Tuesday, September 5, 2017

பாரத் மாதா கீ ஜே - சிறுகதை - ஹரி ராஜா


தைரியமாகத்தானே இருக்கிறாய் பிலால்? அடிக்கடி இந்தக் கேள்வியை கேட்டுக் கொண்டிருந்தான் ஷபீர். உண்மையில் பயந்து போயிருந்தது ஷபீர்தான். அவனது பயத்தை மறைத்துக் கொள்ளவே அவ்வாறு கேட்கிறான் என்பதை பிலால் அறிந்திருந்தான்.
அவர்களிடம் நாம் மாட்டிக் கொண்டால் நம்மைக் காக்க போலீஸ் வராது பிலால். எனவே எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நம்மிடம் உள்ளதை அவர்கள் கண்டுபிடித்துவிடக் கூடாது என்றான் ஷபீர்.
பேருந்து நிலையத்திலிருந்து சிவன் கோவில் வரைக்கும் அந்தத் தெருவை முழுமையாக போலீஸ் ஆக்கிரமித்திருந்தது. ஏறத்தாழ ஐநூறு போலீஸ்காரர்கள் ஆங்காங்கே இருந்தார்கள்.
 நீ பயப்படுவது போல எதுவும் நடக்காது ஷபீர். தைரியமாய் இரு என்றான் பிலால்.
நான் அஞ்சவில்லை. ஆனால் இதைக் கட்டைப் பையில் கொண்டு செல்வது சரியாக இருக்காது என்று எவ்வளவோ சொல்லியும் நீ கேட்க மறுக்கிறாய்
பையை நான் பத்திரமாக வைத்துக் கொள்கிறேன். நீ உன் பயத்தை வெளிக்காட்டாமல் இரு என்று ஷபீரைத் தேற்ற முயன்ற பிலாலுக்கும் உள்ளுக்குள் கொஞ்சம் பீதியாகத்தான் இருந்தது.
அவர்கள் பேருந்து நிலையத்திலிருந்து நடக்க ஆரம்பித்திருந்தார்கள். வழியில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. சாலையே வெறிச்சோடியிருந்தது, காக்கி அணிந்த காவலர்கள் தவிர.
பிலால்  குட்டையாக இருந்தான், கொஞ்சம் தொப்பை போட்டிருந்தது. முப்பது வயதை நெருங்கிக் கொண்டிருந்த அவன் தலை முடி ஆங்காங்கே நரைத்திருந்தது. அவனது சகோதரனான ஷபீர் அவனை விட ஐந்து வயது இளையவன். ஒல்லியாக தீக்குச்சி போல இருந்தான். அவர்கள் இருவரும் ரோஸ் நிறத்தில் ஆங்காங்கே முளைத்திருந்த தாடியுடன் இருந்தார்கள்.
இதுவரைக்கும் இவ்வளவு போலீஸை ஊருக்குள் நான் பார்த்ததே இல்லை என்றான் ஷபீர். பிலாலுக்குக்கூட இந்தச் சாலையில் ஊர்வலம் சென்று பார்த்ததாக நினைவில்லை. பள்ளிவாசல் என்றால் விநாயகருக்கு மிகவும் பிடிக்கும் போல என்று நினைத்துக் கொண்டான் பிலால்.
பல ஆண்டுகளுக்கு முன்னால் விநாயகர் ஊர்வலத்தால் ஏற்பட்ட கலவரத்தின் காரணமாக இந்தப் பாதையில் ஊர்வலம் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. அந்த ஊரின் பிரதான பள்ளிவாசல் அங்கு இருந்தது.
கலவரத்துக்கு பிள்ளையார் சுழி போட்டது கூட்டத்துக்குள்ளிருந்து பள்ளிவாசலுக்குள் விழுந்த கல்லா இல்லை விநாயகரைக் குறி வைத்து எறியப்பட்ட செருப்பா  என்று ஊரே கூடி விவாதித்தது. அவர்கள் கல் என்றார்கள். இவர்கள் செருப்பு என்றார்கள். ஆக மொத்தம் சாலையிலிருந்த பல கடைகளுக்கு சேதாரம் அதிகம்.
சில பத்தாண்டுகள் கழித்து இன்று நிலைமை வேறாக இருக்கிறது. ஜமாத்தினர் எந்த அடிப்படையில் அனுமதி வழங்கப்படுகிறது என்று கேட்டால்  அது பொதுப் பாதை என்பதால் அனுமதி வழங்கப்படுகிறது என்று காவல்துறை தரப்பிலிருந்து பதில் வருகிறது.
கும்பல் இப்போது மசூதியை நெருங்கிக் கொண்டிருந்தது. கிட்டத்தட்ட நூறடி பின்னே இவர்கள் நடந்து சென்று கொண்டிருந்தனர். ஒரு பதற்றம் அங்கிருந்த காவல்துறையினரை தொற்றிக் கொண்டிருப்பதாக இருவரும் உணர்ந்தனர்.
பிலால்! அவர்களை நாம் முன் சென்று கடக்க வேண்டியிருக்கும். பையை பத்திரமாக வைத்துக் கொள் என்றான் ஷபீர்.
பையில் இருப்பது என்னவென்று தெரிந்தால் அவர்கள் விநாயகரை மறந்து விடுவார்கள் இல்லையா?
ஆமாம். அதோடு நம்மையும் அவர்கள் தாக்க வாய்ப்பிருக்கிறது. நாம் சிவன் கோவிலை அடையும் வரை கவனமாக இருக்க வேண்டும்.
கடைசியாகச் சென்று கொண்டிருந்த சிறுவர் கூட்டம் ஒன்று இவர்களுக்கு எதிரே வந்து கொண்டிருந்தது. எல்லோரும் தலையில் காவி நிறமுடைய துணியைக் கட்டியிருந்தார்கள். அவர்களில் சற்று வயது அதிகமுடைய சிறுவன் இவர்கள் இருவரையும் பார்த்துக் கொண்டே மற்றவர்களிடம் ஏதோ சொல்ல, அவர்களது நடையில் வேகத்தை அதிகரித்துக் கொண்டு இருவரையும் நெருங்கிக் கொண்டிருந்தனர்.
ஷபீருக்கு இதயம் படபடத்தது. கால்களில் சுருக் சுருக் கென்று ஏதோவொன்று பாய்ந்து அவனது நடையை பாதித்தது. பிலாலின் கைகளை அவன் இறுக்கிப் பிடித்துக் கொண்டான்.
பாரத் மாதா கீ ஜே
பாரத் மாத்தா க்கீ ஜேய்
பரத் மத்தா கீ ஜேய்
என்று பலவாறாக கோஷங்கள் எழ, இவர்களை சுற்றி வளைத்தது அந்த சிறுவர் கூட்டம்.
அப்போது தான் பிலாலுக்கு ஒரு யோசனை வந்தது. பிலால் பாரத் மாதா கீ ஜே என்று அடித் தொண்டையிலிருந்து கத்தினான். பதிலுக்கு பாரத் மாதா கீ ஜே என்று ஆர்ப்பரித்தது அந்தக் கூட்டம். அவர்கள் அகன்ற போது டேய் இவனுங்க இந்துதான் போலடா என்று மழலை அகன்று கொண்டிருந்த ஒரு குரல் சொன்னதை பிலால் கவனித்தான்.
நல்ல வேளையாக தப்பித்தோம் என்றான் ஷபீர்.
சிவன் கோவிலைத் தாண்டும் வரைக்கும் எதையும் உறுதியாகச் சொல்ல முடியாது பிலால் தன் பதற்றத்தை வெளிக்காட்டாமல் கூறினான்.
அவர்கள் கிடைக்கின்ற இடைவெளிகளை எல்லாம் பயன்படுத்திக் கொண்டு முடிந்த வரைக்கும் வேகமாக நடந்தார்கள். யாரேனும் சந்தேகப்பட்டுவிடக்கூடாது என்று அவ்வப்போது பாரத் மாதா கீ ஜே என்று கத்தினர். அவர்கள் சிவன் கோவிலை அடைந்தபோதுதான் ஊர்வலம் மசூதியைத் தாண்டி சில அடிகள் வந்திருந்ததைப் பார்த்தான் பிலால்.
கோவிலுக்கு அருகிலிருந்த தெருவுக்குள் திரும்பி இடதுப் பக்கம் இரண்டாவது சந்தை அடைந்து வலப்பக்க வரிசையில் மூன்றாவதாக இருந்த அவர்களுடைய வீட்டுக்குள் நுழைந்தனர்.
பிலால் கை, கால்களைக் கழுவிகொண்டு வந்து பார்த்தபோது அக்கா வீட்டில் இருந்து கொடுத்து விடப்பட்டிருந்த கட்டைப் பையிலிருந்த இரண்டடுக்கு டிபன் கேரியரைத் திறந்து மட்டன் பிரியாணியை ஒரு வெட்டு வெட்டிக் கொண்டிருந்தான் ஷபீர்.
நல்ல வேளை. எங்கே அவர்களில் யாரேனும் வாசனை பிடித்து விடுவார்களோ என்று பயந்தேன் என்றவாறே டிபன் கேரியரை நெருங்கினான் பிலால்.

No comments:

Post a Comment