19.1:
சப்னா
வாழ்க்கை ஏன் சிலரை நமக்கு அறிமுகம் செய்கிறது? அதைப் புரிந்துகொள்வதிலேயே
பெரும்பாலானோரின் ஆயுள் கடந்துவிடுகிறது, ஒரு சில சந்திப்புக்கள் அப்படியே வாழ்கையை,
குறிக்கோளை, இலட்சியத்தை புரட்டிப்போட்டு விடுகிறது. ஒருவேளை எனக்கான அப்படி ஒரு சந்திப்புதான்
சப்னாவோ? அவளில் நான் தொலைந்து போவேனோ? ஒருவேளை அவளை நோக்கிய ஏன் தேடல்தான் இந்த வாழ்க்கையோ?
நான் எதற்காக அவளை சந்தித்தேன்? அவள் ஏன் என்னை அப்படிப் பார்த்தாள்? ஒருவேளை நான்
அவளை இதற்கு முன்பே சந்தித்திருப்பேனோ? ஒருவேளை ஆம் என்றால் எங்களுக்குள் என்ன உறவு?
நான் தான் அம்மாவைப் பார்த்துக்கொள்ள அவளை அனுப்பியிருப்பேனோ? ஏன் ஏன் வாழ்க்கை விநோதங்களை
சுமந்துள்ளது? இந்த இரண்டு நாட்களாக நான் யார் என்ற கேள்வியை விட 'எனக்கு சப்னா யார்?'
என்ற கேள்வி என்னைத் துளைக்கத் தொடங்கிவிட்டதே. நான் ஏன் அவளை சந்திக்க வேண்டும்? என்னை
நோக்கிய எனது தேடல் அவளில்லாமல் முழுமையடையுமா? அவளின் அவளின் கண்களுக்குள் ஏதும் கருந்துளை
உள்ளதோ? என்னை அப்படியே இழுத்து சலித்து பொடிப்பொடியாக்கி விடுகிறதே, ஆனால் அவளுக்குள்
கரைவதில்தான் எத்தனை இன்பம். ஒருவேளை எல்லா நட்சத்திரங்களும் கருந்துளைகளை நோக்கித்தான்
பயணிக்கிறதோ? கரைவதில்தான் அவை முழுமையடையுமோ? அவளைபிரிந்து வருவது ஏன் இப்படி வலிக்கிறது?
அவள் ஏன் என்னை காந்தப்புயலில் சிக்கிய இரும்புத்துகளாய் அவளை நோக்கி இழுக்கிறாள்.
ஏன் மனம் ஏன் நியுட்ரானை சுற்றும் ஏலெக்ட்ரானாய் அவளையே சுற்றி வருகிறது? ஒருவேளை நியுட்ரான்
போல நானும் கடைசிவரை ஆவலுடன் சேர முடியாதோ? அவளைக்கண்டால் ஏன் நான் அனுசிதைவு கொண்ட
ஆஞ்சியோஸ்பெர்ம் விதைகளாய் அழிந்து போவதுபோல் உணர்கிறேன்? ஏன் அவளைப்பிரிவது நானோவரில்
ஊசி செய்து நகக்கண்ணில் குத்துவதுபோல் வலிக்கிறது? அவளும் என்னைக் காதலிப்பாளா? நான்
தேடும் என் இறந்தகாலத்தில் எனக்கு வேறு காதலி இருந்தால்? அதை எப்படி எதிர்கொள்வது?
எதிர்காலத்துக்காக இறந்தகாலத்தை இழப்பதா இறந்தகாலத்துக்காக எதிர்காலத்தை இழப்பதா?
ஏன் இப்படி ஹேக் செய்யப்பட்ட கம்ப்யூட்டராய் நான் குழம்பிப்
போகிறேன்? என்ன செய்வது? ஏன் வாழ்வை நானோவரால் அணு எண் குறைக்கப்பட்டதுபோல் சுருக்கிக்கொள்ளவா
இல்லை பெருவெடிப்பு அண்டமாய் விரித்துச் செல்லவா? என்னைத் தேடவா? அவளுக்குள் தொலைந்து
போகவா? இவளின்.. – சடாரென முடியை ஹேர் டிரைவிலிருந்து பிடுங்கியதும் பேசிக்கொண்டிருந்த
சத்யாவின் உருவம் சுருங்கி மறைந்துபோனது. கையிலெடுத்த சத்யாவின் முடியை ஆட்காட்டி விரலுக்கும்
கட்டை விரலுக்கும் நடுவில் வைத்து உருட்டியபடி நிலைகுத்திய பார்வையோடு அமர்ந்திருந்தாள்
சப்னா. வெகுநேரம் கழித்து அவள் கண்களில் இருந்து ஒரு துளி கண்ணீர் கன்னத்தில் வழிந்து
ஓடியது.
எதற்காக அவனது முடியை எடுத்தோம் என தன்னைத்தானே திட்டிக்கொண்டாள்.
இன்று காலை படுக்கையில் உதிர்ந்திருந்த சத்யாவின் முடியைக்கண்டதும் அவளுக்கு இனம் புரியாத
ஆர்வம் பிறந்தது. அவன் தன்னைப்பற்றி என்ன நினைக்கிறான் என்று தெரிந்துகொள்ள நினைத்தாள்.
உண்மையில் அவனைக் கொலை செய்ய அவனுடைய எண்ண ஓட்டத்தை தெரிந்து வைத்திருப்பது நல்லது
என்று தன்னை சமாதானப் படுத்திக்கொண்டாலும் உண்மையில் அவளது கூரார்வமும்(curiosity)
ஒரு காரணம். அவளின் இந்த செயலால் இவ்வாறு தடுமாறுவாள் என அவள் நினைக்கவில்லை. வெகுநேரம்
யோசித்துக்கொண்டிருந்தாள், சத்யா நினைவிலிருந்ததுபோலவே 'இவனை ஏன் சந்தித்தோம்' என நினைத்துக்கொண்டாள்.
சிறு வயது முதலே அனாதையாகவே வாழ்ந்த அவளுக்கு எதையும் தர்க்கப்பூர்வமாகவே பார்க்கும்
அவளுக்கு இந்த உணர்வுப் பூர்வமான தருணம் புதிய அனுபவமாக இருந்தது. ‘ஒருவேளை தான் ஒரு
ஹ்யுமனாய்டை காதலிக்கப் போகிறோமா?’ என்று தன்னைத்தானே கேட்டுக்கொண்டாள். “இந்த ஹ்யுமனாய்டு
சுயமாக சிந்துக்கக் கூடியது. கட்டளைகளுக்கு அடிபணியாது.” என்று ஜார்ஜ் சொன்னது நினைவில்
வந்தது. பயிற்சியின்போது சத்யா கேட்ட “மனிதர்கள் இவ்வாறு யந்திரம் போல் வாழ்வதை எதிர்த்து
யாரும் கேள்வி கேட்கவில்லையா?” என்ற கேள்வி நினைவுக்கு வந்தது. இவனை அழிக்காமல் விட்டால்
அது நிறுவனத்தை அழிவுப்பாதைக்கு இட்டுச்செல்லும் என நினைத்துக் கொண்டாள். இருப்பினும்
அவனது நினைவுகளைக் கண்டது இவளை மன ரீதியாக பாதிப்படைய வைத்திருந்தது, அவனைக் கொலை செய்ய
தயாராக வேண்டும் என சொல்லிக்கொண்டாள். காஸரிடம் கவுன்சிலிங் செல்ல வேண்டும் என்று நினைத்தபடி
படுத்து உறங்கினாள். ஏனோ அவளது தலையணை நனைந்து கொண்டிருந்தது.
காஸர்:
காஸர்: வா சத்யா. நீ யார் எனத்தெரிந்ததா?
சத்யா: இல்லை அங்கே எதுவும் கிடைக்கவில்லை, அவன் எதுவும் சொல்லவில்லை.
அவனுடைய அறையின் நினைவுகளை எடுத்துப்பார்த்தேன் அங்கும் எதுவுமே இல்லை.
கா: அவன் மூளை செல்களைப் பார்த்தாயா? முடியாவது எடுத்துவந்தாயா?
ச: இல்லை, அவன் முன்னெச்சரிக்கையாக பால்டர் செய்திருந்தான்,
ஒற்றை முடி கூட இல்லை.
கா: இப்போது என்ன செய்யப் போகிறாய்?
ச: நான் ஒரு ரகசிய ஏஜெண்ட், என்னைப்பற்றிய விவரங்களை கண்டு பிடிக்கப்
போகிறேன். கண்டு பிடித்து நான் யார் செய்துகொண்டிருந்த வேலையை தொடரப் போகிறேன். முதலில்
சப்னாவைப் பார்க்கப் போகிறேன்.
கா: அவளும் ரகசிய ஏஜெண்டா? (கிண்டலாக கேட்டது)
(சத்யா எழுந்து வெளியே கிளம்பினான்)
கா: ஏய் இரு இந்த ட்ராஜன் ஹார்சை நீக்கிவிட்டுப்போ.
ச: இன்னும் இரண்டு நாள் இரு, என்னை கிண்டல் செய்ததற்கு தண்டனை.
19.2
சப்னா பதட்டமாக இருந்தாள். குறுக்கும் நெடுக்குமாக நடந்துகொண்டிருந்தாள்.
திடீரென ஓரிடத்தில் நின்று கண்களை மூடி ஆழமான பெருமூச்சு விட்டாள். முடிவு செய்தவளாய்
ஓரிடத்தில் அமர்ந்தாள். கைகளை விரித்து மஞ்சள் நிற ஒளியை டேபிளின் மீது கொட்டினாள்,
அது சிறிய திரையாக உருமாறியது. அதில் எதையோ தட்டினாள். அதில் ஜார்ஜ் முளைத்தார்.
“ஹலோ ப்ரொபசர். எப்படி இருக்கிறீர்கள்?”
“நன்றாக இருக்கிறேன் சப்னா, நமது ப்ரோக்ராம் வெற்றி”
“தெரியும் சத்யா கூறினான். இன்று என்னைப்பார்க்க வருவதாக கூறியிருக்கிறான்”
“ஓ,, அந்தளவு v18 ஐ நம்பவைத்து விட்டாயா? நன்று நன்று.”
“ஆம், சத்யா என்னை நம்புகிறான்” சப்னாவின் குரல் பலவீனமாக ஒலித்தது.
“அது இயல்பான மனிதர்களைப்போல் தான் ப்ரோக்ராம் செய்யப்பட்டுள்ளது,
நம்பிக்கை, விசுவாசம் எல்லாம் அதற்கு தெரியும். நீ அதை அழிக்க தயாராகி விட்டாயா?”
“ம்ம்ம் தயாராக இருக்கிறேன் என்று நினைக்கிறேன்”
“நாங்கள் v0 வின் வீட்டை சோதனையிட்டுப் பார்த்தோம். ரெகார்ட்
ஆனவீடியோ பிரமிக்கும்படி உள்ளது. V18னின் வேகம் நம்ப முடியாத அளவு உள்ளது. நீ அவனிடம்
கவனமாக இருக்க வேண்டும்.”
“ம்ம்ம்”
“துப்பாக்கியை பயன்படுத்தாதே, v18னுடைய ரிப்லெக்ஸ் அதீத வேகமாக
உள்ளது, சரேலென உடலை சுருக்கியோ விரித்தோ தப்பி விடுகிறான், நீ இங்கு வந்ததும் காட்டுகிறேன்.
நம் பாதுகாவலர்களாய் இவனைப்போன்ற ஹ்யுமனாய்டுகளை இனி எதிர்காலத்தில் பயன்படுத்தலாம்.
நீ அவனைக்கொல்ல முதலில் பிரீசரைப் பயன்படுத்து, அது v18னை செயல்பட விடாமல் முடக்கி
விடும் மேலும் அது ஒலியின் வேகத்தில் இயங்கும் அதனால் V18னால் தப்பிக்க முடியாது.”
“சரி ப்ரொபசர் அப்படியே செய்கிறேன்”
“குட், வேறென்ன பெண்ணே?”
“ப்ரொபசர் ஹ்யுமனாய்டுகள் காதலிக்குமா?” என்றாள்.
“ஹ ஹ ஹா... அதற்கு மட்டும் என்ன குறைச்சல், ஆம் காதலிக்கும்,
என்ன பரிதாபம் அதைத்தான் யாரும் காதலிக்க மாட்டார்கள்”
“ஏன் ப்ரொபசர்?” என்றாள்.
“பொம்மையை யாரும் காதலிப்பார்களா? இது போனால் இன்னொன்று. ஹ ஹ
ஹா”
“ம்ம்ம்..”
“சரி பெண்ணே நான் சொன்னது நினைவில் இருக்கட்டும், துப்பாக்கியைப்
பயன்படுத்தாதே, முதலில் ப்ரீசர் பின்பு துப்பாக்கி”
“சரி ப்ரொபசர். நீங்கள் யாரையாவது கொலை செய்திருக்கிறீர்களா?”
“ஹ்யுமனாய்டை கேட்கிறாயா? முதலில் ஒன்றை புரிந்துகொள் இதற்கு
பெயர் கொலை அல்ல அழித்தல், நம் வீட்டில் வீணாய்ப்போன பொம்மையை அழிப்போமே அது போல தான்
இதுவும் புரிந்துகொள். ஆங்.. உன் கேள்விக்கு பதில். நான் நூற்றுக்கணக்கில் ஹ்யுமனாய்டுகளை
‘கொலை’ செய்திருக்கிறேன். என் வேலையே அதுதான்”
“சரி நன்றி ப்ரொபசர்”
“குட் லக் டியர்” என்றபடி மறைந்து போனார்.
சப்னா நெற்றியை சுருக்கியபடி நடந்தபடி நானோவரைக் கையில் எடுத்தாள்.
“ப்ரீசர்” என்றாள். அது குட்டியாக ரிமோட் போன்ற ஒன்றைத் துப்பியது. “துப்பாக்கி” என்றாள்.
உடனே துப்பாக்கி வந்து விழுந்தது. இரண்டையும் எடுத்து இடுப்பில் சொருகிக்கொண்டாள்.
கொஞ்ச நேரத்தில் கதவைத் திறந்துகொண்டு சத்யா வந்தான், “சப்னா...
எப்படி இருக்கிறாய் உன்னிடம் நிறைய சொல்ல வேண்டும்” என்று குதூகலமாய் கத்தியபடி அவளை
நெருங்கினான்.
சப்னா ஒருநொடி தயங்கியவள் சட்டென்று துப்பாக்கியை எடுத்து அவனை
நோக்கி சுட்டாள்.
அவன் தடுக்கவில்லை, தப்பிக்க முயலவில்லை, சப்னாவையே பார்த்தபடி
நின்றிருந்தான். துப்பாக்கி குண்டு அவன் நெற்றியை உரசும்போது அவன் கண்களில் ஒரு துளி
கண்ணீர் தேங்கியது.
“ஆ...” வென அலறியபடி சப்னா விழித்துக்கொண்டாள். வேகமாக அருகிலிருந்த
சத்யாவை இழுத்து மாரோடு அணைத்துக்கொண்டாள். தூக்கத்திலிருந்து முழுவதும் விழிக்காத
சத்யா அவளின் வெற்று மார்பை சப்பியபடி “அம்மு நான்தான் குட்டிப்பையன்” என்றான். “ஆமாண்ட்டா
செல்லம், நீதான் என் குட்டிப்பையன்” என்று தேம்பியபடியே சொல்லி அவனை இன்னும் இறுக்கி
அணைத்து அவன் நெற்றியில் முத்தமிட்டாள். பின்பு அவனை அணைத்தபடி படுத்தாள். அவள் கண்களில்
கண்ணீர் வழிந்துகொண்டிருந்தது.
காஸர்:
காஸர்: என்ன உதவி வேண்டும்.
சப்னா: நான் பேசிக்கொள்கிறேன், நீ வெளியே இரு சத்யா.
சத்யா: சரி (வெளியே போனான்.)
தி: எனக்கு ஹ்யுமனாய்டுகளைப் பற்றிய விவரங்கள் வேண்டும்.
கா: எந்தமாதிரி விவரங்கள்?
தி: வடிவமைப்பு, செயல்திறன் முக்கியமாக உருமாற்றம், அடையாள மாற்றம்
போன்ற கோப்புகள் வேண்டும்.
கா: நீ கேட்கும் கோப்புகள் தலைமையிடத்தில் இருக்கும், அதனை தசக்
செய்வது முடியாத காரியம்
தி: முடியும், நான் உனக்கு உதவுகிறேன், நான் ஒரு கோட் தருகிறேன்,
அதன்மூலம் உன்னால் சூப்பர் கம்ப்யுட்டரை ஹேக் செய்யலாம்.
கா: சரி நான் தேடுகிறேன், ஆனால் அவர்களின் 'லாவாவாலு'க்குள்
ஊடுருவ எனக்கு கொஞ்ச நேரம் வேண்டும்.
தி: சரி உன்னை ஒரு வாரத்தில் பார்க்கிறேன்.
கா: சத்யாவிடம் என் மரியாதையை தெரிவி.
19.3
“நான் நமக்கு பாதுகாப்புக்கு ஒரு செல்லப்பிராணி வாங்கப்போகிறேன்”
என்றாள் சப்னா.
“சரி நான் என்ன செய்யட்டும்?” என்றான் சத்யா.
“வீட்டில் பத்திரமாக இரு”
“என்னைப்பற்றி தேட வேண்டாமா?”
“அதைத்தான் காஸரிடம் சொல்லியிருக்கிறேன், அதனைக் கண்டுபிடிக்க
ஒரு வாரம் ஆகும், அதுவரை பத்திரமாக இருக்க வேண்டும், நீ கூறியதிலிருந்து நம் எதிரிகள்
பெரிய தீவிரவாத கூட்டமாக இருக்க வேண்டும். அதனால் நீ எங்கும் போகாமல் வீட்டிலேயே இரு.
நான் விரைவில் வந்துவிடுகிறேன்” என்றபடி சப்னா கிளம்பினாள்.
சத்யா வீட்டிற்குள் நுழைந்துகொண்டான்,
வீட்டு சுவர்களை கண்ணாடி போல் மாற்றி சுற்றிலும் வேடிக்கை பார்க்க ஆரம்பித்தான். நானோவரிடம்
டீ போடச்சொல்லிவிட்டு வீட்டு சுவற்றை டிவியாக மாற்றினான். பெட்ஸ் சேனலில் செல்லப்பிராணிகள்
அவற்றின் உருவாக்கம் குறித்து விளக்கிக்கொண்டிருந்தார்கள். போருடன் எல்லா உயிரினங்களும்
அழிந்துவிட்டிருந்தன. மீதமிருந்த உயிர்களையும் 'ஆர்கானிக் உணவு ஆர்வலர்கள்' என்ற குழு
தின்று விட்டிருந்தது. பின்பு எல்லா செல்லப் பிராணிகளையும் செயற்கையாக உருவாக்கத் தொடங்கிவிட்டனர்.
அவைகளின் உருவாக்கத்தை பார்த்துக்கொண்டே சத்யா தூங்கிப் போனான்.
சப்னா கையில் பையோடு
திரும்பி வந்தாள். “என்ன வாங்கி வந்தாய்?” என்றபடி ஆர்வமாக கேட்டபடி அவளை நெருங்கினான்.
பைக்குள்ளிருந்து ஒரு பாம்பு கீழே விழுந்தது. இவனைப்பார்த்ததும் படமெடுத்து, இவனை மிரட்டியது.
“ஸ்நேக்கி, இது சத்யா, அவனை பயமுறுத்தாதே.” என்று சப்னா சொன்னதும், அவளையும் இவனையும்
மாறி மாறி தலையை திருப்பிப் பார்த்தது. பின்பு சரசரவென்று வளைந்து நெளிந்து பொய் அவன்
காலை சுற்றிக்கொண்டது. சத்யா அதை கையிலெடுத்து விளையாட ஆரம்பித்தான், சப்னா புன்னகையோடு பார்த்துக்கொண்டிருந்தாள்.
இரவு படுக்கும்போது ஸ்நேக்கியை
எடுத்து வெளியே விட்டார்கள்,அது மிகப்பெரியா மலைப்பாம்பாக மாறி இவர்களின் வீட்டை விழுங்கிக்கொண்டது.
அதன் வயிற்ருக்குள் இருந்த கோடிக்கணக்கான அறைகளில் ஒன்றில் இவர்களை தேக்கி வைத்துக்கொண்டது.
“இது பாதுகாப்பானது தானா?”
சத்யா கேட்டான்.
“ஆம் நம்மை யாராவது தாக்க
முற்பட்டால் இந்த அறைகளிலிருந்து நம்மை கண்டுபிடிக்க வேண்டும். மாறி தவறான அறைகளுக்குள்
நுழைந்தால் அதுவே அவர்களை அழித்துவிடும்.”
“மொத்தமாக செயற்கை மின்காந்தப்
புயலை உருவாக்கி நம்மை ஸ்நேக்கியோடு அழித்துவிட்டால்?”
“அப்படி நடந்தால் நம்மை
ஒரு பலூனோடு துப்பிவிட்டு ஸ்நேக்கி அழிந்து போகும். அந்த பலூன் வலிமையானது, உள்ளீடற்றது.
அதனால் லேசராலும் நம்மை அழிக்க முடியாது. அட்வான்ஸ்டு ரெடாராலும் நம்மை கண்டுபிடிக்க
முடியாது.”
“சரி, இப்போது தூங்கலாம்.”
என்றபடி அவளை அணைத்துக்கொண்டான்.
அடுத்த வாரத்துக்குள்
30 தாக்குதல்களை ஸ்நேக்கி முறியடித்திருந்தது.
“அவர்களை உயிரோடு பிடித்து
விசாரித்தால் உண்மை தெரியுமல்லவா?” என்றான் சத்யா.
“இல்லை ஸ்நேக்கி அவர்களை
கொள்வதற்காக தான் ப்ரோக்ராம் செய்யப்பட்டுள்ளது.” என்றாள் சப்னா.
“நான் வேண்டுமானால் ரீப்ரோக்ராம்
செய்யட்டுமா?”
“இல்லை வேண்டாம் அதனால்
பிரயோஜனமில்லை, நாம் காசரிடம் தேடச்சொன்ன விவரங்கள் இன்று தயாராக இருக்கும். நாம் போய்
அதைப் பார்த்துவிட்டு அடுத்த நடவடிக்கையை முடிவு செய்வோம்”
“காஸரிடம் என்ன தேடச்
சொன்னாய்?”
“பிளாஸ்டிக் சர்ஜரி குறித்து
விசாரிக்கச் சொன்னேன்.”
“எதற்காக?”
“உன்னை யாரும் கண்டுபிடிக்க
முடியாதல்லவா, அதனால்தான்”
“ஹஹஹா.. ஏன் கண் ரேகையைக்
கொண்டு கண்டுபிடித்துவிட்டால்?”
“ஆம் அதுதான் எனக்கும்
பயமாக இருக்கிறது” என்று தனக்குள் சொல்லிக்கொண்டாள்.
காஸர்:
சப்னா: நீ சொல்வது உண்மையா. அவ்வாறு ஒட்டுமொத்தமாக உருமாற்றம்
செய்ய முடியுமா?
காஸர்: ஆம் கண்டிப்பாக, ஹ்யுமனாடை நீ மொத்தமாக மாற்ற முடியும்.
தி: கண் ரேகை?
கா: எல்லாமே.
தி: சரி விவரங்களைக் கொடு.
கா: (மஞ்சள் நிற ஒளியை அவள் கண்ணுக்குள் செலுத்தியது)
தி: என்ன இது, ஹ்யுமனாய்டின் ப்ரோக்ராமை மறுஆக்கம் செய்ய வேண்டுமா?
அப்படி செய்தால் நினைவுகள் அழிந்து போகாதா?
கா: ஆம்.
தி: வேறு வழி இல்லையா.
கா: இல்லவே இல்லை. நீ வேண்டுமானால் பயிற்சின் மூலம் ஹ்யுமனாய்டுக்கு
நினைவுகளை ஏற்றலாம்.
தி: இல்லை அதற்குப் சில மாதங்களாகும்.என்னிடம் அவ்வளவு நேரம்
இல்லை.
19.4
தூங்கிக்கொண்டிருந்த சத்யாவையே பார்த்துக்கொண்டிருந்தாள் சப்னா.
அடிக்கடி கண்களை துடைத்துக்கொண்டிருந்தாள். சத்யா தூக்கத்தில் இயல்பாக கைகளால் சப்னாவை
தேடினான். அவளைக்காணாமல் எழுந்து பார்த்தான். அமர்ந்திருந்த அவளிடம் நெருங்கினான்.
“சப்னா.. என்ன ஆச்சு?” என்றான்.
“ஒன்றுமில்லை கொஞ்சம் வேலை இருக்கிறது, யோசனையாக இருக்கிறேன்.”
என்றாள்.
“என்ன வேலை நான் எதுவும் உதவ முடியுமா?”
“இல்லை, நான் பார்த்துக்கொள்கிறேன். நீ தூங்கு.”
“சரி” என்றபடி எழுந்து சமைலறைக்குள் போனான். திரும்ப வரும்போது
கையில் காபி கப் இருந்தது. அதை சப்னாவிடம் கொடுத்துவிட்டு அவள் நெற்றியில் முத்தமிட்டான்.
அவள் அவனைக் கட்டிக்கொண்டாள்.
அவளை விட்டு விலகி கட்டிலில் படுத்தவனிடம் “எனக்கு ஒரு சந்தேகம்,
நீ உதவுவாயா?” என்றாள்.
“என்ன அன்பே?” என்றான்.
“என்னிடம் ஒரு கம்ப்யூட்டர் இருக்கிறது. அது மிகப் பழையது, பல
கோப்புகள் அதில் உள்ளது. ஆனால் வைரஸ் அதன் வன்பொருளை அழித்துக் கொண்டிருக்கிறது. ஒன்று
அதன் இயங்குதளத்தை மறுஆக்கம் செய்ய வேண்டும். இல்லையென்றால் அது அழிந்து போகும். அனால்
எனக்கு ஏன் கோப்புகளும் முக்கியம் என்ன செய்ய?”
“இது எளிமையான கேள்விதான் உனக்கு கம்ப்யூட்டர் வேண்டுமென்றால்
மறுஆக்கம் செய், இல்லை கோப்புகள் வேண்டுமென்றால் இருக்கும் வரை பயன்படுத்திவிட்டு கம்ப்யூட்டரை
தூக்கிப் போட்டுவிடு” என்றான். சப்னா வேறு பக்கம் திரும்பிக் கொண்டாள். உதடுகளைக் கடித்தபடி
விட்டதைப் பார்த்துக்கொண்டு அழுதுகொண்டிருந்தாள்.
சத்யாவிற்கு அனைத்தும் புதுமையாக இருந்தது. சப்னா அதிகமாக எங்கும்
வெளியே வந்தது இல்லை, இவனை தீவிரவாதிகள் தாக்கக்கூடும் என்று சொல்லி வீட்டை விட்டு
எங்கும் கூடி வர மாட்டாள். ஆனால் அன்று பகல் முழுதும் சத்யாவோடு பல இடங்களை சுற்றிப்
பார்த்தாள். அடிக்கடி அவனை முத்தமிட்டாள். கட்டிக்கொண்டு நிகழ்படம் எடுத்துக்கொண்டாள்.
அன்று முழுவதும் சந்தோசமாக இருந்தான்.
இரவு வீட்டுக்கு வந்ததும், “நீ தூங்கு எனக்கு கொஞ்சம் வேலை இருக்கிறது”
என்றாள் சப்னா. “சரி” என்று தூங்கிய சத்யாவை வெகுநேரம் பார்த்தபடி. பிரீசரை எடுத்தாள்.
கைகள் நடுங்க அவனை நோக்கி நீட்டியவள், காண்ணீர் வழியும் முகத்தை வேறுபக்கம் திருப்பிக்கொண்டு
கண்களை மூடிக்கொண்டு உதடுகளைக் கடித்தபடி பட்டனை அமுக்கினாள். அப்படியே சரிந்து விழுந்து
சத்யாவைப் பார்க்க விரும்பாமல் கொஞ்ச நேரம் அழுதவள் பின்பு தேறி எழுந்து வந்து அவனைப்
பார்த்தாள். மெதுவாக அவன் நெஞ்சில் கை வைத்து தாளம் போடுவது போல் தட்டினாள். அவன் நெஞ்சு
பிளந்துகொண்டு ஒரு சிறிய சிப் வெளியே எட்டிப்பார்த்தது. அதைப் பிடுங்கினாள். சத்யாவின்
வாய் பிளந்துகொண்டது. அதைப்பார்த்ததும் கால்களை உதைத்துப் பின்னால் போய் விழுந்து அழ
ஆரம்பித்தாள். வெகுநேரம் அழுதவள் சிப்பை எடுத்து கம்ப்யூட்டரில் சொருகி எதோ டைப் செய்தாள்.
எல்லாம் முடிந்து திருப்தியானவளாய் சிப்பை எடுத்துக்கொண்டு போய் சத்யாவின் நெஞ்சில்
சொருகினாள். அவன் வாய் மூடிக்கொண்டது. இவள் சந்தோசமாய் பார்த்துக்கொண்டிருந்தபோதே அவன்
உருவம் மாறத் தொடங்கியது. அவள் பிரீசரில் அவனை ரிலீஸ் செய்துவிட்டு வீட்டை விட்டு வெளியேறினாள்.
அடுத்தநாள் காலையில் உருமாறிய அவன் வெளியேறுவதை அவனுக்கு தெரியாமல்
ரகசியமாக பார்த்துக்கொண்டிருந்தாள்.
“ஹலோ, நான் உங்களை இந்த பகுதியில் பார்த்ததில்லையே” என்று சத்யாவை
அணுகி ஒரு புதியவன் கேட்டான்
“நான் இங்கேதான் இருக்கிறேன். என் பெயர் விக்கி” என்று தன்னை
அறிமுகம் செய்துகொண்டான் சத்யா. சப்னா கண்ணீரோடு அவனைப் பார்த்துக்கொண்டிருந்தவள் பின்பு
திரும்பி வேறு திசையில் நடந்தாள்.
No comments:
Post a Comment