தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத பைஸ்மால்கசன்
மீண்டும் மறுதொடக்க (ரீஸ்டார்ட்) பட்டனை அழுத்தி தன்னுடைய கணினியை
இயக்கினான். அவனுடைய கணினியும் விபரங்கள் சொல்லி, எங்கே நுழைய எனக்கேட்டு,
இதுவரையிலான கோளாறுகள் அனைத்தையும் தற்காலிகமாகச் சரிசெய்து ‘டெஸ்க் டாப்’
நிலைக்கு வந்தது. சற்று நேரம் எதுவும் செய்யாமல் அமர்ந்து கவனித்துக் கொண்டிருந்த
பைஸ்மால்கசன் கணினியின் சுட்டி(மௌஸ்)யைத் தொட்டதும் - பெரிய சிரிப்பொலியுடன்
அந்த உருவம் திரையில் தோன்றியது. தோள்பட்டைக்கு மேலே கழுத்தில் தலை இருக்க
வேண்டிய இடத்தில் தலை இல்லாமல் இரண்டு கைகளுடன், தோள்ப்பட்டையில் வளர்ந்த சதை
காதுகளாகி வயிற்றுக்கு நேராகத் தொங்கும் தலையும் கொண்ட அந்த உருவத்தைப்
பார்த்தவுடன் பைஸ்மால்கசனுக்கு எரிச்சல்தான் வந்தது. “எந்தனை
முறைதான் இந்தத் தொந்தரவு. ‘எங்ஸ்ட்வின்’ என்ற இந்த வைரஸைச் சரி செய்ய முடியாதா?” என்ற
கேள்வியுடன் காத்திருந்தான். சிரித்து முடித்த ‘எங்ஸ்ட்வின்’ என்ற பெயர் கொண்ட
அந்த செயற்கை நுன்னறிவு (ஏ.ஐ. - ஆர்ட்டிஃபீஸியல் இண்டலிஜன்ஸ்) வைரஸ் “என்ன
ஆயத்தமாகி விட்டாயா? சரி பார்க்கலாம். இந்தக் கதை மிகவும் சின்னக் கதைதான். இந்தக்
கதையை நீ உன்னுடைய சின்ன வயதில் யாராவது சொல்லக் கேட்டிருக்கலாம். கடந்த
நூற்றாண்டின் இறுதிப் பத்தாண்டுகளில் யாரோ அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்ததாக, இந்த
நூற்றாண்டின் தொடக்கப் பத்தாண்டுகளில் இன்னொரு யாரோ ஒருவர் உனக்குச்
சொல்லியிருக்கலாம். அப்படி நீ கேட்ட கதைகளில் ஒன்றாகவும் இது இருக்கலாம். அந்தக்கதையிலிருந்து
திரிந்த வேறு ஒன்றாகவும் இருக்கலாம். இப்படி எதுவுமே இல்லாமலும் இருக்கலாம். சரி
கதைக்கு வருவோம். இந்த முறையாவது நீ வெற்றிபெற என் வாழ்த்துக்கள்” என்று
சொல்லி மறைந்ததும் கணினியின் திரை கருப்பாக மாற, திரையில் இளமஞ்சள் நிறத்தில்
எழுத்துகள் தோன்றின.
0
முன்பொரு காலத்தில் ஒரு நாட்டில் ஒரு ராஜா இருந்தார்.
இங்கு வேறு எந்த நாடும் ராஜாவும் வரப்போவதில்லை. அதனால் நாட்டின் பெயரை நாம்
‘நாடு’ என்றும், ராஜாவின் பெயரை ‘ராஜா’ என்றுமே வைத்துக் கொள்ளலாம். ராஜா பிறந்தது
முதலே எல்லோரும் அவரை ‘ராஜா’ ‘ராஜா’ என்று அழைத்ததால், அவர் தன்னைப்பற்றி மிகவும்
உயர்வாக நினைத்து, நினைத்து உயர்வு மனப்பாண்மையுடன் (சுப்பீரியாரிட்டி
காம்ப்ளக்ஸுடன்) வளர்ந்து கொண்டிருந்தார். இவர் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து
கொண்டிருக்கும்போதே அவரைச் சுற்றியிருந்த மந்திரி பிரதானிகள், மெய்க்காவலர்கள்,
தளபதிகள் போன்ற சேவகர்களில் சிலர் இவரைப்போல் அழகன், அறிஞன் உலகில் யாரும் இல்லை
என்று சொல்லிச் சொல்லியே பிழைப்பு நடத்திக் கொண்டிருந்தார்கள். இவரால் ஜெயிக்க
முடியாததை யாரும் ஜெயிக்க முடியாது. இவரால் செய்ய முடியாததை உலகத்தில் யாராலும்
செய்ய முடியாது என்றார்கள். ராஜாவுக்குத் தெரியாதது உலகத்தில் யாருக்குமே
தெரியாதது என்றெல்லாம் புகழ்ந்து பேசி அவரது உருவேற்றியிருந்தார்கள். இந்த
விஷயத்தைத் தெரிந்த மற்றவர்களில் சிலர் ராஜாவையும்சரி இந்தப் பிழைப்புவாதிகளான அல்லக்கைளையும்சரி
திருத்த முடியாது என்பதைப் புரிந்து கொண்டு அமைதியாக இருந்ததன் மூலம் தங்கள்
பதவியையும் பணியையும் தக்கவைத்துக் கொண்டிருந்தார்கள்.
எந்தவிதமான ஏற்றமும் இல்லாமல் இது இப்படியே
போய்க்கொண்டிருப்பது ராஜாவிற்கு ஒரு காலத்திற்குப் பிறகு அலுப்பாக இருந்தது. ஒரு
நாள் அல்லக்கைகளும் அமைதிகாப்பவர்களும் கூடியிருந்த அவையில் ராஜா தன்னுடைய
ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். “நீங்கள் என்னைப் புகழ்ந்து பேசுவதில் மகிழ்ச்சிதான்.
ஆனால் மற்றவர்கள் என்னைப் பாராட்டுவதைக் கேட்கவும் மக்கள் மிக விருப்பமாக இருக்கின்றார்கள்.
அதற்கு என்ன செய்யலாம்?” என்று கேட்டார்.
“பாராட்டுக் கவியரங்கம் நடத்தலாம்” என்ற
ஆலோசனையை “அது
கருப்பர்கள் செய்வது” என்றொருவர் நிராகரித்தார்.
“பிறந்த தினத்தைக் கொண்டாடலாம்” என்ற
ஆலோசனையும் “எல்லாரும்
செய்வது. வேண்டாம்” என புறந்தள்ளப்பட்டது.
“சதாபிஷேகம், சொர்னாபிஷேகம் என ஏதாவது அபிஷேகம்
நடத்தலாம்” என்ற
விருப்பம் “ராஜா என்ன
கோயில் கும்பமா? அபிஷேகம் அது இதுன்னு. அதோ அபிஷேகம் நடத்துறது நம்ம இனத்துக்குச்
சரியா வராது” என
பதினெட்டாம்படி கருப்பசாமி கருப்பசாமிக்குக் கும்பாபிஷேகத்தை முன்னின்று
நடத்தியவரால் மறுக்கப்பட்டது.
ஆலோசனை சொன்னவர்களும் மறுத்தவர்களும் தங்களுடைய
அடிமைத்தனத்தை உறுதிப்படுத்த பிரயத்தனப்பட்டுக் கொண்டிருந்தார்கள். அப்போது ஒருவர்
“ராஜாவின்
அழகைச் சிறப்பாக எடுத்துரைப்பவர்களுக்கு பரிசளிக்கலாம்” என்றார். “அழகு
என்பது ஆடை அணிகலன்களிலும் அலங்காரத்திலும்தானே இருக்கிறது” என்றார்
இன்னொருவர். இறுதியாக ராஜாவின் ஆடை அலங்காரத்துடன் ராஜாவின் இயற்கை அழகையும்
சிறப்பாக எடுத்துரைப்பவருக்குப் பரிசும் பதவியும் அளிக்கலாம். ஆடை அலங்காரத்தைப்
பாராட்டுபவர்களுக்குப் பரிசளிக்கலாம்” என்று இருமனதாக முடிவு
செய்யப்பட்டது.
‘ராஜ அலங்கார வர்ணனைப் போட்டி’ எனப் போட்டிக்குப்
பெயரிடப்பட்டது. போட்டி நாளும் அறிவிக்கப்பட்டது. ஆடை அலங்காரத்திற்கென ஒரு குழு
அமைக்கப்பட்டது. “ஆடை அலங்காரம் அனைத்தும் புதுவிதமாக இருக்க வேண்டும்” என ராஜா
தன்னுடைய ஆசையை வெளிப்படுத்தினார். குழு “அப்படியே ஆகட்டும்” என்றது.
போட்டி நாளில் காலை ராஜா நீராட்டப்பட்டார். அவர்
உடலில் இருந்து பழைய அரைஞாண் கயிறு உட்பட அனைத்தும் நீக்கப்பட்டது.
அலங்காரத்திற்காக அமைக்கப்பட்ட குழு ஆயத்தமாக இருந்தது. ராஜாவும் ஆயத்தமாக
இருந்தார்.
குழுவில் ஒருவர் மெதுவாகக் குனிந்து மிகவும் கவனமாக ராஜாவின்
இடுப்பைச் சுற்றிக் கைகளைக் கொண்டுவந்து முன்புறம் இடது இடுப்பில் புறங்கையை
மேலிருந்து கீழாக அழுத்தி இறக்கி, “ராஜாவுக்கு பட்டுப் பீதாம்பரம்…
அற்புதமாயிருக்கு” என்று கூறியபடி நிமிர்ந்து நின்று திருப்தியுடன் தலையாட்டி
ரசித்தார். குனிந்து பார்த்த ராஜா அதிர்ச்சியடைந்தார். அவருடைய இடுப்பில் எந்தப்
பீதாம்பரமும் கட்டப்படவில்லை. “பட்டுப் பீதாம்பரம் எங்கே?” என்றார்
ராஜா.
பீதாம்பரம் கட்டியதாகப் பாவனை செய்தவர் அதிர்ச்சியாக “ராஜா… உங்க கண்களுக்கு ஜொலிக்கும் இந்தப் பட்டுப்
பீதாம்பரம் தெரியவில்லையா? அலங்காரம் புதுவிதமாக இருக்க வேண்டுமென நீங்கள்
சொன்னதால், அருளேற்றி புனிதப்படுத்தப்பட்டு கொண்டுவரப்பட்டவை இந்த ஆடைகள். இவை
பத்தினிப் பெண்டிரைக் கைப்பிடித்த பதிகளின் கண்களுக்கு மட்டுமே தெரியும்… நன்றாகப்
பார்த்துச் சொல்லுங்கள்… உங்கள் கண்களுக்குத் தெரிகிறதா? இல்லையா?” என்றார்கள்.
குனிந்து பார்த்த ராஜாவின் கண்களுக்கு தெரியவேண்டியது எல்லாமே
தெரிந்தது. பட்டுப் பீதாம்பரம் ஏதும் தெரியவில்லை. ‘பத்தினிப் பெண்டிரைக்
கைப்பிடித்த பதிகளின் கண்களுக்கு மட்டுமே தெரியும் ஆடையா? ராணியை பின்னர்
விசாரித்துக் கொள்ளலாம்’ என முடிவு செய்த அறிவுக் கொழுந்தான ராஜா, “பீதாம்பரம்
தெரிகிறது. இது பட்டுதானா?” என சந்தேகம் கேட்டதுடன், இல்லாத ஆடையை இருப்பது போலவே
கைவிரல்களால் நசுக்கிப் பார்த்துத் திருப்திப்பட்டுக் கொண்டார். “காஞ்சிப்
பட்டு மகாராஜா… நானே நேரடியாகத் தருவித்தது” என்றவரிடம் “தொட்டுப்
பார்த்தால்தானே பட்டின் மென்மை தெரியுது… ரொம்ப நல்லாயிருக்கு…” என்றார்
ராஜா.
இதேபோல் இல்லாத ஒவ்வொரு ஆடையையும் அணிகலனையும்
இருக்கின்ற பாவனையுடன் அந்தக் குழு சொல்லிச் சொல்லி அணிவித்துக் கொண்டிருந்தது. ஒவ்வொரு
முறையும் ராஜாவும் “அற்புதம்” “அபாரம்” என வாய்
வலிக்காமல் சொல்லிக் கொண்டிருந்தார். அலங்காரம் முழுவதுமாக முடிந்த பின்னர்
ஆளுயரக் கண்ணாடி முன் நின்று ராஜா ஒரு முறை தன்னுடைய தோற்றத்தைப் பார்த்துக்
கொள்ளச் சொல்லி குழு கேட்டுக் கொண்டது. கண்ணாடி முன்னால் நின்ற ராஜாவிற்கு கண்ணைக்
கட்டியது. இருந்தாலும் தலையை ஒரு உலுப்பு உலுப்பி “ஆஹா… ஆஹா…” என்று
சொல்லிக் கொண்டார்.
போட்டியில் திருமணமான ஆண்கள் மட்டுமே கலந்து கொள்ள
வேண்டும் என்று அறிவித்து, அரங்கத்தில் வாசலிலேயே வந்திருந்த இளைஞர்களும் யுவதிகளும்
தகுதி நீக்கம் செய்யப்பட்டு திருப்பியனுப்பப்பட்டுக் கொண்டிருந்தார்கள்.
போட்டிக்கு வந்திருந்த குடும்பஸ்தர்களில் ஒருசிலர்
தங்கள் குழந்தைகளுடன் வந்திருந்தார்கள். அவர்களிலும் பெண்குழந்தைகளுக்கு (நல்ல
வேளையாக) அனுமதி மறுத்த அரண்மனைக் காவலர்கள், போனால் போகிறது என்று ‘குழந்தைகளைத்
துணை அரங்கத்தில் விட்டுவிட வேண்டும்’ என்ற கட்டளையுடன் சில ஆண் குழந்தைகளுக்கு
அனுமதியளித்திருந்தார்கள். கூட்டம் நிரம்பி வழிந்தது. ராஜா வருவதற்கு முன்னர் “பத்தினிப்
பெண்டிரைக் கைப்பிடித்த பதிகள் மட்டுமே இந்தப் போட்டியில் கலந்து கொள்ள முடியும்.
மற்றவர்கள் போட்டியில் கலந்து கொள்ள முடியாது. விதியை மீறுபவர்கள் கடுமையாகத்
தண்டிக்கப்படுவார்கள்” என்று அறிவிக்கப்பட்டதும் ஒரு சிலர் வெளியேறினார்கள்.
மற்றவர்கள் மிகுந்த நம்பிக்கையுடன் காத்திருந்தார்கள்.
அரங்கத்திற்குள் கம்பீரமாக ராஜா நடந்து வந்த போது,
அனைவரும் அதிர்ச்சியடைந்தார்கள். ஆனாலும் வெளிக்காட்டிக் கொள்ள முடியவில்லை. ராஜா முட்டாள்
என்பது ஒரு புறமிருந்தாலும், நம்பிக்கையின் அடிப்படையில் மனரீதியாகக் கட்டப்பட்ட
நாட்டு மக்களாகிய அவர்களில் பலரும் போட்டிக்கு முந்தைய ‘சதி-பதி’ அறிவிப்பை நம்பி
தங்கள் நிலைமையை நொந்து கொண்டிருந்தார்கள். ‘யாராயிருக்கும்?’ ‘வீட்டிற்குப் போய்
பேசிக் கொள்ளலாம்’ ‘இப்ப வெளியேறினா எல்லாருக்கும் தெரிந்துவிடும்’ ‘நம்ம நிலம
இப்படி ஆயிருச்சே’ ‘அவள…’ எனப் பல்வேறு உள் உரையாடல்களுக்கு ஆட்பட்டிருந்த அவர்கள்
தங்கள் அகத்தின் அழகு முகத்தில் வெளிப்படாதிருக்க வேண்டும் என்பதில் மிகவும்
கவனமாயிருந்தார்கள்.
ராஜா அரங்கிற்கு வந்து ஒயிலாக நின்றதும் நீண்ட
நாட்களாக அமைதி காத்துத் தகுதியைத் தக்க வைத்துக் கொண்டிருந்த சேவகர்களில் ஒருவர்
ராஜாவின் காவி நிற அங்கவஸ்திரத்திற்குப் பதிலாக அடர் சிவப்பு நிற அங்கவஸ்திரம் அணிந்திருந்தால்
இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் என்று சுட்டிக் காட்டினார். சுட்டிக் காட்டியதன்
நோக்கம் அவர் அப்படி எதையும் அணியவில்லை என்பதை அறிவிப்பதா? அல்லது காவி நிற
அங்கவஸ்திரம் அணிந்திருக்கிறார் என அறிவிப்பதா? என்று மற்றவர்கள் புரிந்து
கொள்வதற்கு முன்னர், “ராஜாவின் அலங்காரத்தில் குறை சொன்னதால், இந்தச் சேவகன்
தகுதி இறக்கம் செய்யப்படுகிறான்” என பிரதான அல்லக்கை அறிவிக்க “சபாஷ்…
சரியான முடிவு…” என
ஆமோதித்த ராஜா அறிவிப்பிற்கான மகிழ்ச்சியையும் கைதட்டிக் குதூகலித்துப் பகிர்ந்து
கொண்டார். நீண்ட நாள் சேவகனான அவனுடைய இந்தத் தகுதியிறக்கம் புதியவர்களையும்
மற்றவர்களைப் பயம் கொள்ளச் செய்தது. அல்லக்கைகள் எதிர்பார்த்ததும் அதுதான்.
ஒவ்வொருவராக ராஜாவின் ஆடை அலங்கார அற்புதங்களை
பொய்யாகப் புகழ்ந்து, பரிசுகள் பெற்றுத் திரும்பிக் கொண்டிருந்தார்கள். பரிசு
பெற்றுச் சென்று கொண்டிருந்தவர்கள் அனைவருமே அரங்கவாசலை அடையும்வரை மிரட்சியுடன்
திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டே சென்றதைக் கவனித்த ராஜா அதற்கான காரணத்தை
அல்லக்கைகளிடம் கேட்டபோது, ஆடை அலங்கார அழகில் மயங்கிய அவர்கள், காணக் கிடைக்காத
காட்சியைக் கண்ட ஆனந்தத்தில், இனியொருமுறை பார்க்க வாய்க்காதே என திரும்பிப்
பார்த்து ரசித்தபடி சென்று கொண்டிருப்பதாக கூறி வைத்தார்கள். ஆனால் உண்மையில்
அவர்கள் ராஜாவின் ஆடை ஒரு முறையாவது நம் கண்களுக்கு தெரிந்துவிடாதா? நமது குடும்ப
வாழ்க்கை நல்லபடியாக அமைந்துவிடாதா? என்ற நைப்பாசையுடன்தான் திரும்பித் திரும்பிப்
பார்த்துக் கொண்டே சென்றார்கள்.
அழைத்து வரப்பட்ட சிறுவர்கள் பக்கத்தில் இருந்த துணை
அரங்கத்தில் விளையாடிக் கொண்டிருந்தார்கள். நேரம் ஆக ஆக சிறுவர்களுக்குப் பசி
எடுத்தது. தகப்பனிடம் தன் பசியைச் சொல்வதற்காக அரங்கத்திற்குள் ஓடிவந்த ஒரு
சிறுவன் தகப்பனைப் பார்ப்பதற்கு முன்னர், அரங்கத்தில் மத்தியில் கம்பீரமாக நின்று
கொண்டிருந்த ராஜாவைப் பார்த்துவிட்டான். உடனே அவன் துணை அரங்கத்தின் வாசலை நோக்கி சத்தமாக,
“டோய்…
எல்லாம் இங்க ஓடியாங்கடா… இங்க ஒரு ஆளு முண்டக்கட்டையா நிக்குறாரு…” என்று
கத்தினான். மற்ற சிறுவர்களும் ஓடிவந்து காணும்காட்சியால் மொத்தமாகக் கைகொட்டிச்
சிரிக்கத் தொடங்கியிருந்தார்கள்.
“இந்தச் சிறுவர்களின் மனைவிமார்கள் பத்தினிகள் இல்லையா?” என்று
ராஜா கேட்டால் என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் குழம்பித் தவித்துக்
கொண்டிருந்த அல்லக்கைகளை ராஜாவின் கம்பீரமான குரல் சுயாதீனப்படுத்தியது. “பொது
இடத்தில் வரம்பு மீறி நடந்து கொண்ட இவர்கள் மீதான நடவடிக்கை நாளை அரசவையில்
அறிவிக்கப்படும்… ராஜாவிற்கு எதிராக அவதூறு பரப்பும்படி இவர்களைத்
தூண்டிவிட்டவர்கள் யாரென்று விசாரியுங்கள்… போட்டியில் இதுவரை பங்கேற்காத மற்றவர்களும்
சிறப்பாகப் பாராட்டியதாகப் பாவித்து அவர்களுக்கு பரிசுகள் கொடுத்து அனுப்புங்கள்…” என்று
முழங்கினார். முழக்கத்தைத் தொடர்ந்து ராஜா கம்பீரமாக திரும்பி அல்லக்ககைளும்
அமைதிகாப்பவர்களும் பின்தொடர “ரொம்பக் கனமாக இருக்கின்றன இந்த ஆடைகள்.
அந்தப்புரத்திற்குச் சென்றவுடன் களைந்துவிட்டு மாற்றுடை அணியவேண்டும். இன்றைக்குச்
சிறப்பாகப் பாராட்டியவர்களுக்கு இன்னும் ஏதாவது செய்ய வேண்டும்” என்றபடியே
அந்தப்புரத்தை நோக்கிப் புறப்பட்டார். அந்த முதற் சிறுவனும் அவனுடைய இணைச்
சிறுவர்களும் கள்ளங் கபடமற்ற, உண்மையான தங்கள் சொந்த வார்த்தைகளுக்காக விசாரனை
வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளார்கள். சட்டப்படியோ சட்டத்திற்குப் புறம்பாகவோ
தண்டிக்கப்படவும் உள்ளார்கள்.
0
‘இந்தக் கதையில் ராஜாவோ, அல்லக்கைகளோ,
அமைதிகாப்பவர்களோ செய்தவை சரிதானா என்பதல்ல என்கேள்வி. அப்படியான கேள்விகளைக்
கேட்பது அபத்தம் என்பது எனக்குத் தெரியும். என்னுடைய கேள்விகள்…
v இங்கே நாடு
எது?
v ராஜா யார்?
v யாரெல்லாம்
அல்லக்கைகள்?
v யாரெல்லாம்
அமைதி காப்பவர்கள்?
v போட்டியில்
கலந்து கொண்டவர்கள் ஏற்றுக்கொண்ட வாழ்வியல் (தத்துவம்) எது?
v குழந்தைகள்
யார்?
v முதற்குழந்தையாக
உங்களுடைய தேர்வு யாருக்கு?
இந்தக் கேள்விகளுக்கான விடைகளை பத்து நொடிகளுக்குள்
நீ சொல்லத் தொடங்கவில்லை எனில்...
பைஸ்மால்கசன் விரைவாகச் சிந்தித்து எங்கிருந்து
தொடங்குவது என முடிவு எடுத்துக் கொண்டிருக்கையில் எங்ஸ்ட்வின் செயற்கை நுன்னறிவு
வைரஸின் கௌண்ட் டவுன் தொடங்கியது.
10... 9... 8... 7... 6... 5... 4... 3... 2... 1...
விடையைக் கண்டுபிடித்த அவன் டைப் செய்யத்
தொடங்குமுன்னரே...
மீண்டும் எங்ஸ்ட்வின்
செயற்கை அறிவு வைரஸின் அந்த உருவம் திரையில் தெரிய தோளில் தொங்கிய தலை ‘குட் பை’
சொல்ல... திரை மும்முறை ஒளிர்ந்து கணினி செயல்பாடற்றுப் போனது.
(நன்றி : உயிர் எழுத்து - அக்டோபர் 2017)
No comments:
Post a Comment