்
போய்விட முடியும். அப்படி சேலத்துக்குப் போக ஆறு மணி பஸ், பத்துமணி பஸ், ரெண்டு மணி
பஸ், (சாயங்காலம்) ஆறுமணி பஸ். இந்த நாலு நேரங்களில் வருவது ஒரே பேருந்துதான் கொட்டச்சேட்டிலிருந்து
சேலம், ஏற்காடு அப்படியே திரும்ப கொட்டச்சேடு. இதற்கு எதிர் திசையில் கொட்டச்சேட்டிலிருந்து
ஏற்காடு, சேலம் திரும்ப கொட்டச்சேடு என்று இன்னொரு பேருந்து செயல்படும். இரண்டு பஸ்களும்
காதலர்களைப்போல சரியாக கொட்டச்சேட்டில் சந்தித்துக்கொள்ளும். சில சமயங்களில் ஏதாவது
பஸ் முந்தி வந்தாலோ அல்லது பிந்தி வந்தாலோ வழியில் நேராக வந்து முத்தமிடும் காதலர்களைப்
போல முகத்தோடும் முகம் நெருங்கி வந்து டிரைவர்களின் “பாம்.. பாம்” என்ற சங்கேத பாஷைகளால்
அர்த்தம் கொண்டு எதோ ஒன்று ரிவர்ஸ் எடுத்து கொஞ்சம் தாராளமான இடத்தில் ஒதுங்கி நின்று
இன்னொன்றுக்கு வழி விடும். ஏனென்றால் மொத்த பாதையிலேயே ஒரு பஸ்தான் போக வழி இருக்கும்.
இப்போதுகூட ஏற்காடு போகும்போது நீங்கள் கவனித்தால் தெரியும் பஸ்களுக்கு ஒரே படிகட்டுதான்
இருக்கும். நிறைய கொண்டை ஊசி வளைவுகள் இருப்பதால் இரண்டு பக்கமும் படிக்கட்டு வைத்த
பேருந்துகள் ஏற்காட்டின் பயணத்துக்கு உகந்ததல்ல. அவ்வாறு சுற்றி வரும் பேருந்துகளை,
“சுத்துவண்டி” என்று மக்கள் அன்பாக அழைப்பதுண்டு.
ஏற்காட்டிலிருந்த 62 கிராமங்களில் ஏற்காட்டைத் தவிர வேறெங்கும்
ஐந்தாம் வகுப்புவரையுள்ள ஒற்றை ஆசிரியர் பள்ளிகளையும்,நாலைந்து கிராமங்களில் இருந்த
நடுநிலைப்பள்ளிகளையும் தவிர வேறெதுவும் இல்லை என்பதாலும், ஏற்காட்டில் கூட உள்ள ஒரேயொரு
அரசு பள்ளியிலும் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருந்ததாலும் எங்களைப் போன்ற
கிராமப்புற மாணவர்களுக்கு இருந்த ஒரே வாய்ப்பு செயின்ட். ஜோசப் பள்ளிதான். மேலே சொன்ன
வண்டிகளில் காலை ஆறு மணி வண்டியில் கொட்டச்சேட்டிலிருந்து ஏற்காடு கிளம்பி பள்ளி முடித்து
திரும்ப மாலை ஆறு மணிக்கு ஏற்காட்டிலிருந்து கொட்டச்சேடு வருவதுதான் என் பள்ளி செல்லும்
வாடிக்கை. எனக்கு மட்டுமல்ல அரங்கம், செந்திட்டு, பலாத்தூர், பலாக்காடு, கொம்புத்தூக்கி,
மாரமங்கலம் வாழவந்தி, சேட்டுக்காடு, கீரைக்காடு, கே.புத்தூர், செங்காடு, தலைச்சோலை
போன்ற ஊர்களின் மாணவர்களுக்கும் இதுதான் வழி. இதில் செங்காடு, தலைச்சோலை மாணவர்கள்
மட்டும் சிலர் சைக்கிள் வைத்துக்கொண்டோ அல்லது நடந்தோ போய்விடுவார்கள். மற்றவர்களுக்கு
அந்த வசதியில்லை. தூரமும், பாதையின் மேடு பள்ளங்களும் காரணம். வெறும் பதினேழு கிலோமீட்டர்
இருக்கும் ஏற்காடு – கொட்டச்சேடு தொலைவை எந்த போக்குவரத்து நெரிசலும் இல்லாமல், போக்குவரத்து
நெரிசல் என்ன? போக்குவரத்தே இல்லாமல் ஒற்றைப் பேருந்தாய்க் கடக்க ஒரு மணி நேரம் ஆகுமென்றால்
பாதையின் போக்கை அறிந்துகொள்ளுங்கள். அதே மழைக் காலமென்றால் இந்தப் பேருந்துகள் வருவது
உறுதியில்லை. பாறை உருண்டோ, மண் சரிந்தோ ஏதேனும் இடர்பாடுகள் ஏற்படலாம். அது போன்ற
நேரங்களில் ஒரே வழி நடைதான். ஆனால் பேருந்து போகும் சாலையைத் தொடாமல், ஏற்காட்டிலிருந்து
போட்டுக்காடு, பலாத்தூர் வழியாக கொட்டச்சேடு வந்துவிடலாம்.
ஏற்கனவே சொன்னதுபோல் என் பள்ளி காலங்களில் குடை என்பது ஒரு அந்தஸ்து.
எனக்கு அது வாய்த்தது. என்னைப் போன்ற வெகுசிலருக்கே அது வாய்த்தது. மற்றபடி எல்லாரும்
மழைப்பைதான். மழைப்பை எனப்படுவது யாதெனின், பெரிய மொத்தமான பாலித்தீன் பையைக் குறிக்கும்.
கிட்டத்தட்ட ஐந்தடி உயரத்தில் இருக்கும் அது ஏற்காட்டின் அத்தியாவசியம். அங்கிருந்த
ஒரே வேலை வாய்ப்பான காபி எஸ்டேட்டுகளில் வேலை செய்பவர்கள் மறக்காமல் எடுத்துவருவது
கொடுவாளும், மழைப்பையும்தான். மழைப்பையை எட்டாக, பதினாறாக, முப்பத்திரெண்டாக மடித்து
ஒருஜான் அளவுக்கு குறுக்கி அதில் ஒரு கொடுவாளையும் வைத்து கிடைத்த சிறிய தாம்புக் கயிறால்
கட்டிக்கொண்டு வேலைக்கு வருவார்கள். எஸ்டேட்டுகளில் வேலை செய்ய கொடுவாளும் மழைக்கு
தப்ப மழைப்பையும் அவசியம். மழைக்காலங்கள் மட்டுமல்ல எந்த காலத்திலும் எந்த நொடியிலும்
மழை வரலாம் என்பதே ஏற்காட்டின் சிறப்பு. மழையைக் காரணம் காட்டி வேலையிலிருந்து ஒதுங்கி
நிற்க முடியாது. காபி எஸ்டேட்டுகளின் வேலைகளில் மிகவும் முக்கியமானவற்றில் ஒன்று, காபி
செடிகளை பதியம் அமைத்து பராமரிப்பது. நர்சரியில் ரோஜாச்செடிகளைப் பராமரிப்பது போன்ற
பணி அது. வரிசையாக சின்னச்சின்ன பாலிதீன் பைகளில் மண்ணை நிரப்பி காபிக் கொட்டைகளைப்
போட்டு அவை துளிர்க்கும் வரை பராமரிக்க வேண்டும். அதுவரை இளவெயில் வேண்டும் என்பதால்
மேலே சல்லடை போன்ற நீளமான கூரை அமைக்கப்பட்டிருக்கும். பைப் கொண்டு சீராக சாரல் போல
நீர் தெளிக்கப்படும். வரிசையாக சாரிசாரியாக காபி செடிகள் அடுக்கிவைக்கப் பட்டிருக்கும்.
என்ன ரக காபி எங்கே அடுக்கப்பட்டுள்ளது என்பதெல்லாம் அப்பாவுக்கு அத்துப்படி. பின்பு
நன்கு வளர்ந்து தயாரான செடிகளை மலையில் சென்று நடுவது. நீங்கள் பத்தாம் வகுப்பு வரை
நன்றாகப் படித்திருந்தால் உங்களுக்கு நினைவிருக்கும் காபி, டீ போன்ற பயிர்கள் மலைப்பாங்கான
பகுதிகளில்தான் வளரும் என்று. ஏனென்றால், இதுபோன்ற பயிர்கள் நெல் போல நீர் தேங்கும்
பகுதிகளில் இருந்தால் அழுகிவிடும். எனவே ஈரம் இருக்கக்கூடிய ஆனால் நீர் தேங்காத இடங்களில்,
வளர்ந்த செடிகளைக் கொண்டு சென்று நட வேண்டும். பின்பு அவற்றிற்கு எண்டாசோம் பூச்சி
மருந்து அடிக்க வேண்டும். பெரிய பேரல்களில் மொத்தமாக பூச்சி மருந்து பவுடர்கள் கொட்டப்பட்டு
நீர் கலந்து பிறகு அவை குட்டி டப்பாக்களில் அடைக்கப்படும். அந்த டப்பாக்களை பள்ளிப்பைகள்
போலவே முதுகில் போட்டுக்கொள்ள ஸ்ட்ராப்புகள் உண்டு. அவ்வாறு போட்டுகொண்டு வலது கையில்
பைப்பைப் பிடித்தபடி ஆர்மோனியப் பெட்டியை இழுத்து வாசிக்கும் லாவகத்துடன் இடது கையால்
இன்னொரு புறம் நீட்டியிருக்கும் விசையை ஆட்டினால் போதும். மழைச்சாரல் போல காபி இலைகளில்
மருந்து தெளிக்கப்படும். அப்படி தெளித்தாலும் நூறில் ஒரு செடியின் இலைகளை பூச்சி கடித்து
வைக்கும்.
வசந்த காலத்தில் வெயில் படுவதற்காக காபி செடிகளின் பக்கத்தில்
வைக்கப்பட்டுள்ள சில்வர் ஓக் என்று ஆங்கிலத்திலும் சவுக்கு மரம் என்று தமிழிலும் அன்போது
அழைக்கப்படும் மரத்தின் இலைகளை வெட்டிவிட்டு ஷாடோ கிராப்பிங் செய்யப்படுவதுண்டு. அதற்கு
மரத்தின் இரண்டு பக்கமும் கால்களை அகட்டி வைத்து சரசரவென்று ஏறி, நல்ல கிளை இருக்குமிடத்தில்
அமர்ந்துகொண்டு அதன் இலைகளை வெட்டிவிடுவார்கள். வெட்டிவிடப்பட்ட இலைகள் அப்படியே கீழே
விழுந்து காபிக்கு உரமாகும். அல்லது வழுக்கி விட்டு தலைகுப்புற விழவைக்கும். பின்பு
அறுவடை காலத்தில், இடுப்பில் பிளாஸ்டிக் பையைக் கட்டிக்கொண்டு காபிப் பழங்களைப் பறித்து
அந்தப் பைக்குள் போடவேண்டும். பை நிரம்பியதும் ஒரு பக்கமாக வைக்கப்பட்ட அவர்களுடைய
மூட்டையில் கொட்டிவிட்டு பின்பு வந்து மீண்டும் பறிக்கவேண்டும். கடைசியில் நிரம்பிய
மூட்டையை தூக்கிக்கொண்டு வந்து எடைபோடவேண்டும். எடுத்த பழங்களின் எடையைப் பொறுத்து
படிக்காசு கிடைக்கும். பின்பு பெரிய மெஷினில் போட்டு அரைக்கப்பட்டு தோல் நீக்கப்படும்.
ஒருபுறம் அரைக்கப்பட்ட கொட்டைகள் வெளிவர இன்னொரு பக்கம் அவற்றின் தோல் துப்பப்படும்.
அரைக்கப்பட்ட கொட்டைகள் காயவைக்கப்பட்டு பின்பு மூட்டைகளில் அடைத்து விற்பனைக்காக லாரிகளில்
ஏற்றிக்கொண்டு செல்லப்படும். இன்னொரு முக்கிய விளைபொருள் மிளகு. முன்னே சொன்ன சவுக்கு
மரங்களில் வெற்றிலை இலைகளைப் போலவே இலைகள் கொண்ட கொடி ஒன்று பரவிக்கிடக்கும். புதிதாக
ஏற்காட்டுக்கு வரும் எல்லோரும் அவற்றைப் பார்த்து “ஏ.. வெத்தல.. “என்று ஆச்சரியப்படுவதுண்டு.
அப்போதெல்லாம் “அது வெத்தலை இல்ல மெளகு..” என்று சொல்லி அவர்களை ஆச்சர்யத்தில் மூழ்கடிப்போம்.
அந்தக் கொடிகளில் கொத்துக் கொத்தாக ஒரு கொத்துக்கு இருபது முப்பது மிளகுக்காய்கள் என
பச்சை நிறத்தில் காய்த்துக்கிடக்கும் காய்களைப் பறிக்க பெரிய மூங்கிலை வெட்டி சாய்த்துவைத்த
ஏணியில் ஏறி பறிப்பார்கள். ஒரு பெரிய மூங்கிலை இரண்டாகப் பிளந்து அவற்றில் இயற்கையாக
கிளைத்திருக்கும் கிளைகளையே ஏணிப்படிகளாக்கிகீழும் மேலும் இறுக்கிக் கட்டப்பட்ட ஏணிகள்
அவை. அந்த மிளகினைப் பறித்துவந்து பெரிய இரும்பு டிரம்களில் தண்ணீரைக் கொட்டி அதனுடன்
மிளகைப் போட்டு கொதிக்கவைத்து, காபி காயவைக்கும் சிமெண்ட் கலத்தில் கொட்டி நன்றாக மிதித்து அவற்றின் காம்புகளும்
மிளகுக்காயின் மேல் தோலும் பிரிக்கப்படும். காட்டம் தாங்காமல் மிதிப்பவர்களின் கால்களில்
புண் வரக்கூடும் என்பதால் காலில் சாக்கைக் கட்டிக்கொண்டு மிதிப்பார்கள். பின்பு நன்கு
காயவைத்தபின் மிளகு கொஞ்சம் கொஞ்சமாக கறுத்து நாம் வீட்டில் சமைக்கும் பதத்துக்கு வந்துவிடும்.
பின்பு அவைகளும் மூட்டைகளாக எடைபோடப்பட்டு விற்பனைக்கு அனுப்பப்படும். காபிக் கொட்டையை
வாயில் போட்டு தோலைத்துப்பிவிட்டு கொட்டையை மட்டும் கொஞ்ச நேரம் சப்பினால் இனிப்புச்
சுவையாக இருக்கும். ஆனால் மிளகை வாயில் போட்டால் அவ்வளவுதான். அந்த காபி எஸ்டேட்டுகளில்
ஒன்றில் என் அப்பா அசிஸ்டென்ட் சூப்பரிண்டென்டாக வேலை செய்தார். ஆனால் அது தவறாக புரிந்துகொள்ளப்பட்டு
ரைட்டரைய்யா என்ற பெயரே அவருக்கு நிலைத்துவிட்டது.
இதை மறுபடி சொல்வதில் நீங்கள் எரிச்சலடையலாம், ஆனால் கடைசியாக
ஒருமுறை சொல்லிக்கொள்கிறேன். என் பள்ளிக்காலங்களில் குடை கொண்டு செல்லும் அதிசயமானவர்களில்
நானும் ஒருவன். செயின்ட் ஜோசப் பள்ளி கிறிஸ்தவ மிஷனரிகளால் நடத்தப்பட்ட பள்ளி. ஏற்காட்டில்
வேறு பல பள்ளிகள் இருந்தாலும் பள்ளிகள் இருந்தாலும் ஏழை மாணவர்களுக்கேற்ற வகையில் குறைந்த
கட்டணத்தில் நடத்தப்பட்ட பள்ளிகள் இரண்டு, ஆண்கள் பள்ளி செயின்ட் ஜோசப், பெண்கள் பள்ளி
நாசரேத். மற்ற பள்ளிகளிலெல்லாம் சேலம், கோயம்பத்தூர் சென்னை என பல்வேறு பகுதிகளிலிருந்து
பணக்கார மாணவர்கள் வந்து காசைக் கொட்டிப் படித்தார்கள். அவைகள் கான்வெண்ட்கள். கடைசியாக
சொன்ன இரண்டு பள்ளிகளில்தான் ஏற்காட்டின் அறுபத்திரண்டு கிராம மக்களின் குழந்தைகள்
படித்தார்கள். அவர்களைப் பொறுத்தவரை தனியார்
பள்ளியில் படிப்பதே ஆடம்பரம் என்பதால் குடை போன்ற ஆடம்பரங்கள் பெரும்பாலானோரிடம் இல்லை.
நான் முன்பே சொன்ன மழைப்பையை முப்பதிரண்டாக மடித்து சுருட்டி கட்டிக்கொண்டு வருவார்கள்.
மழை வரும்போது அதை எடுத்து போர்த்திக்கொண்டால் மழையிலிருந்து தப்பிவிடலாம். பைக்குள்
இருக்கும் புத்தகங்கள் நனையாது. ஆனால் என் போன்ற குடைவாசிக்கு அந்த வசதியெல்லாம் இல்லை.
அடிக்கும் காற்றைப் பொறுத்து எல்லா பக்கமும் வீசும் காற்றில் பட்டு தெறிக்கும் மழையிலிருந்து
பையைக் காப்பாற்ற முடியாது. அதைப்பற்றியெல்லாம் எனக்கு கவலை இல்லை. ஆனால் ரோமாபுரியில்
ரோமானியனாய் இரு என்ற மாபெரும் சிந்தனை என் உள்ளத்தில் அப்போதே உதித்ததால் நானும் எனக்கு
மழைப்பை வேண்டும் என்று அம்மாவிடத்தில் அடம் பிடிக்க எனக்கு ஒரு மழைப்பை வாங்கி வந்தார்.
அப்போதுதான் எனக்கு ஒரு மாபெரும் உண்மை தெரியவந்தது. மழைப்பை என்பது இரண்டு புறம் மட்டும்
சீல் செய்யப்பட்ட பையல்ல, அது மூன்று புறமும் சீல் செய்யப்பட்டது. புதியதாக வாங்கப்பட்ட
மழைப்பையைத் தண்ணீர் பிடிக்க உபயோகிக்கலாம் என்ற அறிய உண்மையை அன்று அறிந்துகொண்டேன்.
பின்பு அதை ஒரு பக்கம் வெட்டித்தான் உபயோகிக்கவேண்டும் என்ற கொள்கை விளக்கத்தை அம்மாவிடம்
பெற்றுக்கொண்டேன். அப்போது எனக்கு ஒரு யோசனை தோன்றியது. ஒரு பக்கம் முழுதாக கிழிக்காமல்
முகத்துக்கு மட்டும் கிழித்துத் தரச்சொன்னேன். அம்மா பாராட்டினாலும் அது வெற்றிகரமான
திட்டமாக இல்லை. இரண்டே நாளில் கீழே வெட்டாத மழைப்பையில் கால் தடுக்கி விழுந்து வைத்தேன்.
பின்பு கொஞ்ச நாளில் மழைப்பை போரடிக்க என் குடைக்கே திரும்பினேன்.
என் குடைக்கு பள்ளியில் எப்போதும் விசிறிகள் உண்டு. பைக்குள் ஒரு மூலையில் கிடக்கும்
அதை எடுத்து எதிரில் நிற்பவனிடம் “ஹான்ட்ஸப்” என்றபடி நீட்டி, பின்பு பட்டனை அமுக்கி
“ஸ்வைங்...“ என்ற சத்தத்துடன் தாக்கப்பட்டவன். “ஆ..” வென வயிற்றைப் பிடித்துக்கொண்டு
கண்கள் சொருக விழுவதுபோல் நடித்து விளையாடுவோம். அம்மாவிடமும் என் போன்ற குடைதான் ஆனால் பழையதாக இருக்கும். எப்போதும் நான் உபயோகித்து பட்டன்
போனதோ அல்லது கைப்பிடியில் கொடுக்கப்பட்ட டேக் அறுந்ததோ அம்மாவிடம் போகும். வேறு வார்த்தைகளில்
சொல்வதேன்றால் எது புதியதாய் வாங்கினாலும் அது என்னிடம் வந்து என்னிடம் இருந்த பழைய
குடை அம்மாவிடம் போகும். அப்பாவின் குடை வித்தியாசமானது. அது பட்டன் கொண்டதில்லை. நீண்ட
குடை. என் புத்தக பைக்குள் அடங்காதது. கைப்பிடி வளைந்து கைத்தடி போன்ற தோற்றம் தருவது.
சில சமயம் அப்பா அதை கைத்தடி போலவும் உபயோகிப்பதுண்டு. மாலை ஆறு மணி பஸ்ஸில் வரும்
என்னையும் அம்மாவையும் அழைத்துச் செல்ல ஒருநாளும் தவறாமல் அப்பா வந்துவிடுவார். மழை
நாட்களில் அவர் கையில் மடக்கிப் பிடித்த குடையுடன் பஸ்ஸில் இறங்கும் எங்களை எட்டிப்
பார்த்தபடி செட்டியார் கடை வாசலில் நிற்பார். மழையோ இல்லையோ அருகில் உள்ள குமார் அண்ணன்
டீக்கடையில் முறுக்கோ, மிச்சரோ இல்லை தேங்காய் பர்பியோ கிடைக்கும். எவ்வளவு வேலைகளிலும்
சிரமங்களிலும் அப்பா என்னையும் அம்மாவையும் கூப்பிட வராமல் இருந்ததில்லை. ஒருநாள் வழியில்
ஒரு மரம் சாய்ந்துவிட பேருந்துகள் எதுவும் வர வாய்ப்பில்லாமல் போனது. நாங்கள் சிறுவர்களெல்லாம்
என்ன செய்வது என்று தெரியாமல் முழித்த பிறகு வெகுநேரம் கழித்து எங்கள் ஊரைச் சேர்ந்த
சலீம் அண்ணன் போனில் பேசி ஒரு அம்பாசடர் காரில் நாங்கள் பத்துபேர் போக ஏற்பாடு செய்திருந்தார்.
நாங்கள் கொட்டச்சேடு வந்து சேர எட்டரை மணிக்குமேல் ஆகிவிட்டது. அப்போதும் தன் குடையுடன்
காத்திருந்தார் அப்பா.
அந்தக் குடையும், நிக்கரும் ஷூவும் அவரது ட்ரேட்மார்க். வீட்டில்
பார்த்த எங்களுக்கு மட்டும் தெரியும் இன்னொரு ட்ரேட் மார்க்காக அவர் ஒரு பெல்டும் வைத்திருந்தார்.
இவற்றையெல்லாம் அப்பா மாற்றியதேயில்லை. குடை பழசானாலும் அதே போன்ற இன்னொரு குடை வாங்கி
வந்துவிடுவார், பெல்டுக்கும் அதேதான். எஸ்டேட்டுகளில் வேலை செய்ய கண்டிப்பான உடை நிக்கர்.
மற்ற உடைகள் காட்டுக்குள் நடந்து செல்ல சவுகரியமாக இருக்காது என்ற காரணத்தால் அது நிலைத்துப்
போனது. அப்பா கொட்டச்சேட்டுக்குள் எங்கே போனாலும் நிக்கரோடுதான் செல்வார். மாறாக ஞாயிற்றுக்கிழமைகளில்
வேட்டி கட்டிக்கொண்டு கையில் பையோடு வந்து காய்கறிகளை வாங்கிக்கொண்டு அப்படியே செட்டியார்
கடையில் அரிசி மூட்டையில் அமர்ந்து கதை பேசிக்கொண்டு பேப்பர் படித்துவிட்டுப் போவார்.
அப்போது உடன் செல்லும் நான் மிச்சரோ முறுக்கோ இல்லை குடல் பாக்கெட்டோ வாங்கிக்கொண்டு
“அப்பா.. விளையாடிட்டு வரேன்..” என்றபடி விளையாடப்போவேன். ஏதாவது வேலையாக ஏற்காடு போகும்போதோ
இல்லை மணிரத்னம் படம் பார்க்க சேலம் வரும்போதோ அப்பா பேண்ட் அணிந்திருப்பார். அப்போதும்
அந்த குடையும் பெல்டும் மாறாது. அப்பாவுடன் படம் பார்க்கப் போனால் இன்டர்வெல்லில் ஐஸ்
கிரீம் நிச்சயம். பிறகு படம் முடிந்ததும் மதிய சாப்பாடு சாரதி ஹோட்டலில். பதினெட்டு
ரூபாய் சாப்பாடு ரெண்டு ரூபாய் தயிர் என ஆளுக்கு இருபது ரூபாய். முதலில் பருப்புபொடியும்
நெய்யும் ஊற்றிவிட்டு அடுத்து சாம்பார், பிறகு ரசம், மோர் என்று வாங்கி சாப்பிட்டுவிட்டு
தயிரை அப்படியே குடித்துவிடுவேன்.
நான் பத்தாவது முடித்து சேலத்தில் பதினொன்றாவது சேர்ந்தபின்
சேலத்தின் அனைத்து சந்துபொந்துகளும் பழகிப் போனது. வீட்டிலிருந்து சாப்பாடு எடுத்து
வராமல் கடையில் சாப்பிடுகிறேன் என்று சொல்லிக்கொண்டு ஐந்து ரூபாய்க்கு தள்ளுவண்டிக்
கடையில் தக்காளி சாதமோ லெமன் சாதமோ சாப்பிட்டுவிடுவேன். இருந்தாலும் மூட் இருந்தால்
சாரதி ஹோட்டல்தான். நான் பெரியவனாகி சேலத்துக்குப் படிக்கப்போனாலும் அதேபோல ஆறு மணிக்கு
சேலத்திலிருந்து வரும் பஸ்ஸில் வரும் என்னைப் பார்க்க கையில் குடையோடு காத்திருப்பார்
அப்பா. பின்பு நான் டிப்ளமோ படித்தபோதும் அப்பாவின் இந்தப் பழக்கம் நிற்கவில்லை. பின்பு
நான் படித்துக்கொண்டிருக்கும்போதே அப்பா ரிடையர் ஆகி வந்துவிட்டார். ரிடையர் ஆன பிறகு
அப்பா ரொம்ப நாள் உயிர் வாழவில்லை. எது அப்பாவின் உயிரை எடுத்தது? முதன்முறையாக தமிழகத்தில்
பரவிய சிக்கன்குனியாவா? அல்லது அவருக்கு இருந்த ஷுகரா? அல்லது எதோ ஒரு போலி டாக்டர்
கொடுத்த ஓவர் டோஸ் மருந்தா? இல்லை அவரது வயது முதுமையா? இல்லை ரிடையர் ஆகி வீட்டில்
அமர்ந்திருந்த அவரை நிரப்பிய வெறுமையா? என்ற கேள்விகளுக்கெல்லாம் பதிலில்லை. ஆனால்
எதையும் எதிர்பாராத எதோ ஒருநாளில் அப்பா எங்களோடு இல்லை. பின்பு இரண்டு மூன்று முறை
வீடு மாற்றும்போது அப்பாவின் குடையும் காணாமல் போனது.
பின்பு அது போன்ற குடைகள் தேவையேயில்லாமல் போனது. காலப்போக்கில்
அரையடி அளவில் மடக்கி வைத்துக்கொள்ளக்கூடிய குடைகள் வந்துவிட்டதால் அந்தக் குடையின்
நினைவே அற்றுப்போனது. அது போன்ற குடைகளை அலங்காரத்துக்குக்கூட பார்க்க முடிவதில்லை.
பின்பு ரொம்ப நாள் கழித்து என் திருமணத்தில் அந்தக் குடை கிடைத்தது. ஜானவாசத்துக்கு
குடை பிடிக்க அந்தக் குடை வாங்கியிருந்தார்கள். அப்பா அடிக்கடி சொல்வதுபோல் “குடை வடி
(கைத்தடி)” இரண்டும் கிடைத்தது. அந்தக் குடை பெறுவதற்கு ஒரு தகுதி வேண்டும் போலிருக்கிறது
என்று நினைத்துக்கொண்டேன். அப்பா குடை போலில்லாமல் இந்தக் குடையில் பட்டன் பொருத்தப்
பட்டிருந்தது என்றாலும் வடிவம் அதுபோல்தான் இருந்தது. முதலில் வேறு குடையில்லாமல் மழைக்கு
இந்தக் குடையை எடுத்துச் சென்றாலும் இப்போது மிகவும் பிடித்துப் போனது. “என்னண்ணே..
தாத்தா குடைய எடுத்துட்டு வரீங்க” என்று ஆபீசில் அடிக்கும் கிண்டல்களைத் தாண்டி அந்தக்குடை
மனதுக்கு நெருக்கமாக இருக்கிறது. அப்பாவின் கை பிடித்து நடப்பதுபோல்.
(நன்றி: தினமணிகதிர் 21/01/2018)
No comments:
Post a Comment