Wednesday, July 12, 2017

மன்னிப்புக் கடிதம் - சிறுகதை - சத்யா


அன்பார்ந்த தலைமைக்குழு சகோதரர்களுக்கு, ஆண்டவர் உம் அனைவரோடும் இருப்பாராக. நான் பொதுவெளியில் நமது திருச்சபைகளின் தலைவர் குறித்தும், அவரது செயல்பாடுகள் குறித்தும் விமர்சித்ததற்காக என் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு, பங்குத் தந்தையாகிய என்னை பதவியிறக்கம் செய்து கிராமங்களுக்கு சென்று ஊழியம் செய்யும் சுவிசேஷகனாக மாற்றியிருப்பதாக தங்கள் அறிக்கை மூலம் அறிந்தேன். என்னுடைய செயலுக்கு வருத்தம் தெரிவிக்கும் பட்சத்தில் நடவடிக்கை மறுபரிசீலனை செய்யப்படும் என்பதையும் தங்கள் கடிதம் வலியுறுத்தியிருந்தது. நான் எந்த இடத்திலும் அமைப்பின் தலைமையைக் குறிப்பிட்டு எந்த விமர்சனமும் வைக்கவில்லை, மேலும் என் விமர்சனம் எந்தவிதத்தில் தலைமையைக் குறிப்பிடுவதாக தலைமைக்குழு கருதுகிறது என்பதை விளக்கக் கூறி எனக்கு அனுப்பப்பட்ட, காரணம் விளம்பு (show cause) கடிதத்திற்கு நான் அனுப்பிய பதிலுக்கு எனக்கு எந்த விளக்கமோ, பதிலோ அளிக்கப்படவில்லை.
ஒருவேளை நான் திருச்சபையின் தலைவரை விமர்சனம் செய்திருந்தது உண்மையாக இருப்பின் என்செயல் எந்த வகையில் அமைப்பின் விதிமுறைகளை மீறியது? ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவைத் தவிர இப்பரந்த உலகிலே அனைவரும் விமர்சனங்களுக்கு உட்பட்டவர்கள்தானே? அப்படி இருக்க தலைவர் எப்போது விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவரானார்? மேலும் நான் தலைமை மீது வைத்த விமர்சனம் என்ன? விதிமுறைகளை மீறி சாதிய மனப்பான்மையுடன் நடந்துகொள்கிறார் என்பதுதானே? அதுகுறித்து திருச்சபையின் தலைமைக்குழு எப்போதேனும் விசாரணை நடத்தியதுண்டா? சக மனிதனை வேறுபாடின்றி நடத்த மறுப்பவன் திருச்சபைகளின் தலைவராகவோ, பங்குத் தந்தையாகவோ ஏன் ஒரு கிறிஸ்தவனாக இருக்கக்கூட தகுதி இல்லாதவனாயிற்றே? இவை போகட்டும், என் செயலுக்கு வருத்தம் என்ற பெயரில் மன்னிப்பை கேட்கச் சொல்லி தலைமைக்குழு பரிந்துரைத்திருக்கும் பட்சத்தில் ஆண்டவராகிய தேவனின் சபையிலே, மனசாட்சிக்கு பணிந்து, என் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவினிடம் மன்றாடி இந்த மன்னிப்புக் கடிதத்தினை எழுதிகிறேன்.
சகோதரர்களே, 80களின் தொடக்கத்தில் என் கல்லூரி படிப்பினை முடித்துவிட்டு கல்லூரியில் பாடம் கற்றுக்கொடுத்த ஆசானால் கிழக்கத்திய பழமைவாத பிரிவையும், ரோமன் கத்தோலிக்க பிரிவையும் புறந்தள்ளி மறுமலர்ச்சிமிக்க புரொட்டஸ்டண்ட் பிரிவினையும் ப்ரொட்டஸ்ட் செய்து வெளியேறிய இந்தத் திருச்சபை பற்றி அறிந்துகொண்ட நான், தினமும் பாவத்திலே கிடந்தது உழலும் அடித்தட்டு மக்களுக்கான உண்மையான ஜீவ பாதையைக் காட்டும் நோக்கத்திலே அந்த மக்களுக்கான உண்மையான தேவ பயணத்தினை ஏற்பாடு செய்யும் நமது திருச்சபையின் விசுவாசியான எனது பயணத்தில் அழுக்குக் கோவணத்தோடு விவசாயப் பணிகளை செய்துகொண்டிருந்த இரு ஊழியர்களைக் கண்டேன். ஆண்டவராகிய இயேசுவின் மகிமையை அப்போதுதான் தெரிந்துகொண்டேன் சகோதரர்களே, நாள் முழுதும் உழைத்துக் களைத்த அந்த சகோதரர்கள், இரவு நேரத்திலே தங்கள் குடிசையில் ஒற்றை சிம்னி விளக்கிலே புனித பைபிளைப் படித்து தம்மைச் சுற்றியிருந்த மக்களின் துயருக்காக ஆண்டவரிடம் மன்றாடிய அந்த நொடியிலே நான் முடிவு செய்தேன், எனது வாழ்க்கை அவர்களைப்போன்றுதான் இருக்கப்போகிறதென்று. அந்த காலகட்டத்தினை இப்போதுள்ள தலைமைக்குழு சகோதரர்களில் பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை, சிலர் அந்த காலத்திலே பிறந்தவர்கள்கூட இல்லை. ஆண்டவரின் ஊழிய வாழ்வுக்கு என்னை அர்ப்பணித்த வேளையிலே எனக்கு கொடுக்கப்பட்ட சுயவிவர பட்டியலில் சாதியின் பெயர் இருந்தது. அதை நிரப்பிட வேண்டிய அவசியமில்லை என்று சொன்ன சகோதரர்களிடம் நான் சொன்னேன், ‘திருச்சபையிலும், ஆண்டவரிடமும் நான் எதையும் மறைப்பதில்லை’ என்று, அந்த வார்த்தைகளுக்காக இப்போது அவர்களிடம் மன்னிப்புக்கோருகிறேன்.
ஒரு பத்து வருடங்களில் என்னை கோடம்பாக்கத்துத் திருச்சபைக்கு பங்கு தந்தையாக திருச்சபை அனுப்பியது, அப்போது ஒரு புதிய சிறுவன் அதைக்குறித்து காரசாரமாக தலைவரிடம் விவாதித்ததை தற்செயலாக கேட்டேன், அப்போது தலைவர் கூறிய வார்த்தைகள் இன்னும் என் ஹிருதயத்தில் உள்ளன, ‘குப்பத்திலிருந்து வந்தவன கோடம்பாக்கத்துக்கு எதுக்கு அனுப்புறேன்? ஒன்னு கரைஞ்சு போவான், இல்ல காணாம போவான்’. நான் கதவைத் திறந்து உள்ளே வரவும் பேச்சு மாறினாலும் அந்த சிறுவன்தான் இப்போதைய தலைவர் கேலிடா சாமுவேல் (Kelitah Samuel) என்பதை உங்களுக்கு சொல்ல வேண்டியதில்லை. அப்போது சிறப்பாக செயல்பட்டாலும் எத்தனை விசுவாசிகள் வந்தாலும் எனது தேவாலயத்தில் சுவிசேஷ கூட்டங்களையும், உரைகளையும் நிகழ்த்தத் தலைவர் வந்ததே இல்லை. அந்த கட்டத்திலே ஓட்டுரிமை பெற்ற என் சாதிமார் பலர் என்னிடம் வந்து ‘சகோதரர், நீங்கள் சொல்லுங்கோ, உங்களுக்காய் சேவகம் பண்ணுவோம், நாம் அமைப்பின் தலைமையை கைப்பற்றுவோம், நம்முடே சாதிமார்தான் தேவாலயங்களில் அதிகமுண்டு’ என்று சொன்னபோது, அதை மறுதலித்து, ‘தேவனுக்கு சேவகம் செய்யுங்கோ, அன்றி மனிதனுக்கு சேவகம் செய்யாதிருங்கள்’ என்று கூறினேன். அதற்காக அந்த சகோதரர்களிடம் மன்னிப்புக்கோருகிறேன். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தேடாதிருங்கள், உங்கள் தலைமைக் குழுவில் மட்டுமல்ல, அமைப்பை விட்டே பிரிந்து தனியாய் சேவகம் செய்கிறார்கள் அந்த சகோதரர்கள்.
பிந்தைய காலகட்டத்திலே அமைப்பின் மாதாந்திர பிரசுரமாகிய ‘தேவனின் அப்ப’த்தை தயாரிக்கும் பணி என்னிடம் நிறுவப்பட்டது. அந்த காலகட்டத்திலே தேவனுடைய கிருபையாலே பைபிள் வாசகங்களின் கதைகளை எழுதவும், தலைமையின் பேச்சுக்களை மொழிபெயர்க்கவும் என என் பெரும் நேரங்களை பதிப்பகத்திலேயே செலவிட்டேன். குடும்பத்தினையும் குழந்தைகளையும் கூட மறந்து தேவனின் ஊழியதிலேயே இருந்த என்னை எந்த காரணமுமின்றி பெங்களூருக்கு இடமாற்றம் செய்தது திருச்சபை நிர்வாகம். மக்கள், சொந்தம், பாஷை எல்லாம் மாறிய சூழலில், என் ஜீவனும் மனுஷியுமாய் இருந்தவளைப் பிரிந்து தனியாக வேலை பார்த்தேன். குழந்தையின் படிப்புக்காய் கொஞ்ச காலம் மட்டும் என்னைப் பிரிந்து இருந்தவள், பின்பு மொத்தமாய்ப் பிரிந்து போனாள். அப்போது ஏற்பட்ட விபத்தில் நான் சில காலம் ஓய்வெடுக்க, என்னை மாற்றம் செய்து என் பதவியைப் பிடுங்கி பரிபூரண சந்தோஷமடைந்தீர்கள். அப்போதும் என் வலி, பிரிவு தனிமை அனைத்தையும்விட தேவனுக்கு மண்டியிட்டு பிரார்த்திக்க முடியாததை எண்ணியே நான் அழுதேன், அந்த நிலையிலும் என்னைப் பார்க்க வராத என் மனுஷி கடிதம் மட்டும் அனுப்பினாள், அவள் என்னைப் பிரிந்ததற்கு அமைப்பு நிர்பந்தமே காரணமென்று. அப்போதும் அவளை நம்பாமல் தேவாலயங்களின் கூட்டமைப்பையே நம்பினேன். அதற்காக அவளிடம் இன்று மன்னிப்புக்கோருகிறேன்.
சுகவீனம் தேறி வந்த என்னை பெங்களூரிலிருந்து ஹைதராபாத்துக்கு மாற்றினீர்கள், அங்கே கன்னியாஸ்திரிகளின் சிறப்பு பூஜையை என் முயற்சியாலும் தேவனின் கருணையாலும் நடத்தினேன், தேவனின் கருணை மீதான கர்வத்தோடு கூறுகிறேன் சகோதரர்களே, அப்படி கன்னியாஸ்திரிகளே நடத்திய சுவிசேஷ கூட்ட பூசை போல இன்றுவரை எங்கும் நடைபெற்றதில்லை. அதையும் மறுதலித்தீர்கள், எந்த செய்தியும் பிற பகுதி அமைப்பு சகோதரர்களிடம் செல்லாமல் பார்த்துக்கொண்டீர்கள். பிறிதொரு நாளில் பக்கத்திலுள்ள கிராமத்திலே ஈடான் தோட்டத்து விஷம் கலந்த நீரை பருகினதாலே 87 பெண்கள் கர்பப்பையை இழந்த செய்தி கேட்டு அங்கே போனேன். சாத்தானிண்ட பிடியிலும் சனாதன செம்பூதங்களின் பிடியிலும் சிக்கித் தவித்த அந்த மக்களிடம், தேவ மகிமையைப் பரப்பினேன். அவர்களுடே மறுவாழ்வுக்கு அமைப்பின் மத்திய நிதியின் பங்கினைக் கேட்டேன், கடைசி வரை மத்தியக்குழு அதை எனக்கு அனுப்பவே இல்லை. சுகபோகமாக வெள்ளிக்கிண்ணத்திலே ஒயினருந்தும் தலைவருக்கும், அவர் பிள்ளை, மனைவிமார்களுக்கும் அந்த ஏழை ஜனங்களின் கஷ்டம் எப்படி தெரியும்? உங்களைப் பொறுத்தவரை அந்த வேலைகள் தேவையற்றது, பலன் தராதது, உருப்படியில்லாதது, உபயோகமற்றது. கடைசியில் என்ன நடந்தது தெரியுமா சகோதரர்களே? எந்த உதவியும் கிட்டாமல் போக, அந்த மக்கள் கொஞ்சம் கொஞ்சமாய் பிரிந்து ஆண்டவருக்குத் தூர தூரமாய்ப் போனார்கள். அந்த மக்களிடத்திலே மன்னிப்பைக் கேட்டுக்கொள்கிறேன்.
பின்பு ஹைதராபாத் பல்கலைக்கழகத்திலே ஞாயிற்றுக் கிழமைகளில் சுவிஷேச கூட்டங்கள் நடத்தி வந்தேன். பக்தியோடும் சிரத்தையோடும் கலந்துகொண்ட நூற்றுக்கணக்கான மாணவர்களைக் கண்டேன், மிகச்சிறந்த இரண்டு மாணவர்கள் ஆரோனும் (Aaron), பெந்தபோலிஸ்ராஜனும் (PentapolisRajan) தேவனுடைய ஊழியத்துக்காக தங்களையே கொடுக்க முன்வந்தனர். இதுவரை எங்குமே கேட்டிராத வகையிலே ஒரு மாதம் தொடர் சுவிஷேச கூட்டங்களையும் தேவ நாடகங்களையும் நடத்தினர். அந்த மாபெரும் செய்தி தானாகவே நாடு முழுவதும் செய்தியாக பரவினாலும், ‘தேவனுடைய அப்ப’த்திலே ஒற்றை வரி செய்தியாக முடித்துக்கொண்டீர்கள். அதுமட்டுமா? பலநாட்கள் கெஞ்சியும் தலைவர் எந்த சுவிசேஷ கூட்டத்திற்கும் தலைமையேற்று உரையாற்ற வரவில்லை, அதற்கு எந்த உருப்படியான காரணமும் தெரியவில்லை, என் தொடர்ச்சியான அழைப்புகளால் எரிச்சலடைந்த ஒரு மூத்த சகோதரர் சொன்னார், 'விமானத்தில் முதல் வகுப்பில் மட்டுமே தலைவர் பயணிப்பார்' என்று. ரயிலில் இரண்டாம் வகுப்பு பயணத்துக்கே என்னுடைய பணம் போதாமல் இருக்கையில் உங்களை அழைக்கும் திட்டத்தை நான் கைவிட்டேன். இருப்பினும் தொடர் நிகழ்ச்சிகளால் ஏற்பட்ட அழுத்தம் காரணமாக  ஒரு சுவிஷேச கூட்டத்துக்கு வந்த தலைவர் அருட்தந்தை கே.எஸ்.ஸின்  மகன் அருட்சகோதரர் பார்திமியஸ் (bartimeus) அந்த புதிய சகோதரர்களை ஊக்குவிக்காமல் அவர்களின் குறைகளை மட்டும் சுட்டிக்காட்டி திட்டிவிட்டுப்போனார். வெறுத்துப்போன அந்த மாணவ சகோதரர்கள் திருச்சபையினைவிட்டு விலகி நின்றாலும் தேவ மகிமையை உணர்ந்தவர்களாக அதைப் பரப்புபவர்களாகவே இருந்தனர். அந்த நிலைமையில் பெந்தபோலிஸ்ராஜனின் மனைவி ஜன்னெட் மெர்சி ப்யுலா (Janet Mercy Beula) தன்னுடைய பி.எச்,டியை முடித்து, கல்லூரி வேலைக்கு நமது திருச்சபைகளின் கட்டுப்பாட்டிலே செயல்படும் பிரசித்திபெற்ற கல்லூரியிலே விண்ணப்பித்தாள். தகுதியிலும் அனுபவத்திலும் முன்னிலையில் இருந்த அவளை நிராகரித்து அவளுக்கு பல மடங்கு பின்னால் இருந்த ஒருத்தியை தேர்ந்தெடுத்தீர்கள். ஒரே காரணம் அவள் உங்கள் சாதிக்காரி என்பது மட்டுமே. கடைசிவரை திருச்சபையின்மீது மாறாத நம்பிக்கைகொண்டு அவளை விண்ணப்பிக்கச் செய்ததற்காக அவளிடம் நான் உளப்பூர்வமாய் மன்னிப்புக்கோருகிறேன்.
கடைசியாக ஒன்று, சில ஆண்டுகளுக்கு முன்பு ஆந்திராவில் நான் பங்குத்தந்தையாக இருக்கையிலே, ஒரு இளம்பெண் பாவ மன்னிப்புக்கோர என்னிடம் வந்தாள். அவள் வேறு வழியின்றி விபச்சாரத்தைத் தனக்கான தொழிலாகக் கொண்டவள் என்பதை அவளின் மன்னிப்பு கோரிக்கைகளின் மூலம் அறிந்துகொண்டேன். பாவத்தில் உழலும் நிலையிலும் அவள் வாரம் தவறாமல் தேவாலயக் கூட்டங்களுக்கு வருவதும், கண்ணீர் சிந்தி அழுவதுமாயிருந்தாள். அவளுடன் பேசியதில், அவள் கிராமமே இப்பாவத்திலே கிடந்து உழலுவது தெரிந்தது. தங்கள் கிராமத்தின் மறுவாழ்வுக்கு ஏதேனும் உதவுமாறு அவள் என்னை மன்றாடிக்கொண்டாள். அவள் தனக்காக கேட்கவில்லை, அவ்வாறு கேட்டிருந்தால் அவளை திருச்சபையை சுத்தம் செய்யும் பணியிலாவது அமர்த்தியிருப்பேன். அப்போதாவது அவளுக்கு திருச்சபையுடன் தன் ஆவியையும் சுத்தம் செய்யும் வாய்ப்பு கிட்டியிருக்கும். ஆனால் அவளோ தன் ஒட்டுமொத்த கிராமத்தையும் அந்த இழிதொழிலிலிருந்து விடுவிக்கக் கோரினாள். அதற்கு உதவுமாறு தலைமைக்கு பல கடிதங்கள் எழுதியபின், ‘அமைப்பு மூன்றாந்தர மக்களைக் குறித்து சிரமப்படுவதில்லை’ என்று பதில் கிடைத்தது. இப்போது கூறுகிறேன் சகோதரர்களே, ‘பிறருக்காய் சிரமப்படுகிறவன் பாக்கியவான்’ என்ற இயேசு கிறிஸ்துவின் கூற்றுக்கு இலக்கணமாய் திகழ்ந்த அந்த விபச்சாரியே சிறந்த கிறிஸ்துவச்சி. உங்கள் மத்தியக்குழுவிடம் நான் கேட்கவேண்டிய மன்னிப்புகளைவிட அவளிடம் ஆயிரம் மடங்கு அதிக மன்னிப்புக்....
“அச்சா....” சத்தம் கேட்டு எழுதிக்கொண்டிருந்த கடிதத்தை நிறுத்திவிட்டு நிமிர்ந்து பார்த்தான், இப்போது அவன் கேரளாவிற்கு இடமாற்றம் செய்யப்பட்டிருந்தான். அவனது அறைக்கு வெளியில் கறுத்து சுருங்கிப்போன முகத்துடனும் வயது மூப்பில் கூனிப்போன முதுகுடனும் இடுப்பில் பேத்தியை வைத்துக்கொண்டு வெள்ளை நிறச் சேலையுடன் எஸ்தர் நின்றிருந்தாள். முன்னறையில் எழுதிக்கொண்டிருந்த அட்டையை எடுத்துவைத்து, பேப்பர் வெயிட்டை அதன்மேல் வைத்துவிட்டு “சொல்லுதாயி.. என்ன இந்நேரத்துல?” என்றான்.
“அச்சா.. நம்ம தங்கம்மா பேத்தி இருக்குல்ல, அது பைபிள படிச்சுட்டு என்னென்னமோ சந்தேகம் கேட்டுட்டு இருக்கு, எனக்கு ஒன்னும் புரியல, நீ வந்து என்னன்னு பாக்குறியா?” என்றாள்.
“குழந்தைகளுக்கு சந்தேகம் வரத்தான் செய்யும், நான் வந்து விளக்குறேன். அவளை மாதிரி சூட்டிகையான பெண், தேவனைப் பற்றி தெரிந்துகொண்டால் நாளைக்கு அவளே எல்லாருக்கும் சொல்லிதருவா. அதுசரி நீ காலையில வர வேண்டியதுதான?” என்றான் பத்தரையை நெருங்கிக்கொண்டிருந்த கடிகாரத்தைப் பார்த்தபடி.
“இல்ல அச்சா, காலையில வெள்ளென வேலைக்கு போவணும், இப்ப தான் வேலை முடிச்சு வந்தேன், அப்படியே சொல்லிட்டு போலாம்னு வந்தேன்”
“ஒரு போனாவது பண்ணிருக்கலாம்ல?”
“போனெல்லாம் எனக்கு பண்ணத் தெரியாது அச்சா.. சும்மா அப்படியே ஒரு எட்டு நடந்து வந்துட்டேன்” ஐந்து கிலோமீட்டர் தூரத்தை சாதாரணமாக சொன்னவள், “நீ நாளைக்கு தங்கம்மா பேத்திய போய்ப்பாரு, நம்ம வீடு இருக்குல்ல அதுலருந்து கெழக்கால அஞ்சாவது வீடு, நான் வேலைக்கு போயிடுவேன்” என்று குழந்தையை இடுப்பில் தூக்கி வைத்துக்கொண்டு நடக்க ஆரம்பித்தாள்.
அவளைத் தடுத்து, இவன் பைக்கில் கொண்டுபோய் விட்டுவிட்டு வீட்டுக்கு வந்தான். தங்கம்மா தூங்கியிருந்தாலும் வீட்டை அடையாளம் காட்டியிருந்தாள் எஸ்தர். “அவகூட பேசுறது இல்ல அச்சா. போனவாரம் தண்ணி எடுக்கையில சின்ன சண்டையாப் போயிட்டு, பைபிள்ல சந்தேகம்னு வரும்போது அத உன்கிட்ட உடனே சொல்லணும்ல அதான் வந்தேன். இந்த ஞாயித்துக்கிழம திருச்சபை கூட்டத்துலதான் அவகிட்ட சமாதானம் சொல்லணும்” என்று சொல்லிவிட்டு வெள்ளந்தியாய் அவள் சிரித்தது இவன் பின் மண்டையில் யாரோ சம்மட்டியால் அடித்ததுபோல் இருந்தது.
முன்னறையில் அட்டைமீது வைக்கப்பட்ட கடிதத்தைப் பார்த்தபடி வெகுநேரம் உட்கார்ந்திருந்தான். “இந்த ஞாயித்துக்கிழம திருச்சபை கூட்டத்துலதான் அவகிட்ட சமாதானம் சொல்லணும்” என்ற எஸ்தரின் வார்த்தைகள் திரும்பத் திரும்ப இவன் காதில் ஒலித்தபடி இருந்தன. இன்னொருமுறை லெட்டரை எடுத்து படித்துப்பார்த்தான். அதைக்கிழித்துக் குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு புதியதாக ஒரு வெள்ளைக் காகிதம் எடுத்து எழுத ஆரம்பித்தான்.
“அன்பார்ந்த தலைமைக்குழு சகோதரர்களுக்கு, ஆண்டவர் உம் அனைவரோடும் இருப்பாராக. நம் அமைப்பின் தலைவரைப் பொதுவெளியில் விமர்சனம் செய்தது அமைப்பு விதிமுறைக்கு எதிரானது என்று அறிந்துகொண்டேன். அதற்காக தேவனின் முன்னிலையில் உளமார்ந்த மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். எனவே இக்கடிதத்தினை ஏற்றுக்கொண்டு என் மீதான நடவடிக்கையை மறுபரிசீலனை செய்யுமாறு உங்கள் அனைவரிடமும் கேட்டுக்கொள்கிறேன், தேவனாகிய இயேசு கிறிஸ்துவின் சமாதானத்தினை உம் அனைவரோடும் பகிர்ந்துகொள்கிறேன்”
இப்படிக்கு
ஆண்டவரின் சேவகத்தில்
உண்மையுள்ள…

No comments:

Post a Comment