Sunday, December 7, 2014

குறுங்கவிதைகள் – அருணோதயம்

*        
உனக்கும்
எனக்குமான உரையாடல்
ஏர் செல்லிலோ, ரிலையன்ஸிலோ
என்றான பிறகு
வாழ்வின் அபத்தங் குறித்து
அச்சங்கொள்ளாதிருக்க முடியவில்லை.
*        
எல்லா
கொடுக்கலுக்கும் பின்னால்
ஒரு வாங்கல்
இருக்கத்தான் செய்கிறது.
*        
காலத்துருவேறிய
உன் முறுவலினின்று
உதிர்கிறது
அனுபவச் சலிப்பு.
அதனடியில் ஒளிந்திருக்கிறது
ஓர் பிரிவின் ஆற்றாமை.
*        
தொலைவில் எங்கோ
தறிச்சத்தம் கேட்கிறது.
அதன் பற்சக்கரங்களில்
அரைபடும்
இந்த அதிகாலையின்
அகால மரணத்தை
நிந்தித்த வண்ணம்
தொண்டைக்குச் சூடு வைத்தேன்
மிடறு தேநீரால்.
*        
நீராடி முடித்ததும்
கரையேறித் துடைக்கலானாள்
ஒவ்வொரு கண்களாய்.
*        
ஒப்பனை கலைந்த
உன் முகம்
என்னானதில்லை என்றபோதிலும்
அதில் தீட்ட முயல்கிறேன்
எனக்குப் பிடித்த
வ(எ)ண்ணங்களை.
*        
அன்பற்ற கலவியும்
கலவியற்ற அன்பும் சலிப்பூட்ட
எனதன்பை
ஒரு கலவிக்கான முன்னுரையாய்
நிகழ்த்திக் கொண்டிருக்கிறேன்.

No comments:

Post a Comment