நேற்று
முகநூலில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர், திரைப்பட இயக்குநர் சீமான் 4 அடிக்கும்
அதிக நீளமுள்ள ஒரு வேலைத் தூக்கிக் கொண்டு ஆடியபடி, பச்சைத் துண்டு தோளில் தொங்க பக்தர்கள்
கூட்டத்துடன் நடந்து செல்வது போன்ற ஒரு புகைப்படம் இருந்தது. அதனுடன் திருப்பதிக்கும்,
சபரி மலைக்கும் செல்வதற்குப் பதிலாக முருகன் கோவிலுக்குச் செல்வதன் மூலம் சீமான் தமிழ்
தேசியத்தை முன்னெடுப்பதைச் சுட்டிக் காட்டி, எந்தக் கடவுளை வழிபடுவது என அடையாளம் காட்டுவதைவிட
சீமான் மக்களை அன்றாடம் பாதிக்கும் பிரச்சனைகளில் தலையிட வேண்டும் என ஒரு நண்பர் சுட்டிக்
காட்டியிருந்தார்.
தொல்காப்பியர்
காலந்தொட்டே அறியப்பட்ட, தமிழர்களின் முதுபெரும் இளங்கடவுள் முருகனை வழிபடுவதன் மூலமும்
முருகனை முன்னிலைப்படுத்துவதன் மூலமும் தமிழர்களை ஒருங்கிணைக்க ‘நாம் தமிழர்’ சீமான்
பெரும்பாடுபடுகிறார். நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால், இன்னும் நாம் தொல்காப்பியர்
காலத்தில் வாழவில்லை என்பதை தமிழர் சீமான் புரிந்து கொள்வது நல்லது. இவ்வாண்டு பிப்ரவரி
10 ஆம் நாள் ராம்கோ குழுமத் தலைவர் பி.ஆர்.ராமசுப்பிரமணிய ராஜா, சீமான் கொண்டாடும்
திருச்செந்தூர் முருகனுக்கு ரூபாய் எட்டு லட்சத்து ஐம்பத்து ஐயாயிரம் மதிப்புள்ள
294 கிராம் எடை கொண்ட தங்கப் பூணூலை கோயில் கண்காணிப்பாளர் மூ.பாலுவிடம் வழங்கினார்.
நெசவிலும், தச்சுத் தொழிலிலும் ஈடுபடும் சில தமிழ்ச்சமூகக் குடிகள் பூணூல் அணிவார்கள்
என்பது நாம் அறிந்ததே. அது தொழிலுடன் தொடர்புடைய ஒன்றாக இன்றுவரை அறியப்பட்டுள்ளது.
மற்றபடி தமிழனுக்கு ஏது பூணூல்? அதிலும் கதைப்படியே ஆனாலும், வள்ளியை மணந்த முருகனுக்கு
எப்படி பூணூல்?
முருகனை
முன்னிருத்துவதற்கு முன்னர், தமிழ்த்தேசியத்தை முருகனின் வழியாக முன்னெடுக்கும் சீமான்
போன்ற பக்தர்கள் தொல்காப்பிய முருகன் இன்னும் தமிழ்க் கடவுளாகத்தான் இருக்கிறாரா என்பதையும்
சேர்த்துப் பார்க்க வேண்டாமா? முருகன் ஸ்கந்தனாகவும், ஸுப்ரமண்யனாகவும் மாறியதுடன்
தனக்குப் பலநூற்றாண்டுகள் பின்னால் உருவாக்கப்பட்ட கணேஷனுக்கு தம்பியாக மாறி ‘சமஸ்கிருத’த்தால்
உள்வாங்கப்பட்ட துரோக வரலாற்றைப் பேசாமல், முருகனை முன்னிருத்துவது சரியா? முருகன்
மூன்றாம் மொழிப்பாடமாக சமஸ்கிருதம் படிக்கவில்லை. முருகனுக்கு சமஸ்கிருதம் தெரியாது.
அவர் தமிழ்க் கடவுள் என்பதால் தமிழில் மட்டுமே வழிபாடு நடத்தப்படும் எனும்படியான ஒரு
முருகன் கோவிலையாவது சீமானால் தமிழ்நாட்டில் காட்ட முடியுமா?
தமிழ்
அடையாளத்திற்காக சீமான் போன்றவர்களால் சரியான அரசியல்படுத்தலின்றி முருகபக்தர்களாக
மாற்றப்படுபவர்களை ‘ஸ்கந்த சஷ்டி கவசம்’ பாட வைத்து, ‘விநாயக சதுர்த்தி’ நாளில் ‘மஹா
கணபதி’ விக்ரகம் சுமக்க வைத்து, ஊர்வலம் என்ற பேரில் மதக்கலவரத்தில் ஈடுபடும் ஆட்களாக
அடிப்படைவாதிகள் மாற்றுவதற்கான சாத்தியமே இதில் அதிகம் என்ற அடிப்படைகூடப் புரியாத
‘நாம் தமிழர் கட்சி’யின் ஒருங்கிணைப்பாளர் சீமான்.
“நீங்கள்
எதிர் வரும் சட்டமன்றத் தேர்தலில் தொகுதி ஒதுக்கீடு படியுமானால் ஏதாவது ஒரு கட்சி
/ சில கட்சிகளுடன் கூட்டணி அமைத்து, தங்கள் முருக பக்தி மணம் கமழும் எழுச்சி உரையால்
தமிழர்களை உணர்ச்சிவசப்படவைத்து, கட்சியின் சார்பாக நின்ற அனைத்துத் தொகுதிகளிலும்
வெற்றிபெற வாய்ப்புள்ளது என்பதால்… தொடர்ந்து இதேபோல் அடிப்படை புரியாப் பொருள்களின்
அடிப்படையில் செயல்படத் தயங்காதீர்கள் சீமானே… எப்படியாவது தமிழர்களை(?) காப்பாற்றியாக
வேண்டுமே. காவடிகள் ஆடி வரும் ஆட்டத்திலே... முருகா ஆட்டத்திலே… ஆடல் கண்டு எந்தன்
மெய்மறந்தேன் கூட்டத்திலே… முருகா கூட்டத்திலே…”
No comments:
Post a Comment